சென்னையில் திருப்பதி! - தரிசனம், தங்கும் அறை, முன்பதிவு... அனைத்துக்குமான நுழைவாயில்!

சென்னையிலேயே செல்வம் அதிகம் கொழிக்கும் இடங்கள்  என்று சொன்னால், அவற்றுள் தியாகராய நகருக்கு ஓர் இடம் நிச்சயம் உண்டு. அப்படிச் செல்வ வளம் மிக்க இடமான தியாகராய நகரின், வெங்கட்நாராயணா சாலையில் அமைந்திருக்கின்றன திருமலை திருப்பதி கோயிலும் தேவஸ்தான அலுவலகமும், நிழல் தரும் அடர்ந்த மரங்களும், மணம் வீசும் மலர்கள், மாலைகள் விற்பனை செய்யும் கடைகளுமாக லட்சுமி கடாட்சத்துடன் அமைந்திருப்பது இக்கோயிலின் சிறப்பம்சம்.  

திருப்பதி

கோயிலில் திருப்பதி வெங்கடேசப் பெருமாள், ஶ்ரீதேவி பூதேவி சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் என்பது ஐதீகம். ஆரத்தி தரிசனம் முடித்து வரும் பக்தர்களுக்கு தீர்த்தமும் சடாரியும் வழங்கப்படுகிறது. மூலவர் தரிசனம் முடித்து வந்தால் திருவரங்கப் பெருமாளின் திருவுருவம் சயனித்த நிலையில் நமக்கு காட்சி தருகிறது.

திருப்பதி

திருமலை திருப்பதியில் நடைபெறுவதைப்போலவே இங்குள்ள வெங்கடேசப் பெருமாளுக்கும் சுப்ரபாத சேவை, கொலுவு அர்ச்சனை ஆகிய சேவைகளும், நைவேத்தியமும், ஆரத்தியும் சிறப்புற நடைபெறுகின்றது.

காலையில் தயிர் சாதம், மதியம் புளியோதரைசாதம் , மாலையில் மிளகு சாதம் என பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் மிளகுப் பொங்கலும், சனிக்கிழமைகளில் சர்க்கரைப் பொங்கலும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

தி.நகர் திருப்பதி

எப்போதும் மக்கள் நடமாட்டமும் சீரான பக்தர்கள் கூட்டமும் இந்தக் கோயிலின் சிறப்பம்சம். பக்தர்களில் பலரும் வாரம் ஒருமுறை இங்கு வந்து பெருமாளை தரிசித்து விட்டு, இங்குள்ள தியான மண்டபத்தில்  அமர்ந்திருந்து பெருமாளை ஆற அமர தரிசித்துச் செல்வது வழக்கம். இது திருமலையில் கிடைக்காத பெரும்பேறாகும். கோயில் வளாகத்திலேயே அமைந்துள்ள கலை அரங்கத்தில் தினமும் மாலையில் பரதநாட்டியம், கர்னாடக இசை, பக்திச் சொற்பொழிவுகள் என நடப்பது வாடிக்கை.

பதிவு அலுவலகம்

தி.நகர் வாசிகள் மட்டுமல்லாது சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 6 மணியில் இருந்து திருப்பதி மலையில் இருந்து கொண்டு வரப்பட்ட லட்டு பிரசாதம் விற்கப்படுகிறது. லட்டு ஒன்று 25 ரூபாய் விலையில் நபர் ஒருவர் 2 லட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். திருப்பதி செல்ல முடியாதவர்கள் சனிக்கிழமைகளில் இங்கு வந்து தரிசித்து பிரசாதம் வாங்கிச் செல்கின்றனர். 

முன் பதிவு அலுவலகம்:

திருப்பதி செல்ல திட்டமிடுபவர்கள் இங்கு வந்து அறை, சிறப்பு தரிசனம் (300 ரூபாய் கட்டணம்), சேவா மற்றும் கல்யாண உற்ஸவம் போன்றவற்றுக்கும் இங்கு வந்து முன்பதிவு செய்துகொள்ளலாம். இதற்கான அலுவலகம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி (இடையில் உணவு இடைவேளை நேரம் 1.30 மணி முதல் 2.00 மணி வரை தவிர) வரையிலும் செயல்படுகிறது. இங்கு சனி, ஞாயிறுகளில் இரவு 7 மணி வரையிலும் முன்பதிவு செய்யப்படுகிறது. 

அறிவிப்புப் பலகை

ஒவ்வொரு நாளும் இங்கிருக்கும் அறிவிப்புப் பலகையில் சிறப்பு தரிசனம், அறைகள் குறித்த தகவல்கள் இடம்பெறும். முழுக்க முழுக்க ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்படுவதால், எந்தவித குழப்பமும் இதில் நடப்பதில்லை. அறை எடுத்துத் தங்க விரும்புபவர்கள், தனிநபராக வராமல், மனைவியுடன் வந்து பதிவு செய்துகொள்ளவேண்டும்.

இங்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒரு புத்தக நிலையமும் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான ஆன்மிக நூல்கள் மற்றும் தேவஸ்தான வெளியீடுகள், திருமலையின் மாத இதழான சப்தகிரி, காலண்டர், பஞ்சாங்கம், டைரி ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன.

சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையுடன் இணைந்து  ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமைகளில் கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இது தவிர இலவச மருத்துவ முகாம்களும் அவ்வப்போது நடைபெறுகின்றன.

தரிசன நேர விவரம்
 

தரிசன நேர விவரம்:

காலை 5.00 மணி முதல் 7.30 மணி வரை சுப்ரபாதம், தோமால சேவா, கொலுவு, அர்ச்சனை, சர்வதரிசனம்.

காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை நைவேத்தியம் (முதல் காலம்)

காலை 8.30 மணி முதல் 11.00 மணி வரை சர்வதரிசனம்

பகல் 11.00 மணி முதல் 11.45 மணி வரை நைவேத்தியம் ( இரண்டாம் காலம்)

பகல் 11.45 மணி முதல்  பிற்பகல் 2.00 மணி வரை சர்வதரிசனம்

பகல் 11.45 மணி முதல்  பிற்பகல் 1.30 மணி வரை சர்வதரிசனம் (செவ்வாய், புதன், வியாழக்கிழமை)

பிற்பகல் 2.00 மணி முதல்  பிற்பகல் 4.00 மணி வரை  நடைசாத்தப்படும்.

பிற்பகல் 1.30 மணி முதல்  பிற்பகல் 4.00 மணி வரை (செவ்வாய், புதன், வியாழக்கிழமை மட்டும் நடைசாத்தப்படும்).

மாலை 4.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை சர்வதரிசனம்

மாலை 6.00 மணி முதல் மாலை 6.45 மணி வரை நைவேத்தியம் (3 ம் காலம்)

மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை சர்வதரிசனம்

மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை சர்வதரிசனம் (சனிக்கிழமை)

நைவேத்திய வேளையில் தரிசனம் கிடையாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!