Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏகாதசி, புண்ணியம், ராமநாமம்... இந்தியச் சடங்குகளும் நம்பிக்கைகளும் #MustReadBook

ம்பிக்கைகளாலும் சடங்குகளாலும் கட்டமைக்கப்பட்டது இந்தியர்களின் வாழ்க்கை. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிசாட், இன்சாட்... என விதவிதமான சாட்டிலைட்டுகள் விண்ணில் ஏவப்படும் இந்தக் காலத்திலும்கூட `பூனை குறுக்கே வந்தால் போகிற காரியம் விளங்காது’ என்பதை ஆழமாக நம்புகிறவர்களும் இருக்கிறார்கள். அதற்குக் காரணம் நம் முன்னோர் வகுத்த பாரம்பர்யம். நம் சடங்குகளும் நம்பிக்கைகளும் அத்தனை அற்புதமானவை. அதற்குப் பின்னால் இருக்கும் உண்மை ஒருபுறம் இருக்கட்டும். அவற்றில் பல நம்மை ஆச்சர்யப்படுத்துபவை; திகைக்கவைப்பவை; அதிர்ச்சியடையக்கூடச் செய்பவை. 

சடங்குகளும் நம்பிக்கைகளும் - புத்தகம்

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் பணியாற்றியவர் ஜெ.அப்பாட். அவர் எழுதிய `இந்தியச் சடங்குகளும் நம்பிக்கைகளும்’ (Indian Ritual and Belief: The Keys of Power) நூல் மிக முக்கியமான ஒன்று. இந்தப் புத்தகத்தில் நம் சடங்குகளையும் நம்பிக்கைகளையும் ஊன்றிக் கவனித்து, அவற்றை மூன்று தொகுதிகளாக ஆவணப்படுத்தியிருக்கிறார் அப்பாட். ஆனால், அவற்றில் எதன் மீதும் தன் கருத்துகளைத் திணிக்காமல், உள்ளதை உள்ளபடியே தெரிவித்திருப்பதுதான் இதன் சிறப்பு. 

இந்த நூலில் அப்பாட் விவரிக்கும் சில சுவாரஸ்யமான நம்பிக்கைகள், சடங்குகள்...

* ஓர் உருவத்தைப் புனிதமான ஒருவன் வழிபடும்போது அதன் சக்தி அதிகரிக்கிறது. ஓர் உருவத்தில் சாதாரண மனிதனின் சக்தியைவிட அதிகமான சக்தியை உருவேற்ற முடிகிறது. தீவிர இறையுணர்வுக்கும் சக்திக்கும் உள்ள தொடர்பு இந்துக்களின் தொன்மையான இலக்கியங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. `மான சார சில்ப சாஸ்த்திரா’ என்னும் நூலில் `தலைமை ஸ்தபதி’ (சிற்பி) நல்லொழுக்கம் உள்ளவராயிருக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. `நாட்டிய சாஸ்திரம்’, கவிஞர்களும், பாடகர்களும், நடனமாடுபவர்களும் தீயொழுக்கமில்லாதவர்களாக இருக்கவேண்டுமென்று தெரிவிக்கிறது. 

* சக்தியைப்போலவே புண்ணியத்தையும் மற்ற பொருள்களின் தொடர்பின் மூலம் பெற முடியும். துளசி வனத்திலிருந்து பெற்ற மண், தண்ணீர் ஆகியவற்றை உடம்பில் பூசிக்கொள்வதன் மூலம் ஒருவன் புண்ணியத்தைப் பெற முடியும். இறந்தவனின் உடல் காய்ந்த துளசிக் குச்சிகளினால் எரிக்கப்பட்டால், அவன் புண்ணியத்தைப் பெறுகிறான். பசுவைப் பார்ப்பதும் தொடுவதும் புண்ணியத்தைத் தருகிறது. பசுவின் சிறுநீரை (கோமியம்) அல்லது பசுவின் குளம்படி இடத்தில் உள்ள தண்ணீரைத் தன்மீது தெளித்துக்கொள்வதன் மூலம் ஒருவன் புண்ணியத்தை அடைய முடியும். 

* ஏகாதசி விரதமிருந்து புண்ணியத்தைப் பெற்ற ஒருவன் மறுநாள் மதிய உணவுக்குப் பின் தூங்கினால், மோகினி என்னும் பெண் தெய்வம் அவனது புண்ணியத்தைத் திருடிக்கொள்கிறாள். இவ்வாறு புண்ணியத்தை இழப்பதைத் தடுக்க, விரதமிருந்தவன் தூங்க நேர்ந்தால், அதற்கு முன்பாக அவன் தன் பாதங்களில் நெய்யினைத் தடவிக்கொள்ள வேண்டும். ஏனெனில், இவனது பாதங்களில் உள்ள நெய்யினை நாவினால் நக்கும் மோகினி புண்ணியத்தைத் திருடிவிட்டதாக எண்ணி ஏமாந்து போவாள். 

* ஒரு மனிதன் மரணத்தை நெருங்கும் வேளையில் அவனது நிழல் குறைகிறது. ஒரு மனிதனின் நிழலை அளந்து அவனது ஆயுளைக் கணிக்க முடியும் என்று சோதிடர்கள் கூறுகிறார்கள். முகம்மதியர்களின் கூற்றுப்படி இறைதூதர் நபிகள் மட்டுமே நிழலற்றவர். 

கோயில்

* கோயிலின் கர்ப்பகிரகத்தினுள் ஜன்னல்கள் எதுவும் இருப்பதில்லை. இறை உருவின் மீது தீய நிழல்கள் விழாமல் அதன் சக்தியைப் பாதுகாக்கவே இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. 

* ஒரு நபரைவிட அவரது பெயருக்கு அதிக சக்தியுண்டு என்பதை விளக்க இந்துக்களின் புனித நூல்களில் பல கதைகள் காணப்படுகின்றன. இலங்கைக்கு கற்களால் கடலில் பாலம் அமைத்த அனுமன், அந்தக் கற்களில் ராமனது பெயரை எழுதிக் கடலில் போட்டதால், அந்தக் கற்கள் தண்ணீரில் மூழ்காமல் இருந்தன. அனுமனின் செய்கையை ஆர்வத்துடன் கவனித்துக்கொண்டிருந்த ராமன், கற்களின் சக்தியைச் சோதிக்க விரும்பி, தன்னுடைய பெயரை எழுதாமல் ஒரு கல்லை எடுத்துக் கடலில் போட, அது மிதக்காமல் தண்ணீரில் அமிழ்ந்து போனது. பிறகு ராமன் அனுமனிடம், தான் போட்ட கல் மிதக்காமல் ஏன் அமிழ்ந்து போனது என்று கேட்டான். அதற்கு அனுமன், `ராமனைவிட ராமனது பெயருக்கு அதிக சக்தியுண்டு’ என்று பதிலளித்தான். 

அனுமன்

* விழுந்த அல்லது பிடுங்கப்பட்ட ஒருவனது பல்லும் அவனுடன் ஒரு தொடர்புகொண்டிருக்கிறது. கர்நாடகாவில் விழுந்த பல் சூரியனை புத்தகம்நோக்கித் தூக்கி எறியப்படுகிறது. இவ்வாறு செய்வதால், வெண்மையான புதிய பல் முளைக்கும் என்று நம்பப்பட்டது. 

* ஒருவன் கண்திருஷ்டியை ஏற்படுத்தக்கூடிய கொள்ளிக்கண் படைத்தவனா என்பதைச் சோதிக்க பல வழிகள் உள்ளன. ஏழு மிளகாய்கள், சாலையிலிருந்து பொறுக்கிய ஏழு சிறிய கற்கள், ஏழு சேரன் கொட்டைகள், ஒரு பெண்ணின் உதிர்ந்த தலைமுடிச்சுருள் ஆகியவற்றைச் சந்தேகிக்கப்படும் நபரின் முன் மூன்று முறை சுற்றிக் காட்டிவிட்டு தீயிலிட வேண்டும். தீயிலிட்ட மிளகாய்கள் மிகுந்த ஓசையுடன்  வெடித்துச் சிதறினால், சந்தேகப்படும் நபர் கண்திருஷ்டியை ஏற்படுத்தக்கூடிய கொள்ளிக்கண் படைத்தவர் என்பதை உறுதி செய்துகொள்ளலாம். 

* பூமி, `சேஷன்’ என்னும் பாம்பின் தலை மேல் இருப்பதாகவும், இந்தப் பாம்பு உலகின் பாவங்களை எண்ணி தலையை அசைக்கும்போது பூகம்பங்கள் ஏற்படுவதாகவும் இந்துக்கள் நம்புகிறார்கள். விஷ்ணுவின் அவதாரமான `வராகம்’ என்னும் பன்றி, பூமியைத் தன் கொம்புகளில் தாங்கியிருப்பதாகவும், பூமியைத் தன்னுடைய ஒரு கொம்பிலிருந்து மற்றொரு கொம்புக்கு மாற்றும்போது பூகம்பம் ஏற்படுகிறதென்பதும் இந்துக்களின் மற்றொரு நம்பிக்கையாகும். 

நன்றி; `இந்தியச் சடங்குகளும் நம்பிக்கைகளும்’. மூல ஆசிரியர்: ஜெ.அப்பாட். தமிழில்: ச.சரவணன். வெளியீடு: சந்தியா பதிப்பகம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close