வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (13/07/2017)

கடைசி தொடர்பு:18:55 (13/07/2017)

பட்டுக்கு மட்டுமல்ல... சுவாமி குடைகளுக்கும் காஞ்சிபுரம்தான்!

காஞ்சி என்றால் காமாட்சியும், பட்டுச்சேலையும்தான் நினைவுக்கு வரும். இந்தக் கோயில் நகரத்துக்கு இன்னொரு தெய்வீக அடையாளமும் உண்டு. அது... சுவாமி குடை! இந்தியாவில் எந்த ஊரில் உற்சவங்கள் நடந்தாலும், காஞ்சிபுரத்தில் இருந்துதான் தயாராகிப் போகின்றன சுவாமி குடைகள். ஸ்ரீரங்கம் நடை, காஞ்சிபுரம் குடை, திருப்பதி வடை... இவை மூன்றும் மிகவும் குறிப்பிடத்தகுந்த ஆன்மிக அடையாளங்கள். இந்த வரிசையில் வைத்துப் போற்றப்படும் காஞ்சிபுரம் சுவாமி குடைகளை சங்கரமடத்துக்கு எதிரில் உள்ள கங்கைகொண்டான் கல் மண்டபத்தில் இரண்டு குடும்பங்கள் பாரம்பர்யமாகத் தயாரித்து வருகின்றன.

சுவாமி குடை, ஆதிசேஷனின் அடையாளம். ஆதிசேஷன், இறைவனைச் சூழ்ந்து தாங்கி நிற்பதைப்போல இந்தக் குடைகள், வீதியுலாவின்போது இறைவனின் திருமேனியைச் சூழ்ந்து, தாங்கி நிற்கின்றன. பெருமாள் கோயில் மரபில் தொடங்கி, இன்று எல்லா ஆலயங்களிலும் சுவாமிக்குக் குடை சுமப்பது என்பது ஒரு சம்பிரதாயமாக இருக்கிறது.

இந்தக் குடை தெய்வீக அம்சம் பொருந்தியது என்பதால், அதை செய்வதில் தொடங்கி, சுமப்பது வரை ஏகப்பட்ட விதிமுறைகளும், வழிமுறைகளும் உள்ளன. இந்தக் குடையைத் தயாரிப்பவர்களுக்குக் கோயிலில் மிகுந்த மரியாதை தருவார்கள். மேலும், இவர்களது குடும்பங்களையும் கோயில் நிர்வாகமே தத்தெடுத்துக்கொள்ளும் வழக்கமும் ஒரு காலத்தில் இருந்தது.

சுவாமி குடை

எப்போதுமே கோயில் தொடர்பான அலங்காரப் பொருள்கள், கைவினைப் பொருள்கள் செய்வதில் ஆந்திரக் கலைஞர்களின் பங்களிப்பு மகத்தானது. சுவாமி குடையும் அவர்களின் கைங்கர்யம்தான். ஒரு காலத்தில் சுவாமி குடையென்றால், அது திருப்பதி குடைதான். காஞ்சிபுரத்தில் குடைசெய்யும் கைவினைஞர்களும்கூட திருப்பதியில் இருந்து வந்தவர்கள்தான்.

``ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொருவிதமான குடை இலக்கணம் இருக்கு. பெருமாள்னா, குடையில வெள்ளை கலர் வெல்வெட் போடணும். அதுலயும் வடகலை, தென்கலைக்கான குறியீடுகள்னு தனித்தனியா இருக்கு. அம்மனுக்கு மஞ்சள் கலர். குடையைப் பார்த்தே இன்ன சாமி வருதுனு புரிஞ்சுக்கலாம்...’’ என்கிறார் குடை செய்யும் கலைஞர் கிருஷ்ணமூர்த்தி.

சுவாமி குடை

“காஞ்சிபுரம் வரதராஜர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி மாதிரி பெருமாள் கோயில்கள்ல வருஷம் முழுக்க உற்சவம் நடக்கும். உற்சவத்துக்குக் குடைகள் வாங்கிக் கொடுக்கிறதை சிலபேர் கைங்கர்யமா பண்றாங்க. இங்கிருந்து வெளிநாட்டுக் கோயில்களுக்கெல்லாம் வாங்கி அனுப்புறாங்க. சுவாமிகளுக்குச் செய்யிறது பூச்சக்கரக் குடை. அம்மனுக்குப் பட்டுக் குடை. அதே மாதிரி மடாதிபதிகள், ஜீயர்கள் உலாவரும்போதும் குடை பிடிக்கிற வழக்கம் நம்மிடையே உண்டு. அது பெரம்புக் குடை. விஷேச காலங்கள்ல ஜமீன்கள், மன்னர் வாரிசுகளுக்குக் குடைபிடிக்கிற மரபு சில பகுதிகள்ல இருக்கு. அவங்களும் பெரம்புக் குடை ஆர்டர் கொடுப்பாங்க. பூச்சக்கரக் குடை ஆறு அடியில இருந்து, பதினாலரை அடி வரைக்கும் செய்வோம். காஞ்சிபுரம் வரதராஜருக்கும், அய்யம்பேட்டை கந்தப்பருக்கும் 20 அடியில பிரமாண்டமான குடைகள் செஞ்சு கொடுப்போம்.

குடையில எந்தக் காரணதுக்காகவும் கறுப்பு நிறத்தைச் சேர்க்கக் கூடாது. அதே மாதிரி தூக்கும்போதும் அது, கழண்டு, நகர்ந்துவிடக் கூடாது. அது அபசகுனம்னு சொல்லுவாங்க. ஒரு குடை 60 முதல் 100 வருஷம் வரைக்கும் உழைக்கும். இடையில துணியை மட்டும் மாத்தினாப் போதும். அது, சுவாமியோட பிரயாணம் பண்ற பொருள். அதுனால அதைச் செய்யும்போது மனசுல பயத்தோடவும் பக்தியோடவும் வேலை செய்யணும்’’ என்கிறார் குடை செய்யும் கலைஞர் ராமச்சந்திரன்.

குடை

ஜெயின் ஆலயங்களுக்கு முக்குடைகளும் செய்து தருகிறார்கள். பல்லக்கு மேல் போடும் பண்ணாங்கு, மேல்கட்டுத் துணி, எம்பிராய்டரி செய்யப்பட்ட தொம்பைகளையும் இவர்கள்தான் தயாரிக்கிறார்கள்.  

ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் குடை ஆர்டர் நிறைய கிடைக்கும்.. மார்கழி மாதத்தில் உற்சவங்கள் குறைவென்பதால் வேலை இருக்காது. ஒரு குடை செய்ய 10 முதல் 15 நாள்கள் வரை ஆகும். வெளிநாட்டுக் கோயில்களுக்கு ஆர்டர்கள் வந்தால், குடைசெய்து அழகாக ஒரு பெட்டியில் வைத்து பேக்செய்து அனுப்புகிறார்கள். 6,500 முதல் 20,000 ரூபாய் வரை இந்தக் குடைகள் விற்கப்படுகின்றன.

குடை செய்வதில் இருக்கும் நேர்த்தி, அதைத் தூக்குவதிலும் இருக்கிறது. வெண்தேக்கு, மூங்கில்... என எடை குறைவான மரங்களை உபயோகித்தாலும், அலங்காரத் துணிகளின் அளவு கூடுவதால் ஒரு குடை 65 முதல் 80 கிலோ வரை எடையைக் கொண்டிருக்கும். அவ்வளவு எளிதில் தூக்கிப் பிடிக்க முடியாது. அசைந்தாலோ, சாய்ந்தாலோ சாமிக் குற்றமாகிவிடும்.

குடை என்பது கௌரவத்தின் அடையாளம். மகத்தான பொருள்களை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் மரபின் தொடர்ச்சியாகவே சுவாமி குடை சம்பிரதாயம் உருவானது. வீதியுலாவைப் பரவசப்படுத்தும் இந்தக் குடைத் தயாரிப்பை அர்ப்பணிப்போடும் பக்தியுணர்வோடும் செய்துவருகிறது காஞ்சிபுரம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்