`பாவிகளும் தங்களை சிநேகிக்கிறவர்களை சிநேகிக்கிறார்கள்!’ - இயேசுவின் மாண்பை உணர்த்திய நிகழ்வு! | An Event That Taught about Jesus' dignity

வெளியிடப்பட்ட நேரம்: 07:41 (23/07/2017)

கடைசி தொடர்பு:07:41 (23/07/2017)

`பாவிகளும் தங்களை சிநேகிக்கிறவர்களை சிநேகிக்கிறார்கள்!’ - இயேசுவின் மாண்பை உணர்த்திய நிகழ்வு!

யேசுவும் அவரது சீடர்களான அப்போஸ்தலர்களும் இரவு விருந்தை முடித்துக்கொண்டு, 'கெத்செமனே' தோட்டத்துக்குப் போனார்கள். ஏற்கெனவே அவர்கள் பலமுறை அங்கே போயிருக்கிறார்கள். இந்த நிலையில் கடைசியாக அந்த இடத்துக்குப் போனபோது, ``இப்போது விழித்திருந்து ஜெபம் செய்யுங்கள்’’ என அவர்களிடம் இயேசு சொல்கிறார். அதன் பிறகு, சிறிது தூரம் சென்று முகம் தரையில் படும்படி விழுந்து ஜெபம் செய்கிறார் இயேசு.

இயேசு

இதையடுத்து, அப்போஸ்தலர்கள் இருக்கும் இடத்துக்குத் திரும்பி வருகிறார். அப்போது நடு ஜாமமாக இருந்ததால், அவர்கள் விழித்திருக்காமல் தூங்கிக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்த இயேசு ``உங்களைத் தூங்காமல் விழித்திருந்து ஜெபியுங்கள் என்று கூறி இருந்தேனே, ஏன் இப்படி உறங்கிப்போனீர்கள்?’’ என்று கேட்டுவிட்டு மறுபடியும் ஜெபிக்கப் போனார். இதுபோல இயேசு மூன்று முறை சொல்கிறார், ஆனால், ஒவ்வொரு முறையும் அவர் திரும்பி வரும்போது அவர்கள் அதை மறந்து தூங்கிக்கொண்டிருப்பதைத்தான் பார்க்கிறார்.

கடைசியாகத் திரும்பி வந்தபோது, ``இப்படிப்பட்ட சூழலில் உங்களால் எப்படித் தூங்க முடிகிறது? பாவிகள் வந்து என்னைப் பிடித்துக்கொண்டு போகும் நேரம் வந்துவிட்டது!’’ என்று சொல்கிறார். அதாவது, அவர் தனக்கு வரப்போகும் இக்கட்டான சூழல் பற்றிக் கூறுகிறார். அவர் இப்படியாகச் சொல்லி முடிப்பதற்குள் பெருங்கூட்டம் ஒன்று வருவது போன்ற சத்தம் கேட்கிறது.

``இதோ பாருங்கள்! அவர்கள் வாள்களுடனும் தடிகளுடனும் வந்துகொண்டிருக்கிறார்கள்! வெளிச்சத்துக்காக தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு வருகிறார்கள்’’ என்கிறார் இயேசு. அவர்கள் அருகே வந்ததும், அந்தக் கூட்டத்திலிருந்து யாரோ ஒருவன் நேராக இயேசுவை நோக்கி வருகிறான். எல்லோரும் பார்க்கும்படி, அவன் இயேசுவை முத்தமிடுகிறான். அவன் வேறு யாருமல்ல, யூதாஸ் காரியோத்துதான்!

கிறிஸ்து

அதுசரி... அவன் ஏன் இயேசுவை முத்தமிடுகிறான்? இந்த நிகழ்வின்போது இயேசு, ``யூதாஸ், முத்தத்தினாலா நீ என்னைக் காட்டிக் கொடுக்கிறாய்?’’ என்று கேட்கிறார்.  யூதாஸ் பதில் பேசாமல் அமைதியாக இருக்கிறான்.

ஆம், இந்த இடத்தில் முத்தம் ஓர் அடையாளமாக அமைகிறது. யூதாஸுடன் வந்த ஆட்களுக்கு இயேசுவைக் காட்டிக் கொடுத்தது, அந்த முத்தம். யூதாஸ் முத்தமிட்டதும், இயேசுவைப் பிடிக்க அரசாங்கத்தின் படை வீரர்களும் சேவகர்களும் முன்னால் வருகிறார்கள். அதை அறிந்த பேதுரு, அவர்களோடு சண்டை போடத் தயாராகிவிட்டார். தான் எடுத்து வந்திருந்த வாளை உருவி அவர்களில் ஒருவனைத் தாக்குகிறார். ஆனால், அந்த வாள், அவனுடைய தலையை வெட்டுவதற்குப் பதிலாக அவனுடைய வலது காதை வெட்டிவிடுகிறது.
இப்படிப்பட்டச் சூழ்நிலையிலும்,  அந்த மனிதனின் காதைத் தொட்டுச் சுகப்படுத்துகிறார்.  இயேசு பேதுருவைப் பார்த்து, ``உன் வாளைத் திரும்ப அதன் உறைக்குள் போடு. என்னைக் காப்பாற்றுவதற்கு ஆயிரக்கணக்கான தூதர்களை அனுப்புமாறு என் பிதாவை நான் கேட்க முடியாதென்றா நினைக்கிறாய்?’’ என்கிறார்.

ஆம், அவரால் கேட்க முடியும்! ஆனால் தூதர்களை அனுப்புமாறு கடவுளிடம்  அவர் கேட்கவில்லை, ஏனென்றால், அவரைக் கொலை செய்ய வகை தேடியவர்கள் தம்மைப் பிடித்துக்கொள்ளும் நேரம் வந்துவிட்டதென்று அவர் அறிந்திருந்தார். அதனால் அவர் அவர்களை கூட்டிக்கொண்டு போக அனுமதிக்கிறார்.

இயேசு

தன்னைக் கைது செய்து அழைத்துச் செல்ல வந்தவனிடமும் அன்பு பாராட்டிய அவரது இதயத்தின் மாண்பை உணர்வோம். அதனால், அவர், ``உங்களைச் சிநேகிப்பவர்களையே நீங்களும் சிநேகிப்பதால், ஆவதென்ன? பாவிகளும் தங்களை சிநேகிப்பவர்களை சிநேகிக்கவே செய்கிறார்கள்’’ என்று சொன்னார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்