அன்னை தந்தை வழிபாடு ஆண்டவனையே அழைத்துவரும்! - ஆஷாட ஏகாதசி தினப் பகிர்வு | Ashadha-Shukla Ekadasi – An Important and Auspicious Day

வெளியிடப்பட்ட நேரம்: 14:34 (04/07/2017)

கடைசி தொடர்பு:16:27 (04/07/2017)

அன்னை தந்தை வழிபாடு ஆண்டவனையே அழைத்துவரும்! - ஆஷாட ஏகாதசி தினப் பகிர்வு

திதிகளையொட்டி அனுஷ்டிக்கப்படும் விரதங்களில் சிரேஷ்டமானது ஏகாதசி விரதம். மாதம்தோறும் இரண்டு முறை வரும் ஏகாதசி விரதத்தில், வியாச பூர்ணிமாவுக்கு முன்னதாக வருவது, `ஆஷாட ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது.

பாண்டுரங்கன் 

இந்த ஏகாதசி நாளில்தான் பகவான் விஷ்ணு, யோக சயனம் மேற்கொள்வார் என்றும், நான்கு மாதங்கள் யோக சயனத்தில் இருக்கும் விஷ்ணு பகவான், கார்த்திகை மாதம் ஏகாதசியன்று யோக சயனத்தில் இருந்து கண்விழிப்பதாகவும் ஐதீகம்.

இந்த நான்கு மாத காலத்தில் சந்நியாசிகள், `சாதுர்மாஸ்ய விரதம்’ அனுஷ்டிப்பது நடைமுறை. சாதுர்மாஸ்ய விரதத்தை `வியாச பூர்ணிமா’ என்று அழைக்கப்படும் குரு பூர்ணிமா அன்று தொடங்குவார்கள்.

ஆஷாட ஏகாதசி என்பது அன்னை தந்தையரைப் போற்றுவதால், நமக்கு எத்தகைய நன்மைகள் எல்லாம் கிடைக்கும் என்பதை உணர்த்தும் நாள். 

இந்த ஆஷாட ஏகாதசி நாளில்தான் பகவான் கிருஷ்ணர், ருக்மிணி தேவியுடன் விட்டலனுக்காகப் பாண்டுரங்கனாகக் காட்சி அளித்தார். எனவே, ஆஷாட ஏகாதசி பண்டரிபுரத்தில் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

பகவான் கிருஷ்ணர் யாருக்குப் பாண்டுரங்கனாகக் காட்சி தந்தார் தெரியுமா?

பிறந்ததில் இருந்தே தாய் தந்தையரை மதிக்காமல் அலட்சியப்படுத்திய ஒருவனுக்குத்தான் விட்டலனாகக் காட்சி தந்தார். 
ஆனால், அவர் எப்போது அப்படி தரிசனம் தந்தார் என்பதைத் தெரிந்துகொள்ள, நாம் புண்டரீகன் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

முற்காலத்தில் வனத்தில் வசித்து வந்தவர் ஜன்னு முனிவர். அவருடைய மனைவி சாத்யகி. அவர்களுக்கு நீண்ட காலம் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. பின்னர் இறைவன் அருளால் அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு புண்டரீகன் என்று பெயரிட்டு வளர்த்துவந்தனர். 

ஆனால், இப்படி ஒரு பிள்ளை தங்களுக்கு ஏன்தான் பிறந்தானோ என்று எண்ணி அவர்கள் கலங்கும்படி இருந்தது புண்டரீகனுடைய நடத்தை. பெற்றவர்களை மதிப்பதே இல்லை. மேலும், அவர்கள் மனம் வருந்தும்படி நடந்துகொண்டான். மற்றவர்களைத் துன்புறுத்துவதையே தன்னுடைய பொழுதுபோக்காகக் கொண்டிருந்தான். இளமைப் பருவத்தில் பெண் மோகம்கொண்டு திரிந்தான். இவனைப் பார்த்தாலே பெண்கள் பயந்து நடுங்கி, விலகிச் சென்றனர். 

ஒரு திருமணம் செய்துவைத்தால், பிள்ளை திருந்திவிடுவான் என்று நினைத்து, அவனுக்குத் திருமணமும் செய்துவைத்தனர். ஆனால், அப்போதும் அவன் திருந்துவதாக இல்லை. மனைவியின் பேச்சைக் கேட்டு, பெற்றவர்களை மேலும் மேலும் துன்புறுத்தினான். மனைவி இருந்தும் மற்ற பெண்களிடமும் இச்சை கொண்டான். பெற்றவர்கள் அவனைக் கண்டித்தும் அவன் கேட்பதாக இல்லை. “என்னிஷ்டப்படிதான் நடந்துகொள்வேன்’’ என்று கூறினான். அதற்கு இடம் இல்லாத இந்த வீட்டில் தன்னால் இருக்க முடியாது என்று கூறிவிட்டு, தன் மனைவியுடன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டான்.

பெற்ற பிள்ளையே தங்களை மதிக்காமல் சென்றதற்கு, தாங்கள் செய்த பாவம்தான் காரணம் என்று எண்ணிய புண்டரீகனின் தாய் தந்தையர், காசிக்குச் சென்று கங்கையில் நீராடி, பாவத்துக்குப் பிராயச்சித்தம் செய்துகொள்ளலாம் என்று காசிக்குச் சென்றுவிட்டனர்.
புண்டரீகன், தன் மனைவியுடன் காசிக்குச் செல்ல நினைத்து ஒரு குதிரையில் தேவையான பொருள்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டான். வழியில் காட்டுப் பகுதியை ஒட்டி அமைந்திருந்த ஒரு சத்திரத்தில், ஓர் இரவு அவன் தங்கினான். நடு இரவில் அவனுக்கு விழிப்பு வந்தபோது அவன் கண்ட காட்சி அவனை அச்சுறுத்தியது. கன்னங்கரேலென்ற மேனியுடன், பார்ப்பதற்கே அருவருக்கத்தக்க தோற்றத்துடன் காணப்பட்ட மூன்று பெண்கள் சத்திரத்துக்கு எதிரில் இருந்த முனிவர் ஒருவரின் ஆசிரமத்துக்குள் சென்றதைப் பார்த்தான். அந்தப் பெண்களால் முனிவருக்கு ஏதும் ஆபத்து வந்துவிடுமோ என்று நினைத்தான். ஆனாலும், ஆசிரமத்துக்குச் சென்று முனிவரைக் காப்பாற்ற வேண்டும் என்று சற்றும் நினைக்கவில்லை. அச்சுறுத்தும் தோற்றத்துடன் இருந்த அந்தப் பெண்களிடம் சிக்கி முனிவர் படப்போகும் அவஸ்தையை ரசிக்கத் தயாரானான்.

ஆனால், நடந்த நிகழ்ச்சியே வேறு.

கிருஷ்ணர் 

அந்த நிகழ்ச்சிதான் அவனுக்கு கிருஷ்ணரின் தரிசனம் கிடைக்கக் காரணமாக அமைந்தது.

முனிவரின் ஆசிரமத்துக்குள் சென்ற மூன்று பெண்கள் சிறிதுநேரத்தில் அழகும் பிரகாசமுமான தோற்றத்துடன் வெளிவந்தனர். ஆச்சர்யமடைந்த புண்டரீகன், அந்தப் பெண்களில் ஒருத்தியின் கையைப் பிடித்து இழுத்து, “அழகிகளே, நீங்கள் யார் சொல்லுங்கள். ஆசிரமத்துக்குள் செல்லும்போது அவலட்சணமாகச் சென்றீர்கள். இப்போது அழகாக வருகிறீர்களே... முனிவருக்கு வைத்திய சாஸ்திரம் எதுவும் தெரியுமா?’’ என்று கேட்டான்.

தன் கையைப் பிடிக்கத் துணிந்த புண்டரீகனை அலட்சியமும் கோபமுமாகப் பார்த்த பெண்,  “முட்டாள்தனமாகப் பேசாதே. நாங்கள்தான் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள். தினமும் காலையில் இருந்து மாலை வரை மனிதர்கள் எங்களில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்வதால், அவர்களுடைய பாவங்கள் எல்லாம் சேர்ந்து எங்களை அவலட்சணமாக்கிவிட்டன. எங்களிடம் சேர்ந்த பாவங்களை எல்லாம், இந்த முனிவருக்கு பணிவிடை செய்து நாங்கள் போக்கிக்கொள்கிறோம்’’ என்றாள். “அந்த முனிவர் அவ்வளவு தவ ஆற்றல் கொண்டவரா?’’ என்று கேட்டான் புண்டரீகன்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை. அவர், தன் தாய் தந்தையருக்கு பணிவிடைகள் செய்வதையே பிறவிப் பயனாகக்கொண்டு வாழ்பவர். பெற்றோருக்கு அவர் செய்யும் பணிவிடைகள்தான் எங்களுடைய பாவங்களை எல்லாம் போக்கும் வல்லமையை அவருக்கு வழங்கி இருக்கிறது. மேற்கொண்டு உனக்கு விவரம் தேவையாக இருந்தால், அந்த முனிவரிடமே சென்று கேள். ஆனால், உன்னைப் போன்ற பாவிகளை அவர் பார்க்க விரும்புவாரா என்பது சந்தேகம்தான்’’ என்று சொல்லி மற்ற பெண்களையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.

எப்போது விடியும் என்று காத்துக்கொண்டிருந்த புண்டரீகன், விடிந்ததுமே முனிவரின் ஆசிரமத்துக்குச் சென்றான். தன்னைப் பற்றிய விவரங்களை எல்லாம் கூறி, தன்னுடைய பாவங்களுக்கும் விமோசனம் கூறுமாறு கேட்டுக்கொண்டான்.

மனம் திருந்திய புண்டரீகனிடம், பெற்றவர்களுக்கு சேவை செய்வதுதான் ஒரே வழி என்று முனிவர் கூறினார். அவரை வழிபட்டுத் திரும்பிய புண்டரீகன், தன் மனைவியுடன் சேர்ந்துகொண்டு பெற்றவர்களைத் தேடத் தொடங்கினான்.

ஒருவழியாகப் பெற்றவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, வீட்டுக்கு அழைத்து வந்தான். அதன் பிறகு அவனுடைய வாழ்க்கையே மாறிப் போனது. பெற்றவர்களே தன்னுடைய உலகம் என்ற லட்சியத்துடன் வாழத் தொடங்கினான். அவர்களுக்குத் தேவையானவற்றை எல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்தான். 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்ற ஔவையின் வாக்கின்படி புண்டரீகனுக்கு அவனுடைய தாய் தந்தையரே முதல் தெய்வமாகிவிட்டனர். தெய்வம்கூட அவனுக்கு இரண்டாம் பட்சமாகிவிட்டது. 

புண்டரீகன் பெற்றவர்களிடம் வைத்திருக்கும் அன்பு மற்றும் பக்தியின் சிறப்பை உலக மக்களுக்கு உணர்த்த விரும்பிய பகவான் கிருஷ்ணர், ஒருநாள் புண்டரீகனின் குடிசைக்கு வந்தார். குடிசையின் வாசலில் இருந்தபடி, “நான் கிருஷ்ணன் வந்திருக்கிறேன். உள்ளே யாரும் இல்லையா?’’ என்று கேட்டார். 

ஏகாதசி - கிருஷ்ண வழிபாடு 

உள்ளே பெற்றவர்களின் சேவையில் ஈடுபட்டிருந்த புண்டரீகன், “நீர் யாராக இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை. நான் பெற்றவர்களின் சேவையில் ஈடுபட்டிருக்கிறேன். அதை முடித்துவிட்ட பிறகுதான் உன்னைக் கவனிக்க முடியும்’’ என்று சொல்லி, ஒரு செங்கல்லை எடுத்து வாசல் பக்கமாக வீசினான். பகவான் கிருஷ்ணரும் பக்தனுக்காக அந்தச் செங்கல்லின் மேல் ஏறி நின்றுகொண்டார்.

வெகுநேரம் சென்ற பிறகுதான் புண்டரீகன் வெளியில் வந்தான். கிருஷ்ண பகவானைக் கண்டதும், பக்திப் பரவசம் மேலிட, ``ஐயனே, தங்களையா இத்தனை நேரம் காக்க வைத்தேன்? தாங்கள் நிற்பதற்காவா நான் செங்கல்லை எடுத்து வீசினேன்?’’ என்று கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்டான்.

“புண்டரீகா, கவலை வேண்டாம். பெற்றவர்களுக்கு அன்புடன் செய்யும் சேவை என்பது தெய்வத்துக்குச் செய்யும் சேவையைவிடவும் உயர்ந்தது. இந்த உண்மையை உலக மக்களுக்கு உணர்த்தவே நான் இப்படி ஒரு லீலையைச் செய்தேன். இனி இந்த இடம் பண்டரிபுரம் என்று அழைக்கப்படும். உன்னையும் எல்லோரும் விட்டல் என்று அழைத்து, உன்னிடம் என்னையே தரிசிப்பார்கள். பெற்றவர்களுக்கு நீ  செய்த சேவையினால், மகத்தான புண்ணியத்தை நீ அடைந்து விட்டாய். அதன் மூலம் இங்கு வந்து தரிசிப்பவர்களின் வாழ்க்கையில் எல்லாவிதமான நன்மைகளும் நிலைத்திருக்கச் செய்வாய்’’ என்று அருளினார். 

பண்டரிபுரத்தில் பகவான் கிருஷ்ணர் பாண்டுரங்கனாகக் கோயில்கொண்ட நாள்தான் ஆஷாட ஏகாதசி. இந்த நாளில் நாம் விரதம் இருந்து பகவானை வழிபட்டால், அளவற்ற நன்மைகளைப் பெறலாம். 

எல்லாவற்றையும்விட நாம் நம்மைப் பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடாமல், நம்முடனே வைத்திருந்து அன்புடன் போற்றிப் பாதுகாத்துவந்தால், இறைவனின் திருவருள் நமக்குப் பூரணமாகக் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.


டிரெண்டிங் @ விகடன்