துறவிக்கு கோமாளி கற்றுத்தந்த பாடம்! #ZenStory

‘ஜென் என்பது ஓர் ஒழுங்கு முறை. அங்கே நம்பிக்கை அவசியமில்லாதது’ என ஒரு பிரபல வாசகம் உண்டு. ஆங்கில இசையமைப்பாளரும் பாடகரும் பாடலாசிரியருமான டேவிட் சில்வியான் (David Sylvian) பல மேடைகளில் அதிகம் வலியுறுத்திய மேற்கோள் இது. ஜென் தத்துவத்தை ஆழமாக உணர்ந்தவர்களால் மட்டுமே இதன் உண்மையான பொருளை அறிந்துகொள்ள முடியும். ஜென், யாரோ ஒருவர் கற்றுக்கொடுத்துத் தெரிந்துகொள்வதல்ல; அது ஆழ்ந்து உணரப்பட வேண்டியது. ஜென் குருமார்கள் அதற்கான ஆன்மத் தேடலுக்கு வழிகாட்டுகிறவர்களே தவிர, கற்றுக்கொடுப்பவர்கள் இல்லை. 

ஜென்

முழுமையாக ஜென் பௌத்தத்தை உணர்ந்த ஒருவர் அடையும் இன்பத்துக்கு ஈடு வேறு இல்லை. ஆனால், அதை நோக்கியப் பயணம் மிகக் கடினமானது. சற்றுத் தவறாகப் புரிந்துகொண்டாலும், ஜென்னை நோக்கியப் பயணத்திலிருந்து எளிதாக வழிதவறிவிடுவோம். அப்படி வழிதவறிய ஓர் இளம் ஜென் துறவியின் கதை இது. 

சீனாவில் இருந்தார் அந்த இளம் துறவி. புத்த மதம் குறிப்பிடும் தர்மத்தை வெகு தீவிரமாக அனுசரிப்பவர். தர்மம் என்றால், ஒரு மனிதன் கடைப்பிடிக்கவேண்டிய கடமைகள், உரிமைகள், சமூக விதிகள், நடத்தை... என எல்லாம் அடங்கும். புத்த மத ஒழுங்குகள் தனிச் சிறப்பானவை. அதிலும் அவர் துறவறம் பூண்டவர். எனவே அந்த இளம் வயதில் தன் வாழ்வியல் ஒழுங்குகளைச் சீராக அமைத்துக்கொண்டார்.  

ஒருநாள் தன் குருவைப் பார்க்கப் போய்க்கொண்டிருந்தார் அந்த இளம் துறவி. வழியில் ஒன்றைக் கண்டார். அது என்ன என்பது இங்கே அவசியம் இல்லாதது. அது, நவரத்தினக் கல்லாக இருக்கலாம், சாதாரண எருக்க இலையாகக்கூட இருக்கலாம். ஆனால், அது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. இதுவரை அது மாதிரி ஒன்றை அவர் பார்த்ததில்லை. அந்தப் பொருளைத் திரும்பத் திரும்பப் பார்த்தார். நடுக்கத்தோடு லேசாகத் தொட்டுப் பார்த்தார். அதற்கு முன்னர் எங்கேயாவது இதைப் பார்த்திருக்கிறோமா என தன் நினைவுகளைப் பின்னோக்கி நகர்த்திப் பார்த்தார். ஒன்றும் புரிபடவில்லை. அதைக் கையோடு எடுத்துச் செல்லவும் அவருக்குத் தயக்கமாக இருந்தது. அவர் துறவி, இது யாருடையதோ! எனவே அதை அப்படியேவிட்டுவிட்டு, தன் குருவைத் தேடிப் போனார். 

ஜென் குரு

குருவின் இருப்பிடத்துக்கு வந்து அவரை வணங்கினார் இளம் துறவி. பிறகு குருவுக்கு முன்பாக அமர்ந்தார். 

“குருவே... நான் வரும் வழியில் ஒரு பொருளைப் பார்த்தேன்...”

“ம்...” 

“ஆனால், அது என்னவென்று தெரியவில்லை.”

``அதை எடுத்து வந்திருக்கிறாயா?’’

``இல்லை குருவே...’’

``அப்படியானால், அது என்னவென்று எப்படி நான் உனக்குப் புரியவைப்பது?’’ 

இளம் துறவி யோசித்தார். பிறகு, தான் பார்த்ததை எந்தெந்த வழிகளில் விளக்க முடியுமோ, அப்படியெல்லாம் வர்ணித்து குருவுக்குப் புரியவைக்கப் பார்த்தார். எவ்வளவு முயன்றும் அவரால், குருவுக்கு அது எப்படி இருக்கும் என்பதை விளங்கவைக்கவே முடியவில்லை. திடீரென்று ஜென் குரு எழுந்தார். தன் சீடனைப் பார்த்து சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்தார். எந்தப் பதிலையும் சொல்லாமல் அவர்பாட்டுக்கு எழுந்து சிரித்துக்கொண்டே வெளியே போய்விட்டார். இளம் துறவிக்கு குரு ஏன் சிரித்தார் என்பது புரியவில்லை. அவர் மனம் சங்கடப்பட்டது. குரு, சிரித்த காரணம் என்னவென்று தெரியாமல் வருத்தத்தோடு தன் இருப்பிடம் திரும்பினார். 

ஜென் குரு

வீட்டில் இளம் துறவியால் நிம்மதியாகவே இருக்க முடியவில்லை. `குரு ஏன் சிரித்தார்... என்ன காரணம்... நான் என்ன தவறு செய்தேன்... அந்தப் பொருளை வர்ணித்ததில் ஏதாவது தவறு இருந்திருக்குமோ...’ இப்படி ஏகப்பட்ட குழப்பங்கள். அடுத்த மூன்று நாள்களுக்கு இளம் துறவியால் சரியாகச் சாப்பிட முடியவில்லை. தூங்க முடியவில்லை. எதையும் சரியாக யோசிக்கக்கூட முடியவில்லை. நான்காம் நாள் குருவைத் தேடி வந்தார் இளம் துறவி. 

துறவியின் முகம் வாட்டத்தோடு இருந்ததை, பார்த்ததுமே உணர்ந்துகொண்டார் ஜென் குரு. என்ன காரணம் என்று விசாரித்தார். 

“அன்று நீங்கள் என்னைப் பார்த்துச் சிரித்தீர்கள். காரணம் எதுவும் சொல்லாமல் சிரித்தபடி வெளியேறிவிட்டீர்கள். அதனால் என் மனம் சஞ்சலம் அடைந்தது. காரணம் புரியாமல் நான் கடந்த மூன்று நாள்களாக பெரும் அவஸ்தைப்பட்டேன்...’’ 

இதைக் கேட்டதும் குரு சொன்னார்... ``துறவியே உனக்கு என்ன பிரச்னை என்று உனக்குப் புரிகிறதா? நீ ஒரு கோமாளியைவிடக் கீழானவன். அதுதான் உன் பிரச்னை.’’ 

இளம் துறவி அதிர்ச்சியடைந்தார். இப்படி ஒரு திட்டு குருவிடம் இருந்து வரும் என அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. ``மரியாதைக்குரிய குருவே... நீங்கள் சொல்வது என்னை மிகவும் வருத்தப்படவைக்கிறது. எந்தவிதத்தில் நான் ஒரு கோமாளியைவிடத் தாழ்ந்தவன்?’’ 

“ஒரு கோமாளி மற்றவர்கள் சிரிப்பதை அனுபவித்து ரசிக்கிறான். உனக்கோ, மற்றவர்கள் சிரிப்பது தொந்தரவாக இருக்கிறது. அப்படியானால், நீ ஒரு கோமாளியைவிடத் தாழ்ந்தவன்தானே?” 

குருவின் பதிலைக் கேட்டதும் இளம் துறவி சிரிக்க ஆரம்பித்தார். கட்டுக்கடங்காத, நிறைவான சிரிப்பு. அவர் ஞானம் அடைந்துவிட்டதை அந்தச் சிரிப்பு உணர்த்தியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!