வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (22/07/2017)

கடைசி தொடர்பு:20:38 (22/07/2017)

ஆடி அமாவாசை... முன்னோருக்கு மட்டுமல்ல, அம்பிகை வழிபாட்டுக்கும் உகந்த நாள்!

அமாவாசைக்கு முன்பு வருவது போதாயன அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. போதாயன அமாவாசை என்பது போதாயனர் என்ற ரிஷியின் பெயரால் அழைக்கப்படுகிறது. போதாயனர் என்பவரின் சீடர் ஆபஸ்தம்பர். ஒருமுறை போதாயனருக்கும் அவருடைய சீடருக்கும் திதிகளை நிர்ணயிப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஆபஸ்தம்பர் தனியாகச் சென்று சூத்திரம் இயற்றினார். அதற்கு ஆபஸ்தம்ப சூத்திரம் என்று பெயர். இரண்டு முறைகளிலுமே வைதிக காரியங்களைச் செய்யும் முறை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. போதாயனரின் கருத்தின்படி அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமை திதி அன்று மாலை சூரிய அஸ்தமனத்துக்குள் முடிந்து துவிதியை திதி வந்துவிட்டால், அமாவாசையின் முதல் நாளான சதுர்த்தசியன்றே திதி கொடுக்கவேண்டும் என்று கூறி இருக்கிறார். அதுவே போதாயன அமாவாசை. ஆனால், திதி கொடுக்கும் நாளில் அமாவாசை இருக்கவேண்டும் என்பது ஆபஸ்தம்பரின் கருத்து. இதுதான் அமாவாசைக்கும் போதாயன அமாவாசைக்கும் உள்ள வித்தியாசம்.

ஆடி அமாவாசை

இந்த போதாயன அமாவாசைக்குக் காரணமாக ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. குருக்ஷேத்திர யுத்தம் தொடங்கப் போகும் நேரம். யுத்தத்தில் வெற்றி பெறுவதற்காக களபலி கொடுப்பது வழக்கம். களபலி கொடுப்பதற்கு உகந்த நாளும் நேரமும் தெரிந்துகொள்வதற்காக, ஜோதிடத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்த சகாதேவனிடம் சென்று ஆலோசனை கேட்டான் துரியோதனன். கேட்பவன் பகைவனே ஆனாலும் சத்தியமே பேசவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த சகாதேவன், அமாவாசையன்று களபலி கொடுத்தால், யுத்தத்தில் வெற்றி கிடைக்கும் என்று கூறிவிட்டான்.

சகாதேவன் கூறியபடி துரியோதனன் அமாவாசையன்று களபலி கொடுத்தால் தாங்கள் வெற்றி பெறுவது கடினம் என்பதைப் புரிந்துகொண்ட தர்மபுத்திரர் கிருஷ்ணரிடம் சென்று ஆலோசனை கேட்டார். தர்மம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக எத்தகைய பழிச்சொல்லையும் ஏற்றுக்கொள்ளும் கிருஷ்ணர் ஒரு தந்திரம் செய்தார். அமாவாசைக்கு முந்தின நாள் ஒரு குளத்தின் கரையில் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்துக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த சூரியனும் சந்திரனும் கிருஷ்ணரிடம் வந்து, 'நாங்கள் ஒன்றாக சேரும் நாள்தானே அமாவாசை. நாளைதானே நாங்கள் ஒன்றாக சேரும் நாள். ஆனால், நீங்கள் இன்று தர்ப்பணம் கொடுக்கிறீர்களே?' என்று கேட்டபோது, கிருஷ்ணர் கள்ளச் சிரிப்பு சிரித்தபடி, 'அதுதான் இப்போது ஒன்றாக வந்திருக்கிறீர்களே!' என்று விஷமத்துடன் கூறினார்.

கிருஷ்ணர் தர்ப்பணம் கொடுப்பதைப் பார்த்த துரியோதனன், சகாதேவன் சொன்னபடியே அன்றே களபலி கொடுத்துவிட்டான். மறுநாள் உண்மையான அமாவாசையன்று களபலி கொடுத்தனர் பாண்டவர்கள். அதனால் வெற்றியும் பெற்றனர்.

ஆடி அமாவாசை மற்றும் அதற்கு முந்தைய தினம் ஆகியவற்றின் மகிமையை விளக்கும் வகையில் ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது. அழகாபுரி என்ற தேசத்தின் அரசர் அழகேசன். அவருக்குப் பிறகு தேசத்தை ஆட்சி செய்ய வாரிசு இல்லை. அதற்காக புத்திரபாக்கியம் வேண்டி மனைவியுடன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். அதன் பயனாக அவருக்கு ஒரு மகனும் பிறந்தான். குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் அரசர் இருந்தபோது, 'உன் மகன் இளமைப் பருவத்தை அடையும்போது மரணம் அடைவான்' என்பதாக ஓர் அசரீரி ஒலித்தது. மேலும் இறந்த பிறகு அவனுக்குத் திருமணம் செய்து வைத்தால், வரப்போகும் மனைவியின் மாங்கல்ய பலத்தினால் மறுபடியும் அவன் உயிர் பெறுவான் என்றும் அந்த அசரீரி கூறியது.

புனித நீராடல்

அசரீரி கூறியதுபோலவே அரசரின் மகனும் இளமைப் பருவம் அடைந்தபோது இறந்து போனான். அரசர் இறந்துபோன தன் மகனுக்குத் திருமணம் செய்து வைக்கப் பெண் தேடியபோது, பெற்றோர் இல்லாமல் உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி விரக்தியுடன் வாழ்ந்து வந்த ஒரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து வைத்துவிட்டனர். அன்று இரவு அந்தப் பெண்ணையும், அரசரின் இறந்துபோன மகனையும் காட்டில் கொண்டு சென்று விட்டுவிட்டு வந்தனர்.

அந்தப் பெண் தன் கணவன் உறங்குகிறான் என்று நினைத்துக்கொண்டிருந்தாள். பொழுது விடிந்ததும்தான் தான் திருமணம் செய்துகொண்டவன் இறந்துவிட்டிருப்பது அவளுக்குத் தெரிந்தது. அழுது புரண்டு கதறினாள். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தாள். தனக்குத் தெரிந்த தெய்வங்களை எல்லாம் அழைத்துக் கதறி அழுதாள். பேதைப் பெண்ணின் அழுகுரல் கேட்டு மனம் இரங்கிய அம்பிகை, இறந்துபோன அவளுடைய கணவனை உயிர் பெறச் செய்தாள்.

தனக்கு அருள் புரிந்த தேவியிடம் அந்தப் பெண், ''தாயே ஈஸ்வரி, இருண்டு போன என் வாழ்க்கையை மறுபடியும் பிரகாசிக்கச் செய்தது போலவே, இந்த நாளில் உன்னை வழிபடும் பெண்களுக்கும் அருள் புரியவேண்டும்'' என்று பிரார்த்தித்துக் கொண்டாள்.

இந்த நிகழ்ச்சி நடந்தது ஆடி அமாவாசைக்கு முந்தின நாள் ஆகும்.

மற்றவர்களின் நன்மைக்காக வேண்டிக் கொண்ட அந்தப் பெண்ணின் உயர்ந்த குணத்தைப் போற்றும் வகையில், ''மகளே, நீ வேண்டிக் கொண்டபடியே இந்த நாளில் உனக்கு நான் அருள்புரிந்த கதையைப் படித்துவிட்டு, மறுநாள் ஆடி அமாவாசையன்று விரதம் இருந்து, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை சுமங்கலிப்பெண்களுக்குத் தந்து என்னை வழிபடுபவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பதுடன், அவர்கள் இல்லத்தில் அஷ்ட ஐஸ்வர்யங்களும் உண்டாகும்'' என்று வரம் தந்து அருளினாள். அந்த வகையில் ஆடி அமாவாசை முன்னோர் வழிபாட்டுக்கு மட்டுமல்லாமல், அம்பிகையை வழிபடுவதற்கும் உகந்த நாளாகத் திகழ்கிறது.

ஆடி அமாவாசை

மாதம்தோறும் வரும் அமாவாசை திதியில் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்பது சாஸ்திரம். மாதம்தோறும் கொடுக்க முடியாவிட்டாலும், ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய தினங்களில் கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.

சாஸ்திரப்படி ஆடி முதல் மார்கழி முடிய உள்ள காலத்தில் நம்முடைய முன்னோர்களான பித்ருக்கள் நம்மைப் பார்ப்பதற்காக இந்த உலகத்துக்கு வருகின்றனர். அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை. எனவே, அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போலவும், அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுப்பதுபோலவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம். அவர்கள் பூமிக்கு வந்து சேரும் நாள் மகாளய அமாவாசை ஆகும். எனவே, அன்று அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுக்கவேண்டும். பித்ருலோகத்தில் இருந்து வந்த நம் முன்னோர்கள் திரும்பவும் பித்ருலோகத்துக்குச் செல்லும் நாள் தை அமாவாசை. அன்று அவர்களை வழியனுப்பும் விதமாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும். இந்த மூன்று அமாவாசை தினங்களில் நாம் கண்டிப்பாக நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.

முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த தலங்கள் பல இருக்கின்றன. அவற்றுள் ராமேஸ்வரம் மிகவும் விசேஷமான தலம் ஆகும். ஆடி அமாவாசையன்று ராமேஸ்வரத்தில் கடல் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அளவற்ற நன்மைகளைத் தரவல்லது. குறிப்பாக அக்னி தீர்த்தத்தில் நீராடுவது மிகவும் விசேஷம்.

ஆடி தர்ப்பணம்

ஆடி அமாவாசையன்று பித்ரு வழிபாட்டை காலையிலேயே தொடங்கிவிடவேண்டும். ஏதேனும் ஒரு தீர்த்தக் கரைக்குச் சென்று நீராடி, தர்ப்பணம் கொடுத்து வரவேண்டும். மதியம் வீட்டில் மறைந்த நம் முன்னோர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து, விளக்கேற்றி, ஓர் இலையில் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளைப் படைக்கவேண்டும். பின்னர் தீபாராதனை காட்டி, காகத்துக்கு உணவளிக்க வேண்டும். பிறகு வீட்டில் உள்ள பெரியவர்களை முதலில் சாப்பிடச் செய்யவேண்டும். பிறகே நாம் சாப்பிடவேண்டும். இப்படிச் செய்வதால், நம் முன்னோர்கள் மிகவும் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிக்கின்றனர். அவர்களுடைய ஆசிகளால் நம் வாழ்க்கையும் நம் சந்ததியினரின் வாழ்க்கையும் மகிழ்ச்சியும் சகல செல்வங்களும் நிறைந்ததாக அமையும் என்பது உறுதி.


டிரெண்டிங் @ விகடன்