வெளியிடப்பட்ட நேரம்: 08:27 (26/06/2017)

கடைசி தொடர்பு:08:27 (26/06/2017)

கடவுளுக்கு எதற்கு காணிக்கை? - ரம்ஜான் சிறப்பு கட்டுரை-8

''நோன்பு உடல் நலத்துக்கு நன்மை தருவதோடு சுயக் கட்டுப்பாட்டையும் தருகிறது. நேர ஒழுங்கை ஏற்படுத்துகிறது. கீழ்ப்படியக் கற்றுத்தருகிறது. சமத்துவம் போதிக்கிறது .மனித நேயம் பயிற்றுவிக்கிறது. பசியறிவித்து வாரி வழங்கச் சொல்கிறது'' என்கிறார் வி.எஸ்.முஹம்மத் அமீன். ரம்ஜான் நோன்பின் மனித நேயப் பாடங்கள் என அவர் மேலும் சொல்வதைக் கேளுங்களேன்.

ரம்ஜான்

வாழ்வியல் தத்துவங்களை (Philosophy of life) இஸ்லாம் வகுத்துத் தந்துள்ளது. ஆனால், அவை யாவும் வெற்றுத் தத்துவங்களாக காகிதங்களில் கால் நீட்டி உறங்கிக்கொண்டிருக்கவில்லை. இஸ்லாமிய நெறிமுறைகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படுபவை. ஆதிகாலம் தொட்டு அழிவுகாலம் வரை பின்பற்றும் சாத்தியமுள்ளவை.

இஸ்லாமிய வழிகாட்டுதல்கள் அனைத்திலும் மனிதநேயம் ஊடுபாவாக இழையோடிக் கொண்டிருக்கின்றன. மனிதநேய மாண்பை மண்ணில் மலரச் செய்ய வழிபாடுகள் மனிதனுக்கு வழிகாட்டுகின்றன.

பசித்தவனுக்கு உணவளிக்கச் சொல்லுகின்ற இஸ்லாம் அந்தப் பசியின் அவதிகளை, பசி ஏற்படுத்துகின்ற மயக்கத்தை, தொண்டை வறளும் தாகத்தை, தாகத்தின் தவிப்பை அதன் களைப்பை மனிதனுக்குள் விதைக்கிறது.

தொழுகை

நோன்பு வைப்பதன் மூலம் பசியென்றால் இதுதானப்பா! இந்தப் பசி வந்தால், எப்படி பதைபதைக்கின்றாய். இதுபோலத்தான் உன் சகோதரன் பசித்துக்கிடக்கிறான் அவனுக்கு உணவளி எனக் கட்டளையிடுகிறது.உணவளித்தலை வெற்றுத் தத்துவமாக உதிர்க்காமல் அதை உணர்த்தி நடைமுறைப்படுத்துகிறது.

செல்வச் செழிப்பில் மிதக்கும் ஆரோக்கியமான மனிதன் ஏதோ ஒருகாரணத்தால் ஒருவேளை பசித்திருக்கலாம். ஒரு நாள் முழுவதும் பசித்திருக்க அவனுக்குச் சூழல் வாய்ப்பதில்லை. ஒரு மாதம் பசித்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால், இஸ்லாமியச் செல்வந்தர்களுக்கு மட்டுமே இத்தகைய பட்டினி வாய்க்கிறது.இத்தகைய செல்வந்தர்களின் தானங்கள் உணர்ந்தளிக்கப்படுபவை. ஆனால், பசியறிவதற்காக மட்டுமே நோன்பு கடமையாக்கப்படவில்லை.அமீன்மனிதநேயக் கூறுகள் உடைபடுகின்ற வாயில்களையும் நோன்பு அடைக்கின்றது. ஒருவரை இழிவாகக் கருதுதல், பேசுதல்,கோள் மூட்டுதல், புறம் பேசுதல் போன்ற சைத்தானியச் செயல்களுக்கு விலங்கு பூட்டப்படுகின்றன. பசியறிதல், உணவளித்தல், உணர்வுகளைக் காயப்படுத்தாதிருத்தல் என்பதோடு அல்லாமல் மனிதநேயம் மலர வேண்டுமெனில் வறுமையை அகற்றவேண்டும். அதற்காக வாரிவழங்க வகை செய்கிறது இம்மாதம்.

இந்த ரமலான் மாதம் நன்மைகளுக்கான 'சலுகை மாதம்' (offer) மற்ற மாதங்களை விட இம்மாதத்தில் செய்யும் தர்மத்துக்கு ஒன்றுக்கு பத்து முதல் எழுநூறு மடங்கு நன்மைகள் கிடைக்கின்றன. எனவே, இது 'கருணையின் மாதம்' என்று குறிப்பிடப்படுகிறது.

இப்னு அப்பாஸ் என்ற நபித்தோழர் கூறுகின்றார், ‘ரமலான் மாதம் வந்துவிட்டால், நபி(ஸல்)அவர்கள் தான தர்மங்களை வாரி வழங்குவார்கள். எந்தளவுக்கென்றால் தடையில்லாமல் வேகமாக வீசும் காற்றுக்கு ஒப்பானதாக அவை இருக்கும்'.

பணக்காரர்களையெல்லாம் வாரிவழங்கும் குணக்காரர்களாக மாற்றும் மந்திரம் இதுதான். அதனால்தான், ஆண்டுக்கு ஒருமுறை வழங்கும் கட்டாயக் கொடையான 'ஜகாத்'தை வழங்க இம்மாதத்தையே பெரும்பாலோர் தேர்ந்தெடுக்கின்றனர்.

பேரீச்சைகடவுளுக்கு எதற்குக் காணிக்கை?

'ஜகாத்' என்பதை அடிக்கடி கேள்விப்பட்டிருக்கின்றோம். இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ஜகாத். ஜகாத் என்றால் 'தூய்மை' என்று பொருள். தனது செல்வத்திலிருந்து அடிப்படைத் தேவைகள் போக, எஞ்சியதிலிருந்து இரண்டரை சதவிகிதம் தேவையுள்ளவர்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் கட்டாய தானமாக மனமுவந்து கொடுப்பதுதான் ஜகாத் ஆகும்.

85 கிராம் தங்கம் அல்லது 595 கிராம் வெள்ளி அல்லது அதற்குரிய தொகையை வைத்திருப்பவர் அதில் இரண்டரை சதவிகிதம் 'ஜகாத்' கொடுக்கவேண்டும். இத்தகைய வசதியுள்ள ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் 'ஜகாத்' கட்டாய கடமையாகும். ஜகாத் கொடுக்கத் தகுதியிருந்தும் கொடுக்காதவர் இறைக்கட்டளையை மீறிய பாவத்துக்குரியவராவார். கடும்தண்டனைக்கு உரியவராவார்.

ஜகாத் யாருக்கெல்லாம் கொடுக்கப்பட வேண்டும் என்று பட்டியலிடுகிறது பின்வரும் திருமறை வசனம்:

‘இந்த தானதர்மங்களெல்லாம் ஏழைகள், வறியவர்கள், இந்த தானதர்மங்களை வசூலிக்கவும், பங்கிடவும் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் உள்ளங்கள் இணக்கமாக்கப்பட வேண்டியவர்கள் ஆகியோருக்கும், அடிமைகளை விடுவிப்பதற்கும், கடனாளிகளுக்கும், இறைவழியில் செலவு செய்வதற்கும், பயணிகளுக்கும் உரியனவாகும்.’ -திருக்குர்ஆன் 9:60

செல்வம் செல்வந்தர்களிடமிருந்து வறியவர்களுக்குச் செல்லும் மகத்தான பொருளாதாரத் திட்டமிது.
மேற்கூறப்பட்ட வசனத்தைப் பாருங்கள்! இறைவன் தனக்குக் காணிக்கை செலுத்தும்படிக் கூறவில்லை. அதனால்தான் மக்காவில் கோடிக்கணக்கான மக்கள் கூடும் 'க அபா' என்னும் இறையில்லத்தில் உண்டியல் இல்லை. ஏழை ஒருவனுக்கு உணவளிப்பதன் மூலமே இறை திருப்தி கிட்டும்.

அல்லாஹ் கூறுவான். ‘ஆதத்தின் மகனே! நான் பசியாக இருந்தேன். எனக்கு நீ உணவளிக்கவில்லையே!’ அதற்கு மனிதன் ‘என் அதிபதியே! நான் எப்படி உனக்கு உணவளிக்கமுடியும்? நீ அகிலங்களுக்கெல்லாம் அதிபதியாயிற்றே!’ என்று கேட்பான். அதற்கு இறைவன், ‘என்னுடைய இன்ன அடியான் பசியோடு இருந்தார். அவருக்கு நீ உணவளிக்கவில்லை: நீ அவருக்கு உணவளித்திருந்தால் அதன் மூலம் என்னை அடைந்திருப்பாய் என்று நீ அறியவில்லையா?’ என்று கேட்பான்.

தொழுகை

அடியானுக்கு அளிப்பதினால் அதிபதி திருப்தியுறுகிறான். இந்த அடிப்படையில்தான் இஸ்லாம் ஏற்றத்தாழ்வற்ற, வறுமையற்ற சமுதாயத்தை உருவாக்க விரும்புகிறது. அதற்கான பயிற்சிக் களங்கள்தான் இஸ்லாமிய வழிபாடுகளும் கடமைகளும். ஏழைகளுக்குக் கொடுப்பது நல்லது. அதனால் நற்கூலி கிடைக்கும் என்று மாத்திரம் சொல்லாமல் அதனைக் கட்டாயக் கடமையாக்கியுள்ளது. அவ்வாறு கொடுப்பதனால், செல்வம் குறையாது மாறாக வளரும். அதுமட்டுமின்றி செல்வம் தூய்மையாகும் என்றும் சொல்கிறது.
ஒருபுறம் ஏழைகளின் தேவைகளை உணர்த்திட பட்டினிப் பயிற்சி. மறுபுறம் அத்தகைய ஏழைக்குக் கொடுப்பதற்குக் கட்டளை.ஒருபுறம் கொடுக்காவிட்டால், தண்டனை என்ற எச்சரிக்கை. மறுபுறம் கொடுத்தால் நற்கூலி என்ற வெகுமதி. அதுவும் இந்த நோன்பு மாதத்தில் கொடுத்தால், பத்து முதல் எழுநூறு மடங்குவரை நன்மை என்ற ஊக்குவிப்பு. அதனால்தான் ரமலான் மாதம் அருள்மாதமாக, கருணையின் மாதமாக, நற்கூலிகளின் மாதமாக, மன்னிப்பின் மாதமாக மிளிர்கிறது.

நோன்பு உடல் நலத்துக்கு நன்மை தருவதோடு சுயக் கட்டுப்பாட்டையும் தருகிறது. நேர ஒழுங்கை ஏற்படுத்துகிறது. கீழ்ப்படியக் கற்றுத்தருகிறது. சமத்துவம் போதிக்கிறது .மனித நேயம் பயிற்றுவிக்கிறது. பசியறிவித்து வாரி வழங்கச் சொல்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்