பிருந்தாவனத்தை மீட்க ஆங்கிலேயருக்குக் காட்சி தந்த குரு ராகவேந்திரர்!

பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச
பஜதாம் கல்ப விருக்ஷாய நமதாம் காமதேனவே

கற்பக விருட்சமாகவும் காமதேனுவாகவும் திகழ்ந்து தம்முடைய ஜீவித காலத்திலும் ஜீவ சமாதிக்குப் பிறகும் பக்தர்களின் வேண்டுதல்களை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் மகான் ஶ்ரீராகவேந்திரர்.

ராகவேந்திரர்

ஶ்ரீராகவேந்திரரின் ஜீவ சமாதி அமைந்திருக்கும் தலம் ஆந்திர மாநிலத்தில் அமைந்திருக்கும் மந்த்ராலயம் ஆகும். துங்கபத்ரா நதியின் கரையில் அமைதி தவழும் சூழலில் ஜீவ சமாதியில் இருந்தபடியே தம்மை தரிசித்து வழிபடும் பக்தர்களுக்கு அருள்புரிந்த வண்ணம் இருக்கிறார் மகான் ஶ்ரீராகவேந்திரர். அந்த இடத்தில்தான் பிரகலாதன் யாகம் செய்தார். எனவே, பிரகலாதனின் அம்சமாக அவதரித்த மகான் ஶ்ரீராகவேந்திரர், தம்முடைய ஜீவ சமாதி அமைவதற்காக அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார்.

அப்பகுதியை ஆண்டு வந்த சுல்தான் மசூத்கான், மகானின் திருவுள்ளத்தை அறிந்து, அந்த இடத்தை அவருக்கு தானமாக வழங்கினார்.
அந்த இடத்தில்தான் 1671-ம் ஆண்டு உயிருடன் இருக்கும்போதே பிருந்தாவனத்தில் அமர்ந்து ஜீவ சமாதி அடைந்தார். 

மகான் ராகவேந்திரர் ஜீவ சமாதி அமைந்திருக்கும் இடத்துக்கு 1812-ம் வருடம் ஒரு சோதனை ஏற்பட்டது. அப்போதைய பிரட்டிஷ் அரசாங்கம் ஒரு சட்டம் கொண்டு வந்தது. அதன்படி கோயில் இடத்துக்கான வாரிசுகள் யாரும் இல்லையென்றால், அந்த இடத்தை அரசாங்கமே எடுத்துக்கொள்ளும். அந்தச் சட்டத்தின் காரணமாக பிருந்தாவனத்துக்கு தானமாகக் கொடுக்கப்பட்ட நிலத்தின் மானியம் முடிந்துவிட்டபடியால், அந்த இடத்தை எடுத்துக்கொள்ள அரசாங்கம் முடிவு செய்திருந்தது. ஆனால், பல வருடங்களுக்கு முன்பாக அப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் மானியமாகக் கொடுத்த அந்த இடத்தை பிரிட்டிஷ்  அரசாங்கம் கைப்பற்ற பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

ராகவேந்திரர்

மக்களின் எதிர்ப்பைக் கண்ட பிரிட்டிஷ் அரசாங்கம், அப்போது பெல்லாரி மாவட்ட ஆட்சியராக இருந்த சர். தாமஸ் மன்றோவின் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, எப்படியாவது மக்களின் எதிர்ப்பை பக்குவமாக சரிசெய்யச் சொல்லி உத்தரவிட்டது.
தாமஸ் மன்றோவும் தன்னுடைய குழுவினருடன் மந்த்ராலயத்துக்கு விரைந்தார். பிருந்தாவனத்தின் வாசலில் தன் காலணிகளையும், தலையில் அணிந்திருந்த தொப்பியையும் கழற்றி வைத்துவிட்டு உள்ளே சென்றார். உடன் வந்தவர்களும் உள்ளே சென்றனர். ஜீவ சமாதி இருந்த இடத்துக்கு அருகில் சென்ற தாமஸ் மன்றோ, அங்கே யாரோ இருப்பதுபோல் வணக்கம் செலுத்தியதைக் கண்டு உடன் வந்தவர்கள் ஆச்சர்யப்பட்டனர். அவர்களுடைய ஆச்சர்யத்தை மேலும் அதிகரிப்பதுபோல் இருந்தது அடுத்து நடைபெற்ற நிகழ்ச்சி.

தாமஸ் மன்றோ யாருடனோ சத்தமாக ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தார். சுற்றிலும் இருந்தவர்களுக்கு அவர் யாருடன் உரையாடுகிறார் என்பதே புரியவில்லை. காரணம் எதிரில் யாருமே இல்லை. மேலும் தாமஸ் மன்றோ பேசும் குரல் மட்டும்தான் அவர்களுக்குக் கேட்டதே தவிர, அவருடன் பேசும் மற்றவரின் குரல் கேட்கவில்லை. மந்த்ராலயத்தில் அமைந்திருக்கும் பிருந்தாவனம் பற்றியும், அந்த இடம் தானமாக வழங்கப்பட்டது பற்றியும், பிரிட்டிஷ் அரசாங்கம் இயற்றி இருக்கும் சட்டம் பற்றியும் தாமஸ் மன்றோ யாரிடமோ சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தார்.

நீண்ட நேரம் நடைபெற்ற உரையாடலின் முடிவில், தன்னுடைய பாணியில் பிருந்தாவனத்துக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு வெளியில் வந்தார் தாமஸ் மன்றோ. அதுவரை திகைத்து நின்றுகொண்டிருந்த மற்றவர்கள், அவர் யாரிடம் பேசிக்கொண்டிருந்தார் என்று கேட்டனர். 
தனக்கு ஏற்பட்ட அனுபவம் தந்த பிரமிப்பில் இருந்து விடுபடாத தாமஸ் மன்றோ, ''பிருந்தாவனத்தின் அருகில் காவி ஆடை அணிந்து, பிரகாசமான கண்களுடன் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவருக்கு நான் அரசாங்க மான்யம் பற்றி சில விவரங்களைத் தெரிவித்தேன். அவரும் அது பற்றி என்னிடம் உரையாடி, மடத்தின் சொத்துகள் பற்றிய விவரத்தைத் தெளிவாகத் தெரிவித்துவிட்டார். அவர் கூறிய விளக்கங்களில் இருந்து இந்த இடம் மடத்துக்குத்தான் சொந்தம் என்பது நிரூபணமாகிவிட்டது. அவருடைய ஒளி வீசும் கண்களும், கம்பீரக் குரலும், சுத்தமான ஆங்கில உச்சரிப்பும் என்னை மிகவும் திகைக்கச் செய்துவிட்டது'' என்று பரவசத்துடன் கூறினார்.

ராகவேந்திரர்

உடன் வந்தவர்கள் தாங்கள் அப்படி எதுவும் பார்க்கவில்லை என்று கூறியதும் மேலும் வியப்பின் உச்சிக்கே சென்றார் தாமஸ் மன்றோ. மேலும் பிருந்தாவனத்தில் இருந்தபடி அருளும் மகானுடன் தனக்குப் பேசக் கிடைத்த வாய்ப்பை பெரும் பேறாகக் கருதிய தாமஸ் மன்றோ, அந்த இடம் மடத்துக்கு உரிமையானதுதான் என்று தகவல் அனுப்பினார். மகானின் தரிசனமும், அவருடன் உரையாடும் பாக்கியமும் பெற்ற காரணத்தினால், விரைவிலேயே தற்காலிக ஆளுநராகப் பொறுப்பேற்கும் பாக்கியத்தைப் பெற்றார். ஆளுநராகப் பொறுப்பேற்றதுமே அவர் கையெழுத்து போட்ட முதல் உத்தரவு, மடத்துக்கு நிலம் அளிப்பது தொடர்பானதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் தொடர்பான விவரங்கள் அனைத்தும் அப்போதைய சென்னை ராஜதானி கெசட்டிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மந்த்ராலய மகானின் மலரடிகள் போற்றி! போற்றி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!