ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?

'ஆஹா! ஆடி வந்துவிட்டது. அனைத்தையும் தள்ளுபடியில் வாங்கிக் குவிப்போம் என்று பலருக்கும் மனதில் உற்சாகம் துள்ளல் நடை போடும் நேரம் வந்துவிட்டது. ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பதற்கு தக்கபடி விவசாய வேலைகளைத் துரிதப்படுத்த விவசாயிகள் புறப்படுகிறார்கள்.‘ஆடியில் தேடிக் குளி’ என ஆடி 18-ம் பெருக்கை வரவேற்க தயாராகிவிட்டனர் பெண்கள். ஆடி வந்துவிட்டது, அம்மனுக்கு கூழ் ஊற்றி மனம் குளிர ஏற்பாடு செய்கின்றனர் ஆன்மிக அன்பர்கள். இப்படி எல்லோரும் ஆடியின் வருகையை ஆரவாரமாகக் கொண்டாடிக்கொண்டு  இருக்கும்போது, அடடா... ஆடியல்லவா வந்துவிட்டது என மனம் ஏங்குகின்றனர் புதுமணத் தம்பதிகள்.  இத்தனைச் சிறப்புகள் இருக்கும்போது, புதிதாகத் திருமணம் ஆன பெண் ஏன் முதல் ஆடி மாதத்தில் தன் கணவரைப் பிரிந்திருக்கவேண்டும்? ‘ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? என்பது பற்றி  வாஸ்து மற்றும் ஜோதிட நிபுணர் யோகஸ்ரீ மணிபாரதியிடம் கேட்டோம்.

புதுமணத் தம்பதி

 

ஆடியும் புனிதமும்
சூரியனை பூமி சுற்றி வரும் 360 டிகிரி வட்டப் பாதையில், பூமி சூரியனைக் கடக்கும் ஒவ்வொரு 30 டிகிரியும் ஒவ்வொரு மாதமாகின்றன. இந்த 12 மாதங்களும் உத்தராயணம், தட்சிணாயணம் என்று பிரிக்கப்பட்டிருக்கின்றன.
இதில் ஆடி மாதம் தட்சிணாயணத்தின் தொடக்க மாதமாக அமைகின்றது. வெயில் கொடுமையில் இருந்து பூமி விடுபடுகிறது. எனவே ஆடி மாதம் சிறப்பு பெறுவதுடன், அம்மனுக்கு உகந்த மாதமாகவும் வழிபடப்படுகிறது.
ஜோதிட சாஸ்திரப்படி, பூமியின் வடகிழக்குப் பகுதி கன்னி வீடாக அமைகின்றது. பூமிக்கும் ஆகாயத்துக்கும் உள்ள தொடர்பில் கன்னியிலிருந்துதான் காஸ்மிக் அலைகள் மீனத்தை நோக்கி வருகின்றன. மணிபாரதி
ஆனால், காந்தப் புயலோ கும்பம், மகரத்திலிருந்து கடகம், சிம்மம் நோக்கி பாய்கின்றது. இந்த வகையில், வடக்கில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் காந்தப் புயல் கடக வீட்டில் அதாவது ஆடிமாதத்துக்கு அதிக ஆற்றலுடன் வருகின்றது 
இதனையே, கடகம் ஆடி முதல் மேல் வரிசையாக ஆனி, வைகாசி, சித்திரை, பங்குனி, மாசி ஆகிய மாதங்கள் சக்தியான பராசக்தியாகவும், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம் சிவன் எனும் பரமேஸ்வரராகவும் கொள்ளப்படுகிறது.
திருமணம் செய்கிறார்களே?
ஆடிமாதத்தில் புது மணத்தம்பதிகள் ஒன்றாகச் சேர்ந்தால், அவர்களுக்கு சித்திரை மாதத்தில் குழந்தைகள் பிறக்கும். அப்போது வெயில் உக்கிரமாக இருக்கும், போதாக்குறைக்கு அக்னி நட்சத்திரமாக இருக்கும். அதனால்தான் புது மணத் தம்பதியைப் பிரித்து வைத்தனர்.  

புதுமணத் தம்பதி

ஆனால், 'பஞ்சாங்கங்களில் ஆடியில் முகூர்த்தம் உள்ளதே, சில வகுப்பினர் ஆடியில் திருமணம் செய்கின்றார்களே', என்றெல்லாம் பலர் கேள்விகளைக் கேட்கின்றனர். இதில் மனக் கட்டுப்பாட்டுக் கொள்கையைப் பின்பற்றும் சமூகத்தினர் அல்லது மனக் கட்டுப்பாடு உள்ளவர்கள், ஆடியில் திருமணம் செய்யலாம். சாந்தி முகூர்த்தத்தை ஆவணியில் சுபநாள்களாகப் பார்த்துத்தான் அமைப்பார்கள்''  என்று ஆடியைப் பற்றி பலவிதமான தகவல்களை அடுக்கினார். 
புனித நீராடல்
ஆடி 18-ம் பெருக்கு நாள் என்பது தட்சணாயன காலத்தில் முதல் 18 நாள்கள் சிறப்பானதாக அமைகின்றது. இந்த நாளில் புது மணத்தம்பதிகள் ஆறு, குளம், கடலில் நீராடி மனக்கட்டுப்பாட்டுடன் முன் 18 நாள்களும் பின் 18 நாள்களுமாக விரதம் இருந்தால், வம்சம் தழைத்தோங்கும். 

வம்சம் என்பதே ஆணை மையமாக வைத்துத்தான் கணக்கு எடுக்கப்படும். இதில் பெண் புறக்கணிப்புக்கு இடமில்லை. ஏனெனில், பெண் கட்டிக் கொடுத்து, கணவன் வீட்டுக்குச் சென்று விடுகின்றாள். அதன்பின் அவளுக்குத் தன் வீடு, வம்சம் என்பது எல்லாம் கணவனை அடிப்படையாக வைத்துத்தான். வணங்கும் குலதெய்வமும் மாறும். அதனால்தான், திருமணம் ஆனவுடன் தான் ஒரு பெண்தான் என்பதையும் மறந்து, ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்படுகின்றாள்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!