‘சிரிக்கும் புத்தர் சிலைவைத்தால் செல்வம் பெருகுமா?’ - சமய மெய்யியல் அறிஞர் என்ன சொல்கிறார்?

'சிரிக்கும் புத்தர் சிலையை வாங்கிவைத்தால் செல்வம் பெருகும்' என்ற நம்பிக்கை சீனா முழுவதும் இருக்கிறது. சீன பெங்சூயி முறையிலான வாஸ்து அமைப்புகளில் சிரிக்கும் புத்தரும் முக்கிய இடம் வகிக்கிறார். சீனப்பொருள்களான பூண்டு முதல் பொம்மைகள் வரை பல பொருள்கள் நம் இந்தியாவில் ஊடுருவத் தொடங்கிவிட்டநிலையில், சீன பெங்சூயி முறையும் பரவலாக ஊடுருவத் தொடங்கிவிட்டது. இதைத் தொடர்ந்து சிரிக்கும் புத்தர் சிலை விற்பனையும் பெரிய அளவில் சூடுபிடித்து விற்பனையாகி வருகிறது. ஆனால், 'சிரிக்கும் புத்தர் சிலையால் செல்வம் பெருகாது' என மறுக்கிறார், சமய மெய்யியல் அறிஞர் எஸ்.குருபாதம். “சிரிக்கும் புத்தர் சிலை (Laughing Budhhda) என இன்று பலரும் கொண்டாடி வருகிறார்கள். உண்மையில் அந்தச் சிரிக்கும் புத்தர் ஜென் துறவியான ஹொடாய் என்றால் நம்மில் பலரால் நம்ப முடியாது. ஹொடாய் தன் சிரிப்பால் மக்கள் மனதை ஒருமைப்படுத்தியவர். சிரிப்பால் விழிப்பு உணர்வைத் தூண்டியவர்.

சிரிக்கும் புத்தர்

இவர் ஜப்பானைச் சேர்ந்த ஒரு ஜென் பௌத்த ஞானி. கி.பி. 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். 'விதிமுறைகள் இல்லாதிருப்பதே விதிமுறை' என்னும் வாழ்க்கைச் சித்தாந்தத்தைக் கைக்கொண்டவர். ஜென் துறவிகள், பெரும்பாலும் சொற்கள் எதையும் பயன்படுத்தாமல் முயற்சியால் விழிப்புஉணர்வை ஏற்படுத்தியவர்கள். 

ஜென் துறவிகள், விடை எளிதில் காண முடியாத வினாக்களைத் தங்களுக்குள் தொடர்ந்து விவாதித்து மூளையைச் சுறுசுறுப்பாக இயக்கிக் கொண்டேயிருப்பார்கள். அதேநேரத்தில் உடலையும் உற்சாகமாக வைத்திருப்பார்கள். இவர்கள் இரண்டு அங்கிகளை மட்டும்தான் தங்களுடைய உடைமைகளாகக் கொண்டிருப்பார்கள். பணத்தைக் கையாலும் தொட மாட்டார்கள். யாசகர்களாக இருந்து யாசித்து உண்பவர்கள். விழிப்புஉணர்வு மிக்கவர்கள். ஒரே இடத்தில் நிலையாக இல்லாமல் ஊர் ஊராகச் சஞ்சாரம் செய்துகொண்டே இருப்பார்கள். ஆனால், இன்றைக்கு அந்த நிலை சற்று மாறிவிட்டது. 

 

சிரிக்கும் புத்தர் சிலை

ஜென் நிலை என்னும் பௌத்த மதத்தின் முழுச் செயல் முறையுமே 'எப்படி மனமற்ற நிலையைப் பெறுவது?' என்பதுதான். மகிழ்ச்சியை அடைவதற்கான மிக அழகிய பாதைகளில் மனமற்ற நிலையை அடைவதும் ஒன்று. ஞானி ஹொடாய் இந்தப் பாதையிலேயே பிரயாணம் செய்தவர். அந்தப் பாதையை மக்களுக்குக் காட்டியவர்.

ஜென் ஞானிகள் சொற்கள் அல்லாத சிரித்தல், கண் கொட்டாது பார்த்தல்,  உடல் அதிர்தல், கொட்டாவிவிடுதல், செருமல், ஓவியம் வரைதல், நிலைமையைக் குழப்பிவிடுதல் போன்ற செயல்கள் மூலம் மக்களுக்குத் திடீர் விழிப்பு உணர்வை ஏற்படுத்தியவர்கள்.

ஜப்பானில் வாழ்ந்த ஜென் ஞானி றின்சாய்  மக்களிடையே நிலைமையைக் குழப்பி திடீர் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவார்.
ஹொடாய், மக்கள் முன்பாக சிரித்து திடீர் விழிப்பு உணர்வை ஏற்படுத்திய மகான். இவரது சிரிப்பை நேருக்கு நேர் பெற்றவர்கள் தங்களுக்குள் உள் மாற்றத்தை உணர்ந்தனர். சிரிப்பு மூலம் தன் சக்தியை மற்றவர்களுக்குக் கைமாற்றியவர். 

சிரிப்பால் மக்கள் மனதை ஒருமைப்படுத்தி அவர்களைச் சக்தி மிக்கவர்களாக்கினார். இவரின் சிரிப்பு அத்தகைய உள் மாற்றத்தை ஏற்படுத்தியது. இவர், தான் ஒரு மகான் என்பதை அறியாத மகான்.

சீனா


ஹொடாய் ஜப்பானில் வாழ்ந்த மிகப்பெரும் ஜென் ஞானி. இவர் சீனா, கொரியா போன்ற அயல் நாடுகளுக்கும் பயணித்தவர். இவரை மக்கள் 'சிரிக்கும் புத்தர்' எனவும் 'மகிழ்ச்சிப் புத்தர்' எனவும் அன்பாக அழைத்தனர். 

'புத்தர்' என்றால் ஞானம் அடைந்தவர் என்றே பொருள். சித்தார்த்தர் ஞானம் அடைந்த பின்பே 'கௌதம புத்தர்' என அழைக்கப்பட்டார். சித்தார்த்தருக்கு முன்பும் பின்பும் பல புத்தர்கள் இருந்திருக்கிறார்கள். அத்தகையவர்களில் ஒருவர்தான் ஹொடாய். இவர் சொற்கள் எதையும் பயன்படுத்தாமல் தொந்தி வயிறு குலுங்கக் குலுங்கச் சிரித்து, பிளவுபட்ட மக்கள் மனங்களைச் சிரிப்பால் ஒருமைப்படுத்திய மிகப்பெரும் ஆன்மிக ஞானி.  

குருபாதம்ஊர் ஊராக, கிராமம் கிராமமாக, நகரம் நகரமாக, தெருத் தெருவாக, மூலை முடுக்கு எல்லாம் திரிந்து தொந்தி உடல் குலுங்கக் குலுங்க அடிவயிற்றிலிருந்து சிரிப்பை வெளிப்படுத்தினார். இவரைக் கண்டதும் மக்கள் சிரித்தனர். இவர் சிரிக்கும் அழகைப் பார்த்து மக்களும் மெய்மறந்து சிரித்தார்கள். இவர் இருக்கும் அந்தச் சூழலே மாறிவிடும். அது மக்கள் எல்லோருக்கும் தொற்றிக்கொள்ள அனைவருமே சிரிப்பார்கள். நாடே சிரித்தது.

சொற்கள் எதுவுமில்லாமல், போதனை எதுவுமில்லாமல் தன் அங்க அசைவால் சிரிப்பூட்டிய சிரிப்புப் புனிதர் இவர். மக்கள் இவருடன் சேர்ந்து சிரித்தனர், நடனமாடினர், குதூகலித்தனர். மக்கள் தங்களில் மாற்றத்தை உணர்ந்தனர்.

இறந்தவர்களைப் பார்த்துச் சிரித்தார். இவரது சிரிப்பிலும் ஆட்டத்திலும் 'இறந்தவர் இறக்கவில்லை, அவர் ஜெயித்துவிட்டார், அது இறப்பல்ல அது ஒரு புதிய வாழ்க்கை. மரணத்தால் யாரையும் அழிக்க முடியாது; மரணத்தைப் பார்த்துச் சிரித்தால் நாம் மரணத்தையே அழித்துவிடலாம். எனவே, மரணத்தைப் பார்த்துச் சிரியுங்கள்' என்ற செய்தி பொதிந்திருந்தது.

எதிர்பார்ப்புகள், அபிப்பிராயங்கள், எண்ணங்கள், கருத்தியல்கள், கோட்பாடுகள், தத்துவம், வழிமுறைகள் என்பவற்றைச் சுமந்துகொண்டு பார்ப்பவர்களுக்கு ஹொடாய் ஒரு புரியாத புதிர். ஹொடாயின் சிலைகள் சீன தேசத்தின் முக்கிய இடங்களில் எல்லாம் இருக்கின்றன. 
இப்படிப் பணத்தைக் கையால் தொடாமலேயே வாழ்ந்த ஹொடாயின் சிலையை (சிரிக்கும் புத்தர் சிலை) வாங்கி வைத்தால் சிரிப்பு வேண்டுமானால் வரலாமே தவிர, செல்வம் நிச்சயம் வராது.”
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!