வெளியிடப்பட்ட நேரம்: 08:48 (30/06/2017)

கடைசி தொடர்பு:08:48 (30/06/2017)

இறக்கிவைக்க முடியாத சுமை! - ஜென் கதை #ZenStory

‘உங்களை நீங்கள் தெரிந்துகொள்வது என்பது மிகச் சிறந்த வழி. அதன் மூலம், நீங்கள் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளலாம்’ என்கிறார் ஜென் துறவி ஷன்ரியு சுஸூகி (Shunryū Suzuki). இவர், அமெரிக்காவில் ஜென் பௌத்தம் பரவக் காரணமாக இருந்தவர். ஆன்மிகத் தேடல் உள்ளவர்களுக்கு இது மிக ஆதாரமான வாசகம். ஜென் தத்துவம் திரும்பத் திரும்ப நம்மை நாமே உணரச் செய்வதைத்தான் வலியுறுத்துகிறது. அதை உணர்ந்தால் ஆன்மிகத் தேடலுக்கான வழி தெரியும். அந்தக் கடினமான பயணத்தில் நாம் பிறருக்கு உதவுவோம்; பிறரும் நமக்கு உதவுவார்கள். அதே நேரத்தில் நம்மை உணராமல், நம் வழி எதுவென்றே தெரியாமல் போனால், நாம் யாருக்குமே உதவ மாட்டோம்; நமக்கும் யாரும் உதவ மாட்டார்கள். ஜென் பௌத்தம் இந்தத் தத்துவத்தை எளிய கதைகளின் மூலமே அது வலியுறுத்திவிடுகிறது என்பதுதான் ஆச்சர்யம். 

ஜென்

அது ஒரு காலைப் பொழுது. இரு ஜென் துறவிகள் அந்த மலைப் பிரதேசத்தில் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். ஒருவர் வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்தவர்; மற்றொருவர், இளம் துறவி. அவர்கள் செல்லவேண்டிய இடம் இன்னும் வெகு தூரத்தில் இருந்தது. நடையை எட்டிப் போட்டு, வேக வேகமாக நடந்துகொண்டிருந்தார்கள் இருவரும். மலைச்சரிவில் இருந்து இறங்கி வந்தபோது எதிரே ஓர் ஆறு தெரிந்தது. அன்றைக்கு அந்த ஆற்றில் நீர்ப்பெருக்கு அதிகமாக இருந்தது. வெள்ளம் என்று சொல்ல முடியாதே தவிர, எளிதாகக் கடந்துபோய்விட முடியாதபடி அதிகமான நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. ஆனாலும், அன்றைய மாலைக்குள் அவர்கள் ஓர் இடத்துக்குப் போகவேண்டிய சூழல்! 

ஆற்றில் எவ்வளவு நீர் ஓடும் என்று கணக்குப் பார்த்தார் மூத்த துறவி. எப்படியும் நெஞ்சைத் தொடும் அளவுக்கு ஆழம் இருக்கும் என்று அவருக்குப் புரிந்தது. அவர் சற்றும் யோசிக்கவில்லை, ``சரி... போகலாம்’’ என்று இளம் துறவியைப் பார்த்துச் சொன்னார். அப்போதுதான் இளம் துறவி வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. இளம் துறவியின் பார்வை சென்ற திசையில் திரும்பிப் பார்த்தார். அங்கே ஓர் இளம் பெண் நின்றுகொண்டிருந்தாள். அவளும் அவர்களைப்போல ஆற்றைக் கடக்கத்தான் நின்றுகொண்டிருக்கிறாள் என்பது அவருக்குப் புரிந்தது. உடனே அவர் அந்தப் பெண்ணின் அருகே சென்றார். 

ஜென் துறவிகள்

``ஏனம்மா இங்கே நின்றுகொண்டிருக்கிறாய்?’’ என்று கேட்டார் மூத்த துறவி. 

``நான் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனால், ஆற்றைக் கடக்கப் பயமாக இருக்கிறது. எனக்கு உதவி செய்வீர்களா?’’ 

இரைஞ்சும் அவளின் குரல் அவரை என்னமோ செய்தது. அதற்குப் பிறகு அவர் ஒரு கணம்கூட யோசிக்கவில்லை. அவளைத் தூக்கித் தன் தோளில் வைத்துக்கொண்டார். ஆற்றில் இறங்கினார். விடுவிடுவென நீரில் நடந்துபோனார். இதைப் பார்த்துத் திகைத்துப்போன இளம் துறவி அவர்களின் பின்னாலேயே ஆற்றில் இறங்கி நடந்தார். அக்கரைக்குப் போனதும், மூத்த துறவி அந்தப் பெண்ணைக் கீழே இறக்கிவிட்டார். அவள் இருவரையும் வணங்கி, நன்றி சொல்லிவிட்டுத் தன் வழியில் போனாள். பிறகு துறவிகள் இருவரும் தங்கள் வழியில் நடக்கத் தொடங்கினார்கள். 

மௌனமாக மூத்த துறவியின் பின்னால் நடந்துகொண்டிருந்தாலும், இளம் துறவியின் மனம் அவர் நிலையில் இல்லை. மூத்த துறவி அந்தப் பெண்ணைத் தூக்கித் தோளில் வைத்தபடி ஆற்றைக் கடக்கும் காட்சியே நினைவில் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருந்தது. வெகு தூரம் நடந்த பிறகுதான் பெரியவருக்குத் தன்னுடன் வரும் இளையவரின் மௌனத்தை உணர முடிந்தது. `எப்போதும் ஏதாவது சந்தேகம் கேட்டபடி வருவான்... வெகு நேரமாக மௌனமாக இருக்கிறானே!’ என்று நினைத்தார். திரும்பியவர், தன் பின்னால் வந்துகொண்டிருந்த இளம் துறவியின் முகம் வாடியிருப்பதையும் பார்த்தார். ஏதோ ஒரு சங்கடம் முகத்தில் நிலவுவதையும் புரிந்துகொண்டார். 

ஜென் துறவிகள்

“என்ன ஆனது உனக்கு? வெகு நேரமாகப் பேசாமல் வந்துகொண்டிருக்கிறாயே!’’ என்று கேட்டார்.

குருவே... எனக்கு ஒரு சந்தேகம்... அது என்னைக் குழப்பிக்கொண்டிருக்கிறது.’’

“என்ன?” 

“நாம் புத்த துறவிகள். பெண்களைத் தொட நமக்கு அனுமதியில்லை. அப்படியிருக்க, நீங்கள் அந்த இளம் பெண்ணைத் தோளில் தூக்கிக்கொண்டு ஆற்றைக் கடந்து வந்தீர்களே... அது சரிதானா?’’ 

மூத்த துறவி, அவரை ஒரு கணம் உற்றுப் பார்த்தார். பிறகு சொன்னார்... “நான் பல மணி நேரங்களுக்கு முன்பாகவே ஆற்றங்கரையில் அந்தப் பெண்ணை இறக்கிவிட்டுவிட்டேன். நீதான் இன்னமும் அவளைச் சுமந்துகொண்டிருக்கிறாய்...” இப்படிச் சொல்லிவிட்டு, மூத்த துறவி அவர் போக்கில் நடந்து போய்க்கொண்டே இருந்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க