வெளியிடப்பட்ட நேரம்: 08:08 (06/07/2017)

கடைசி தொடர்பு:14:35 (10/07/2017)

‘என் நடனம் சிவனின் சித்தம்!’ - பரவசப்படுத்தும் பிரதோஷ தாண்டவக் கலைஞர்!

ந்த இளைஞர் ஒரு சிவன் கோயிலில் பிரதோஷ வேளையில் ஆடிய நடனத்தைப் பார்த்த வயதான ஒரு பெண்மணி அந்த இளைஞரிடம், 'நீ ஆடிய நடனத்தில் நான் சிவபெருமானையே தரிசித்தேன்' என்று பரவசப்பட்டுக் கூறினார்.

அந்த இளைஞர்தான் உடுமலை செந்தில் என்று கேள்விப்பட்டு, மாலை நித்திய பிரதோஷ வேளை என்று சொல்லப்படும் 4.30 மணி முதல் 6 மணி வரை சந்தித்து உரையாடினோம்.

“உங்களுக்கு எப்படி பிரதோஷ வேளையில் தாண்டவம் ஆடவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது?” என்று கேட்டோம்.

பிரதோஷ தாண்டவம்

“என்னுடைய சொந்த ஊர் உடுமலை. சின்ன வயதில் இருந்தே எனக்கு நடனம் என்றால் மிகவும் பிடிக்கும். அந்த வயதுக்கே உரிய ஆர்வத்தில் சினிமாவில் பார்க்கும் நடனங்களை ஆடிப் பழகுவேன். நடனத்தில் எனக்கு இருந்த ஆர்வத்தைப் பார்த்து என் தந்தை ஊரில் இருந்த முத்து பாகவதரிடம் நடனம் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தார். தொடர்ந்து பழநி முத்துசாமி வாத்தியாரிடமும் நடனம் கற்றுக்கொண்டேன்.

பிறகு நான் கற்றுக்கொண்ட நடனங்களை பள்ளிப் பிள்ளைகளுக்கு மாலை நேரங்களிலும் விடுமுறை நாள்களிலும் கற்றுக்கொடுத்தேன். சினிமா நடனம் மட்டுமின்றி கிராமிய நடனங்களையும் கற்றுக் கொடுத்தேன். நான் கற்றுக்கொண்ட நடனங்களை அப்படியே சொல்லித் தராமல், கராத்தே, குங்க்பூ போன்ற கலைகளில் உள்ள சில அபிநயங்களையும் சேர்த்துச் சொல்லிக் கொடுத்தேன்'' என்று சொல்லும் உடுமலை செந்தில் இன்றைக்கு கோயில்களில் பிரதோஷ தாண்டவம் ஆடி, பரவலாகப் பாராட்டு பெற்றிருக்கிறார் என்றால், அது அவ்வளவு எளிதாகக் கடந்துபோகக் கூடிய விஷயமல்ல. இடைப்பட்ட காலங்களில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களும் அனுபவங்கள் தந்த படிப்பினைகளும் மிகப் பெரிது.

நடனத்தின்மீது உடுமலை செந்திலுக்கு இருந்த ஆர்வம் மிகப் பெரிது. தேடித் தேடிப் போய் ஒவ்வொரு நடனமாகக் கற்றுக்கொண்டார். அதற்காக எத்தனை சிரமங்கள் ஏற்பட்டாலும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் எதிர்கொண்டார்.

சினிமா நடனம், கிராமிய நடனங்கள் மட்டுமில்லாமல், மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று, அவர்கள் ஆடும் நடனங்களையும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டார். தான் பெற்ற இன்பம் நடனத்தில் ஆர்வம் உள்ள அனைவரும் பெறவேண்டும் என்றும் விரும்பினார். பள்ளி பிள்ளைகளுக்கு மட்டுமில்லாமல், ஆர்வமுள்ள அனைவருக்கும் அவர்கள் விரும்பும் நடனங்களைக் கற்றுக்கொடுத்தார். இதற்காக அவர் காசு பணம் என்று பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை.

பிரதோஷ தாண்டவம்

ஒருமுறை சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகளை தரிசிக்கச் சென்றிருந்தபோது, நடனத்தில் இவருக்கு இருந்த ஆர்வத்தைக் கண்ட சுவாமிஜி, பண உதவி செய்து முறைப்படி நடனம் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தார். அதன்மூலம் பரதம் போன்ற நடனக் கலைகளையும், பல்வேறு அபிநயங்களையும் முறைப்படி கற்றுக்கொண்டார்.

இப்படியாகப் போய்க்கொண்டிருந்தவரின் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. ஒருநாள் பிரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்குச் சென்றிருந்தார். அங்கேதான் பிரதோஷ வேளையில் சிவபெருமான் நந்தி தேவரின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் நின்று தாண்டவம் ஆடும் புராண வரலாற்றை அவர் தெரிந்துகொண்டார்.

ஏற்கெனவே இவருக்கு நடனத்தில் இருந்த ஆர்வத்தின் காரணமாக, கோயிலில் பிரதோஷ வேளையில் சிவபெருமான் ஆடியதாகச் சொல்லப்படும் தாண்டவத்தை கோயில்தோறும் சென்று ஆடினால் என்ன என்பதாக ஓர் எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

எண்ணம் செயலாக மாறவேண்டுமே. என்ன செய்வது?

பணமோ புகழோ பெரிதாக விரும்பாத செந்திலின் விருப்பம் திருப்பூர் டாக்டர் வெங்கடாசலம் என்பவருக்குத் தெரிய வந்தது. அவருடைய ஏற்பாட்டின்படி அவிநாசியில் உள்ள அவிநாசியப்பர் கோயிலில் உடுமலை செந்திலின் பிரதோஷ தாண்டவ நிகழ்ச்சி முதன்முறையாக அரங்கேறியது. அந்த நிகழ்ச்சி அங்கிருந்தவர்களை வெகுவாகக் கவரவே, கோவையின் சுற்றுப்புற ஊர்களில் இருக்கும் கோயில்களில் எல்லாம் பிரதோஷ தாண்டவ நிகழ்ச்சியை நடத்துவதை ஒரு வேள்வியைப் போலவே செய்து வருகிறார். வரும் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி வரும் சனி மகா பிரதோஷ நாளில் இவருடைய 400-வது பிரதோஷ தாண்டவம் நடைபெற இருக்கிறது.

இந்த வளர்ச்சிக்காக அவர் தன்னையே பல சோதனைகளுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கிறார். கோவையின் சுற்றுப்புறங்களில் மட்டுமே பிரதோஷ தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தவருக்கு, 'தான் ஆடும் பிரதோஷ தாண்டவம் சரிதானா?' என்பதாக ஒரு சந்தேகம் ஏற்பட்டுவிட்டது.

கோவை சுற்றுப்புறப் பகுதிகளை விடவும் கோயில்களின் நகரமாகத் திகழும் கும்பகோணம் உள்ளிட்ட தஞ்சை மாவட்டக் கோயில்களிலும் பிரதோஷ தாண்டவம் ஆடி, அங்கிருப்பவர்கள் தன்னுடைய பிரதோஷ தாண்டவத்தை எப்படி வரவேற்கிறார்கள் என்று தெரிந்துகொள்வதற்காக திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம் ஆகியோரைச் சந்தித்து தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார். அவர்களும் சம்மதிக்கவே ஆதீனங்களுக்கு உரிமையான கோயில்களில் பிரதோஷ தாண்டவம் ஆடி இருக்கிறார். இவருடைய பிரதோஷ தாண்டவத்தைப் பார்த்த திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சந்நிதானம் இவரை கௌரவித்ததுடன், இவர் ஆடும் பிரதோஷ தாண்டவம் சரியாகத்தான் இருக்கிறது என்று பாராட்டி ஆசீர்வதித்தார்.

சந்தியா தாண்டவம்

அதையே பெரிய அங்கீகாரமாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட செந்தில், கோயில்களில் பிரதோஷ தாண்டவம் ஆடுவதை தொடர்ந்து கொண்டிருந்தார். திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் அங்கீகாரம் தந்த பிறகும் மேலும் சில சந்தேகங்கள் ஏற்பட்டதால், ஓவ்வொரு கோயிலாகச் சென்று அங்கிருக்கும் சிலைகளின் நடன அபிநயங்களைக் கற்றுக்கொண்டார். பிறகும் பிரபல ஸ்தபதி கணபதி ஸ்தபதியிடம் சென்று தன்னுடைய ஆர்வத்தைத் தெரியப்படுத்தினார். இவருடைய ஆர்வத்தைக் கண்ட கணபதி ஸ்தபதி 1000-க்கும் மேற்பட்ட கரணங்களை இவருக்குக் கற்றுக்கொடுத்தார்.

பிரதோஷ தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த செந்திலுக்கு, சுவாமி புறப்பாட்டின்போது ஆடப்படும் நவசந்தி நடனம் என்பது பற்றி தெரிய வந்தது. முற்காலங்களில் கோயில் திருவிழா காலங்களிலும், பிரதோஷ நாள்களில் பிரதோஷ மூர்த்தி கோயில் பிராகார உலா வரும் சமயங்களிலும் இந்த நவசந்தி நடனம் நடைபெறுவது மரபாக இருந்தது. காலப்போக்கில் அருகிப் போன நவசந்தி நடனம் மறுபடியும் புத்துயிர் பெறவேண்டும் என்று நினைத்தவர், பல சிரமங்களுக்கிடையில் நவசந்தி நடனத்தையும் கற்றுக்கொண்டு பிரதோஷ தாண்டவத்துடன் நவசந்தி நடனத்தையும் ஆடுவதை வழக்கமாகவும், தன்னுடைய வாழ்க்கையாகவுமே கொண்டுவிட்டார். ஆம், தான் திருமணம் செய்துகொண்டால், எங்கே சிவபெருமானுக்காக தான் செய்து வரும் பிரதோஷ தாண்டவ சேவை தடைப்பட்டு விடுமோ என்ற எண்ணத்தில் திருமணமே செய்துகொள்ளாமல் இருக்கிறார்.

பிரதோஷ தாண்டவம், நவசந்தி நடனம் மட்டுமில்லாமல், பிரளய தாண்டவம், பிரம்ம தாண்டவம், தாரை தப்பட்டை ஒலிக்க ஆடும் மகா அட்டகாச தாண்டவம் போன்ற பல தாண்டவங்களையும் கற்றுக்கொண்டிருக்கிறார்.

காஞ்சி சங்கர மடத்தில் மகா பெரியவா அதிஷ்டானத்துக்கு முன்பாக தனக்கு பிரதோஷ தாண்டவம் ஆடும் வாய்ப்பு கிடைத்தது பற்றி பெருமையுடன் நினைவு கூர்கிறார் செந்தில்.

'ஶ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அனுக்கிரகத்தால், காஞ்சி மகா பெரியவா அதிஷ்டானத்துக்கு முன்பாக ஒரு பிரதோஷ நாளில் பிரதோஷ தாண்டவம் ஆடியதை பெரும் பாக்கியமாகவே கருதுகிறேன். சிவபெருமானின் அம்சமாக போற்றி வணங்கப்படுபவரின் அதிஷ்டானத்தில் ஆடியதை நான் கயிலை நாயகனின் சந்நிதியில் ஆடியதாகவே நினைத்துப் பூரித்துப் போனேன். அதுமட்டுமல்ல, பால பெரியவா ஶ்ரீசந்திரமௌளீஸ்வரர் பூஜை செய்யும் வேளையில், அபிஷேகம் முடிந்து அலங்காரத்துக்காக திரை போடப்பட்டு இருந்தபோது வில்வார்ச்சனை அபிநயம் செய்ததும் எனக்குக் கிடைத்த பெரும்பேறாகவே கருதுகிறேன். அவர்களுடைய ஆதரவுடன் பல கோயில்களில் பிரதோஷ தாண்டவம் ஆடும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்திருக்கிறது'' என்று நெகிழ்ச்சியுடன் அந்தப் பரவச நிமிடங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் உடுமலை செந்தில்.

ஆகஸ்ட் மாதம் வரும் சனி மகா பிரதோஷத்தன்று 400-வது முறையாக பிரதோஷ தாண்டவம் ஆடப்போகும் உடுமலை செந்தில் இன்னும் இன்னும் ஆயிரமாயிரம் பிரதோஷ தாண்டவங்கள் ஆடவேண்டும் என்று வாழ்த்திவிட்டு விடைபெற்றோம்.


டிரெண்டிங் @ விகடன்