எளியவர்களுக்கும் இறையுணர்வு ஊட்டிய சிவாஜி கணேசன்... பக்திப் பாடல்கள், காட்சிகள்! #SivajiGanesan

சிவாஜி கணேசன்... உச்சரிக்கும்போதே தனி மரியாதையை ஏற்படுத்தும் பெயர். நடிப்புக்கு இலக்கணம்... இந்திய சினிமாவின் தவிர்க்க இயலாத ஆளுமை... நடிப்புக்கலையில் சமுத்திரம்... கலைத்துறை என்றென்றும் ஜொலித்து மின்னும் நட்சத்திரம்... எவரோடும் ஒப்பிடமுடியாத தனித்துவம் வாய்ந்தவர்... என நீளும் பட்டியலுக்குச் சொந்தக்காரர் சிவாஜி கணேசன். குழந்தை நட்சத்திரம் முதல் சூப்பர் ஸ்டார் வரை 'சிவாஜி கணேசன்தான் எங்கள் ஆதர்சம்' எனச் சொல்லும் ஒப்பற்ற பெருமைக்குச் சொந்தக்காரர்.

சிவாஜி கணேசன் 

சிவாஜி, விநாயகப் பெருமான் மீது ஆழ்ந்த பக்திகொண்டவர். திருப்பதி, திருவானைக்காவல், தஞ்சை மாரியம்மன் ஆகிய மூன்று கோயில்களுக்கும் யானையைப் பரிசாக வழங்கியவர். இவர் வெள்ளித்திரையில் கால்பதிப்பதற்கு முன்னர் நடித்தது நாடகத்தில். திரைத்துறைக்கு வந்த பிறகும்கூட, அவ்வப்போது நாடகத்தில் நடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் நடித்த முதல் நாடகம் `ராமாயணம்.’  அப்போதே அவரின் உயிர்ப்புள்ள நடிப்புத் திறனை வெகுவாகப் பாராட்டித் தள்ளியிருக்கிறார் தந்தைப் பெரியார்.

தெலுங்கில் ஒன்பது படங்களிலும், இந்தியில் இரண்டு படங்களிலும், ஒரு மலையாளப் படத்திலும், 270 தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார் சிவாஜி கணேசன். இது தவிர, கௌரவத் தோற்றத்தில் 19 படங்களில் நடித்திருக்கிறார். இவரின் பல படங்கள் தமிழ் சினிமாவின் மைல்கற்கள் என்று சொல்லும் அளவுக்குப் பெயர் பெற்றவை.

இவரின் முதல் படமான 'பராசக்தி' 1952-ம் ஆண்டில் வெளியானது. ஆனாலும், இவர் பக்திப் படங்களில் பாதம் பதிக்க ஆறு வருடங்கள் ஆனது. 1958-ம் ஆண்டுதான் முதன்முதலில் 'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் நடித்தார் சிவாஜி.

புதிய பறவையில் சிவாஜி  

செவாலியே பட்டம் பெற்றவர். கலைமாமணி விருது, பத்மஶ்ரீ விருது, பத்ம பூஷண் விருது, தாதாசாகேப் பால்கே விருது... எனப் பல விருதுகளை தனது நடிப்பால் தன்வசம் ஆக்கியவர் என்று சொல்வதைவிட, இவரின் நடிப்புக்கு மயங்கி அந்த விருதுகள் இவரிடம் வந்து சேர்ந்தன என்று சொல்லலாம். இப்போது சிவாஜி கணேசன் பெயரிலேயே பல விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிவாஜி நடித்த நூற்றுக்கணக்கான படங்களில் பக்திப் படங்கள் தனித்துவமானவை. அப்பர், சுந்தரர், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் போன்ற ஆன்மிகப் பெரியவர்களை பாமரர்களும் அறியும்படி செய்தது அவர் நடிப்பின் உச்சம் என்றே சொல்லலாம். சில ஆண்டுகளுக்கு முன்னர், மார்கழி மாத காலை நேரங்களில், சிவாஜி நடித்த `திருவிளையாடல்’, `சரஸ்வதி சபதம்’ ஒலிச் சித்திரங்கள் ஒலிக்காத கோயில்களே இல்லை என்று சொல்லலாம். அவருடைய கம்பீரமான குரல் தூய தமிழை உச்சரிக்கும் அழகே அலாதியானது. அந்தச் சந்தர்ப்பத்தை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தவை பக்திப் படங்களே!

நடிகர் திலகம் நடித்த பக்திப்படங்களின் சில பாடல்களும் காட்சிகளும் இங்கே...

கர்ணாக சிவாஜி

 

* திருவிளையாடல்

1965-ம் ஆண்டு வெளியானது. சிவன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் வரும் 'சிவாஜி - நாகேஷ் (புலவர் - தருமி)' காம்பினேஷன் சீன் இன்றும் அனைவரின் ஆல்டைம் ஃபேவரைட். இந்த காட்சி படமாக்கப்பட்டபோது, இயக்குநர் ஏ.பி.நாகராஜன், சிவாஜியிடம், ``இந்தக் காட்சியில் உங்களைவிட நாகேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். எனவே, இதை படத்திலிருந்து நீக்கிவிடலாம்’’ என்று கூறினாராம். ``வேண்டாம்! அதுதான் ஒரு கலைஞனுக்குக் கிடைக்கும் பரிசு’’ என்று கூறினாராம் சிவாஜி. இதைத்தான் பேசிய எல்லா மேடைகளிலும் சொல்லத் தவறியதில்லை நடிகர் நாகேஷ்.

 


 

* கந்தன் கருணை

1967-ம் ஆண்டில் வெளியானது. `வீரபாகு’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் இடம்பெற்ற இவரின் ஸ்டைலிஷான நடை ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாதது..


 

* சரஸ்வதி சபதம்

இரட்டை வேடம். வித்யாபதி, நாரதர் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். `அகர முதல எழுத்தெல்லாம்...’ என்ற பாடல் என்றும் மறக்க முடியாத இனிய கீதம்.

 


 

* திருவருட் செல்வர்

1967-ம் ஆண்டில் வெளியானது. திருநாவுக்கரசர் (அப்பர்) கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தின் போஸ்டர்களைப் பார்த்துவிட்டு, காஞ்சி பெரியவா சிவாஜி கணேசனை அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.

 


 

* திருமால் பெருமை

1968-ம் ஆண்டில் வெளியானது. பெரியாழ்வார் கதாபாத்திரத்தில் நடித்து இவர் பாடியதாக வரும் 'ஹரி ஹரி கோகுல ரமணா...' பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும் பாடல்.

 

 

* சம்பூர்ண ராமாயணம்

1958-ம் ஆண்டில் வெளியானது. பரதன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் ராமனாக என்.டி.ராமாராவ் கலக்கியிருப்பார். ஆனாலும், பரதனாக பட்டையைக் கிளப்பியிருப்பார் சிவாஜி கணேசன். 'பரதனை நேரில் கண்டது போலவே இருந்தது' என்று அப்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் ராஜகோபாலாச்சாரி பாராட்டியிருந்தார்.

 


 

* ஶ்ரீவள்ளி

1961-ம் ஆண்டில் வெளியானது. முருகப் பெருமான் கதாபாத்திரத்துக்கும் அப்படியே பொருந்திப் போயிருந்தார் சிவாஜி.

 


 

* கர்ணன்

1964-ம் ஆண்டில் வெளியானது. கர்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ராமாயணத்தில் பரதனாக பட்டையைக் கிளப்பியிருந்தவர், மகாபாரதத்தில் கர்ணனாகக் கலக்கியிருப்பார். 'உள்ளத்தில் நல்ல உள்ளம்...' என்ற கர்ணனின் மரணக் காட்சியில் வரும் பாடல் சிவாஜியின் புகழ் மகுடத்தில் ஒரு வைரக்கல்.

 

 

 

 

 

 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!