வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (14/07/2017)

கடைசி தொடர்பு:18:39 (14/07/2017)

அமர்நாத் யாத்திரை... வழி, வசதிகள், இறையருள், பேரானந்தம்! #AmarnathYatra

ந்துக்கள் அனைவருமே தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது திருக்கயிலாய யாத்திரை, அமர்நாத் யாத்திரை மேற்கொண்டு சிவப் பரம்பொருளை தரிசிக்கவே விரும்புவார்கள். அப்படிச் செல்வது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை என்றாலும், செல்லக்கூடிய பக்தர்களுக்கும் பல இடையூறுகள் இருக்கத்தான் செய்கிறது.

அமர்நாத் யாத்திரை

கடந்த 10-ம் தேதி அமர்நாத் யாத்திரைக்குச் சென்ற பக்தர்களின் வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 7 யாத்ரீகர்கள் இறந்ததாகத் தகவல் வந்தது. அதே நேரத்தில் பேருந்து ஓட்டுநர் சலீம் துரிதமாகச் செயல்பட்டு, பலரின் உயிரைக் காப்பாற்றிய செய்தியும் நம்மை நெகிழவைத்தது.

அமர்நாத் யாத்திரை ஆபத்து நிறைந்ததா... எங்கே இருக்கிறது அமர்நாத் குகைக்கோயில்? சற்று விரிவாகப் பார்ப்போம்.

அமர்நாத், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது. சுமார் 5,000 ஆண்டுகள் பழைமையான ஒரு குடைவரைக் கோயில். மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இங்கே பக்தர்கள் வந்து பனிலிங்க வடிவினராகக் காட்சிதரும் அமர்நாதரை தரிசித்து வழிபடுவது வழக்கம். இதற்குக் காரணம், இந்த மாதங்களில்தான் இங்குள்ள பனியால் உருவான பனிலிங்கநாதரைத் தரிசிக்க முடியும். இங்கே சென்று தரிசனம்செய்ய, இந்திய அரசின் சிறப்பு அனுமதி பெறவேண்டும்.

இந்தக் கோயில் ஜம்மு காஷ்மீரின் தலைநகரான ஶ்ரீநகரில் இருந்து 140 கி.மீ தொலைவில் உள்ளது. தனியார் வண்டிகள் என்றால், 'சந்தன் வாடி' என்கிற இடம் வரை செல்ல முடியும். அங்கிருந்து நடைப்பயணமாக குகைக் கோயிலுக்குச் செல்லலாம்.

அமர்நாத் யாத்ரீகர்கள்

ஶ்ரீநகர் பொதுப் பேருந்துகள் என்றால், ஶ்ரீ நகரில் இருந்து 90 கி.மீ தூரத்தில் உள்ள 'பாகல் காவ்' என்னும் இடம் வரைதான் செல்லும். அங்கிருந்துதான் நடைப் பயணம் ஆரம்பமாகிறது. பெரும்பாலான யாத்ரீகர்கள் இங்கிருந்தே தங்கள் நடைப்பயணத்தை ஆரம்பிக்கின்றனர்.

'பாகல் காவ்' எப்போதும் மழைச்சாரலுடன் பக்தர்களை வரவேற்கும் ஓர் இடம். இங்கே, நம்முடைய பொருள்களைத் தூக்கிவர 'டோலி' தூக்குபவர்கள் கிடைப்பார்கள். அதேபோல் நடக்க முடியாதவர்களைக் கூட்டிச்செல்ல கோவேறுக் கழுதைகளும் கிடைக்கின்றன. ஆனால், யாத்ரீகர்கள் இவர்களிடம் கவனமாக இருக்கவேண்டியது மிக அவசியம். நடந்தே செல்ல விரும்புபவர்கள் நடந்தே தங்கள் பயணத்தைத் தொடங்கலாம்.

பாகல் காவில் அனைத்து வசதிகளும் கொண்ட கூடாரங்கள் இருக்கின்றன. இங்கே யாத்திரைக்குச் செல்பவர்கள், குளித்து தயார் ஆவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன. அதுபோக நம்முடைய பசியைப் போக்குவதற்காக குருமாவுடன் கூடிய ரொட்டிகளும் நமக்கு இலவசமாகக் கிடைக்கும்.

யாத்திரை செல்பவர்கள் வாட்டர் பாட்டில்களை எடுத்துச் செல்லத் தேவை இல்லை. நமக்கு சுவையான ஓடை நீர் ஆங்காங்கே கிடைக்கிறது. ஆனால், யாத்திரை செல்பவர்கள் ஸ்வெட்டர், குல்லா, துண்டுகள் எடுத்துச் செல்வது மிக அவசியம். வழியில் உள்ள பாறைகளில் நாம் ஓய்வெடுத்துக்கொள்ளும்போது நாம் கொண்டு செல்லும் துண்டு நமக்குப் பேருதவியாக இருக்கும்.

அமர்நாத் யாத்திரைப் பயணம்

ஒவ்வொரு குழு புறப்படுவதற்கும் முன்பாக சாமியார்கள் சங்கு ஊத, யாத்திரை தொடங்குகிறது. 'ஹர ஹர மகாதேவ்', `ஜெய் போலேநாத்' போன்ற கோஷங்கள் விண்ணைப் பிளக்கின்றன. சிறிது தூரம் கடந்ததுமே எந்தக் கடைகளும் இருக்காது.

கற்களால் ஆன மேடான பகுதிகளில் துணிகளால் ஆன கொடிகளே நம் கண்களில் தென்படும். அதன் அருகில் பூஜை சாமான்கள் இருக்கும். இது அந்தப் பகுதியில் இறந்துபோனவர்களைப் புதைத்த இடம் . இந்த இடத்தைக் கோயிலாக நினைத்து தவறாகச் சிலர் வழிபடுவார்கள். இது கோயில் அல்ல, இறந்துபோனவர்களைப் புதைத்த இடம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

காலையில் பயணிக்க ஆரம்பித்தால், சரியாக மாலை சந்தன்வாடி என்கிற இடத்தை அடையலாம். இரண்டாம் கட்டமாக பக்தர்கள் தங்கும் இடம்தான் சந்தன்வாடி. அங்கே பக்தர்களுக்குச் சேவை செய்வதற்காகவே 'ஹர்வா' கிராம பக்தர்கள் காத்திருப்பார்கள். இவர்கள் பக்தர்களுக்குச் சாப்பாடு, குழந்தைகளுக்குப் பருத்தியால் ஆன ஆடைகள் உள்ளிட்ட பொருள்களையும் இலவசமாக வழங்குவார்கள்.

சந்தன்வாடியில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடம் 'பிச்சுடோப்'. தேளின் கொடுக்குபோல இந்த மலைப் பாதை இருப்பதால், இதற்கு இப்பெயர் வந்தது. இங்கும் தங்கி ஓய்வெடுக்க இடம் உண்டு. மேலும் சிறிது தூரம் சென்றால், 'சேஸ்பால்' என்னும் முகாம் இருக்கும். இந்தப் பகுதியில் இயற்கை நீரூற்றுகள் மிக அதிகம்.

பிச்சுடோப்

அடுத்ததாக `நககோடி கேம்ப்’ வரும். இங்கே அனைத்து மதத்தவராலும் வணங்கப்படும் ஆஞ்சநேயர் கோயில் ஒன்று உள்ளது. இங்கே சென்று ஆஞ்சநேயரைத் தரிசனம் செய்யலாம்.

அடுத்ததாக நாம் தங்கி ஓய்வெடுக்க 'வார்பல்' எனப்படும் செயற்கை கேம்ப் இருக்கும். அதற்கு அடுத்து, மலை உச்சியில் 'மேகாகன் கேம்ப்' இருக்கும். இங்கே நமக்கு முதலுதவிகள் அனைத்தும் கிடைக்கும். இங்கே மருத்துவர்களும், செவிலியர்களும் நமக்கான மருத்துவ உதவிகளைச் செய்வார்கள். இங்கே நமக்கு உணவுகளும் கிடைக்கும். அடுத்ததாக நாம் அடையும் இடம் மலைச்சிகரமான பபிபால். மிகவும் உயரமான இடம் என்பதால், மூச்சு தொடர்பான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், இங்கேயும் நமக்கு மருத்துவ உதவிகள் கிடைக்கும். அடுத்ததாக இறக்கமாக ஒரு 6 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வதற்கு சிரமமில்லாமல் இருக்கும். ஆனால், இந்தப் பகுதியில் காட்டு விலங்குகளின் நடமாட்டம் உண்டு. எனவே, கவனமாக இருக்கவேண்டியது அவசியம். அடுத்ததாக நாம் `பதஞ்சனி கேம்ப்’பை அடையலாம். இங்கே தங்கி ஓய்வெடுத்துக்கொள்ளலாம். அதற்கு அடுத்தது சங்கம் கேம்ப். பல பாதைகளில் இருந்து வந்தவர்கள் இங்கே சங்கமிப்பார்கள் என்பதால்தான் இந்தப் பெயர். இங்கே அனைத்து வசதிகளுடன்கூடிய சிறப்பு கேம்ப் உள்ளது. இங்கிருந்து சரியாக இரண்டு கிலோமீட்டர் தொலைவில் குகைக்கோயில் உள்ளது.

அமர்நாத் பனிலிங்கம்

குகைக்கோயிலை அடந்தால், நாம் லிங்கேஸ்வரனைத் தரிசிக்கலாம். அங்கே இந்துக்கள் மட்டும் அல்லாமல் இஸ்லாமிய மக்களும் வந்து லிங்கேஸ்வரனைத் தரிசிக்கிறார்கள். அது மட்டுமல்ல, `இங்கே சிவபெருமான் பனிலிங்க வடிவில் காட்சிதரும் அற்புதத்தைக் கண்டறிந்து சொன்னவரே ஓர் இஸ்லாமியர்’ என்றுதான் சொல்லப்படுகிறது.

மத நல்லிணக்கத்துக்கு நல் அடையாளமாகத் திகழும் அமர்நாத் குகைக் கோயில் அமைந்திருக்கும் பகுதியில் பலமுறை நிலச் சரிவு உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டாலும், வெகு விரைவிலேயே ஐயன் அமர்நாதரின் குகைக் கோயில் புதுப் பொலிவு பெற்றுவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்