இன்றைய புனிதர்... தன் இறப்பை ஆறு நாள்களுக்கு முன்பே அறிவித்த புனித பெனடிக்ட்

த்தோலிக்க கிறிஸ்தவர்கள், தினம் ஒரு புனிதர் என்ற வரிசையில் ஒவ்வொரு புனிதருக்கும் ஒரு தினத்தைக் குறிப்பிட்டு கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இன்றைய புனிதர், புனித பெனடிக்ட் அல்லது புனித ஆசீர்வாதப்பர்.

கிறிஸ்தவ மதத்தில் திருவழிபாட்டு முறைக்கு அடித்தளமிட்டவர் இவரே. தினந்தோறும் ஆராதனை செய்வது என்ற முறையையும் இவர்தான் அறிமுகப்படுத்தினார். இத்தகைய சிறப்பு வாய்ந்த பல பணிகளைச் செய்த இந்தப் புனிதரை சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான பாதுகாவலராகக் கொண்டாடி வருகின்றனர். இவரது நினைவுநாள் மற்றும் இவர் பெயர்கொண்ட திருவிழா ஆண்டுதோறும் மார்ச் மாதம் 21-ம் தேதி கிறிஸ்தவர்களால் பின்பற்றப்படுகிறது.

புனித பெனடிக்ட்

இத்தகைய சிறப்புவாய்ந்த புனித பெனடிக்ட் இத்தாலியில் நூர்சியா என்ற இடத்தில் கி.பி. 480-ம் ஆண்டு பிறந்தார். இவர் ரோமில் கல்வி பயின்றபோது இளைஞர்கள் மத்தியில் காணப்பட்ட கெட்ட பழக்கங்கள் மற்றும் அவர்கள் செய்த நீதிக்குப் புறம்பான செயல்கள் இவரை அதிரவைத்ததுடன், இவரை அங்கிருந்து வேறு இடத்துக்கு செல்லுமளவு மனம் வெறுத்துப்போனார். ஆனால், அப்படிப்பட்ட சூழலில் அவர் தம்மை முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணிக்கத் திட்டமிட்டார். அதன்படி ஒரு மலை உச்சிக்குச் சென்றவர் அங்கே எம்மானூஸ் என்ற முனிவரைச் சந்தித்தார். அவர் காட்டிய வழியில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இவரும் முனிவரானார்.

இவரது இந்த தவ வாழ்க்கையை அறிந்த மக்கள் பலரும் அங்கே சென்று இவரைச் சூழ்ந்துகொண்டு இவர் சொல்லும் போதனைகளைக் கேட்கத் தொடங்கினர். அப்போது உருவானதே `புனித பெனடிக்ட் துறவற சபை'. சபை உருவானதையடுத்து அவர் தனது சபை துறவிகளிடம் இயேசு கிறிஸ்துவிடமிருந்து எவராலும் பிரிக்கமுடியாத உறவுகொள்ளக் கற்றுத்தந்தார்.

புனித பெனடிக்ட் ஆலயம்

இவர் ஒரு தனிமைவிரும்பி என்றபோதிலும் அடிக்கடி மக்களைச் சந்தித்து வந்தார். இறைவனின் வல்லமையால் நோயாளிகளைக் குணமாக்கினார். வறுமையில் வாடியவர்களுக்கு உணவு, உடை அளித்தார். இப்படியாக பல்வேறு நற்காரியங்கள் செய்து வந்த இந்தப் புனிதர் தனது இறப்பை 6 நாள்களுக்கு முன்பே அறிவித்தார். அத்துடன் அவர் தன்னைப் புதைக்க கல்லறைக் குழியையும் தோண்டி வைத்தார். இந்தநிலையில் ஒருநாள் சிற்றாலயத்தில் நின்றபடி திருப்பலி நிறைவேற்றும்போது, தனது கைகளை உயர்த்தி ஜெபித்துக்கொண்டிருந்தபோது அவரது உயிர் பிரிந்தது. அத்தகைய சிறப்புவாய்ந்த புனிதருக்கான நாளை கத்தோலிக்கத் திருச்சபை இன்று கொண்டாடிவருகிறது.

மத்திய காலத்தின் தொடக்க நூற்றாண்டுகள் `பெனடிக்டின் நூற்றாண்டுகள்’ என அழைக்கப்படுகின்றன. ஏப்ரல் 2008-ம் ஆண்டு அப்போதைய போப் பதினாறாம் பெனடிக்ட், புனித பெனடிக்ட் தனது வாழ்வினால் ஐரோப்பிய கலாசாரம் மற்றும் பண்பாட்டில் அழிக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார்.

புனித பெனடிக்டின் பதக்கமானது முதன்முதலில் புனித பெனடிக்டின் பாதுகாவலுக்காக அணியப்பட்டது. இந்தப் பதக்கத்தின் ஒரு பக்கத்தில் அவரது உருவமும், மறுபக்கத்தில் சிலுவையும் அதைச் சுற்றியும் அதன்மீதும் லத்தீன் எழுத்துகளும் பொறிக்கப்பட்டிருக்கும்விதத்தில் அமையப்பெற்றுள்ளது. இந்தப் பதக்கமானது முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட காலம் சரியாகத் தெரியவில்லை. ஆனாலும் 1880-ம் ஆண்டு இவரது பிறந்த தினத்தின் நினைவாக வெளியிடப்பட்டது முதல் மக்களிடையே புகழ்பெறத் தொடங்கியது.

புனித பெனடிக்டைப்போலவே, `பதினாறாம் ஆசீர்வாதப்பர்’ எனப்படும் போப் பெனடிக்ட்டும் கத்தோலிக்கத் திருச்சபையில் பிரபலமானவர். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 265-வது போப்பாண்டவராக இருந்தவர். இவர் 1927-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ம் தேதி பிறந்தார். ஜெர்மனியைச் சேர்ந்த இவரது இயற்பெயர் ஜோசப் ராட்ஸிங்கர் என்பதாகும். இவர் 2005-ம் ஆண்டு தனது 78-ம் வயதில் போப் ஆக பொறுப்பேற்றார். இவர் தமக்கு முன்பிருந்தவர்களைப்போலவே போப் ஆக தேர்வு செய்யப்பட்டதும் தனது பெயரை மாற்றிக்கொண்டார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!