வெளியிடப்பட்ட நேரம்: 18:13 (03/07/2017)

கடைசி தொடர்பு:12:14 (04/07/2017)

ஏகாதசி விரத மகத்துவத்தை உணர்த்தும் அம்பரீஷன் கதை!

னக்கு எத்தனை துன்பம் வந்தாலும் தாங்கிக்கொண்ட விஷ்ணு பகவான், தனது பக்தர்களுக்கு ஒரு துன்பம் என்றால் தாங்கிக்கொள்ளவே மாட்டார். `தீனதயாளன்’ என்றே போற்றப்படும் மகாவிஷ்ணு, அம்பரீஷன் என்ற பக்தனைக் காப்பாற்றிய நிகழ்ச்சியைத்தான் இங்கு பார்க்கவிருக்கிறோம். ஏழுகடல் சூழ்ந்த பரந்த நிலத்துக்கு அரசனாக இருந்தவன் அம்பரீஷன்.  நாராயணனின் பரம பக்தனாக, சிறந்த அரசனாகவும் இருந்தான். ஏகாதசி விரதத்தைக் கண்ணும் கருத்துமாகக் கடைப்பிடித்து வந்தான் அம்பரீஷன். உபவாசம் என்ற சொல்லுக்கே `இறைவனின் அருகே இருத்தல்’  என்றுதான் ஆன்றோர்கள் அர்த்தம் சொல்வதுண்டு. அதன்படி ஏகாதசி விரதம் இருந்து, மறுநாள் அதிதிகளுக்கு உணவிட்டு, தானும் உண்டு விரதம் முடிப்பான் அம்பரீஷன். 

ஏகாதசி

ஒருமுறை, ஏகாதசி விரதம் முடிந்த மறுநாள் துவாதசியன்று, துர்வாச முனிவர் அம்பரீஷனைச் சந்திக்க வந்தார். விரதம் முடித்தவுடனே உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நியதியின்படி துர்வாசரையும் தன்னோடு உணவு உண்ண அழைத்தான் அம்பரீஷன். குளித்துவிட்டு வருவதாகச் சென்றார் துர்வாசர். வெகுநேரம் சென்றும் அவர் திரும்பவில்லை. அன்றைய நாளில் உணவு உண்டு விரதத்தை முடிக்காவிட்டால், தெய்வக் குற்றம் ஆகிவிடுமே என்று அம்பரீஷன் தவித்தான்.

எனவே, மற்ற முனிவர்கள் அறிவுரைப்படி சிறிது துளசி தீர்த்தத்தை நாராயண மந்திரம் கூறிக் குடித்தான். அந்த வேளையில் சரியாக வந்த துர்வாசர் கடும் கோபம்கொண்டார். அதிதியாக வந்த தன்னை மதிக்காமல், தான் வரும் வரை பொறுக்காமல் விரதத்தை முடித்துக்கொண்ட அம்பரீஷனைப் பலவாறு ஏசினார். மன்னிக்குமாறு வேண்டிய மன்னனை ஒதுக்கினார். '`அம்பரீஷா நீ, நீர் பருகியதுகூடத் தவறுதான். அதுவே போஜனம் செய்ததற்கு ஒப்பாகும். இதனால், மகரிஷியான என்னை அவமதித்துவிட்டாய்’' என்று கூறி, கோபத்தின் எல்லையில் தன்னிலை மறந்து, தன்னுடைய தலைமுடியில் ஒன்றை எடுத்து அம்பரீஷனை நோக்கி வீசி எறிந்தார் துர்வாசர்.

மகாவிஷ்ணு

 

அந்த முடி கொடிய பூதமாக மாறி, அம்பரீஷனை நோக்கிக் கொல்லப் பாய்ந்து வந்தது. நாராயண மூர்த்தியை மனதாரத் துதித்தபடி, அவரை நோக்கி ஓடினான் அம்பரீஷன். தன்னுடைய பக்தனைக் கொல்லவரும் சக்திவாய்ந்த பூதத்தை அழிக்க, தன்னுடைய சுதர்சன சக்கரத்தை ஏவினார் ஸ்ரீமந் நாராயணர். பாய்ந்து வந்த ஸ்ரீசக்கரம் பூதத்தையும் கொன்று துர்வாசரையும் துரத்தியது. இதனால் பயந்து போன அவர் வைகுண்டத்தை அடைந்து, திருமாலின் பாதத்தைப் பற்றினார். `'என்னைப் பணிவதைவிட, யாரை இம்சித்தாயோ அந்த பரம பக்தனைப் போய் சரணடை. ஏகாதசி விரதமிருந்த அவனை யாருமே அழிக்க முடியாது. எனவே, அவன் மன்னித்தால் மட்டுமே ஸ்ரீசக்கரம் சாந்தியாகும்' என்று திருமால் கூறினார். அதன்படி அம்பரீஷனை  சரண் அடைந்தார் துர்வாசர்.

மகாவிஷ்ணு

தனக்காகத் துடித்து, உயிர் காக்க ஓடிவந்து, தன்னுடைய ஸ்ரீசக்கரத்தை ஏவிய நாராயணின் கருணையை எண்ணிப் பெருமிதம்கொண்ட அம்பரீஷன், துர்வாசரை மன்னித்தான். திருமாலே காப்பாற்றிய அம்பரீஷனின் பக்தியை மெச்சிய துர்வாசர், அவனுக்கு ஏராளமான வரங்களை அளித்தார். இந்த நிகழ்ச்சி அம்பரீஷனின் பெருமையையும், ஏகாதசி விரதத்தின் புனிதத்தையும் எடுத்துக்கூறுகிறது.

`நாராயணீயம்’ முப்பத்து மூன்றாவது தசகம் அம்பரீஷ சரிதம் என்னும் நூல் அம்பரீஷ மன்னரின் வரலாற்றைக் கூறுகிறது. பக்தனுக்காக பரந்தாமனே துடித்த இந்தச் செயல் எடுத்துக்கூறுவது என்னவென்றால், உண்மையான பக்தனை எவருமே வெல்ல முடியாது என்பதைத்தான். 


டிரெண்டிங் @ விகடன்