சிம்ம லக்னம்... துலாம் ராசி... உச்சத்தில் சூரியன்... ஓவியாவின் ஓஹோ ஜாதக பலன்கள்! #BiggBossTamil

ஓவியாவுக்கு திரைப்படங்களில் கிடைக்காத ஏகோபித்த வரவேற்பு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்திருக்கிறது. இயல்பாகவும் வெளிப்படையாகவும் இருக்கும் அவரது செயல்பாடுகளும், குறும்புத்தனங்களும் எல்லாத் தரப்பையும் ஈர்க்கிறது. தன்னைப் புறம்பேசுபவர்களைக் கூட வெளிப்படையாக எதிர்கொள்வதாகட்டும், கோபம், மகிழ்ச்சி என உணர்வுகளை வெளிப்படுத்துவதாகட்டும்... ஓவியா தனித்துவமாகத் தெரிகிறார். ஓவியாவின் செயல்பாடுகள் குறித்தும், அவர் மற்றவர்களை எதிர்கொள்வது குறித்தும் பல்வேறு துறை சார்ந்தவர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இச்சூழலில்,  'அனுபவ ஜோதிடம்' இணையத்தளத்தின் ஆசிரியர் சித்தூர் முருகேசன் நடிகை ஓவியாவின் ஜாதகத்தின் அடிப்படையில் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஓவியா

"ஓவியா சிம்ம லக்னம் துலாம் ராசி. லக்னாதிபதியான சூரியன் உச்சம். ஒட்டு மொத்த கிரகங்களையும் தன் ஆகர்ஷண சக்தியை கொண்டு இயக்கும் சூரியன் உச்சமானதால், இயல்பாகவே  சாமானிய மக்களைக் கவரும் சக்தி சிம்ம லக்னகாரர்களுக்கு உண்டு.  ரஜினி கமல் சித்தூர் முருகேசன் எல்லாம் சிம்ம லக்னம்தான்.

சூரியன் என்றாலே லீடர் ஷிப் குவாலிட்டி தான். அதிலும் இவர் 9-வது இடத்தில் வேறு உச்சமாக இருக்கிறார். எனவே ஓவியா சீக்கிரமே பொதுவாழ்க்கைக்கு வருவார். அதை அவரது செயல்பாடுகளே உணர்த்துகின்றன. தனக்கு சரியெனப் பட்டதைப் பேசுவதாகட்டும், மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் செயல்படுவதாகட்டும், இதெல்லாம் அதற்கான உதாரணங்கள் தான்.  

ஓவியாவின் ஜாதகப்படி  குரு ஐந்தாமிடத்துக்கும் எட்டாமிடத்துக்கும் அதிபதி.  அவர் 12-ம் இடத்தில் உச்சமாக நிற்கிறார். முதலில் ஐந்தாம் இடத்திற்கு உரிய வேலையைச் செய்ததால் தான்  கூடைக்குள் வைத்த பேபி லைட் மாதிரி இருந்து விட்டார். இப்போது அவர், 12-ம் இடத்தில் நின்று கொண்டு, எட்டாம் இடத்துக்கு உரிய வேலையைச் செய்யத் தொடங்கி இருக்கிறார். அதனால் தான் மக்களிடம் இவ்வளவு ஆதரவு. பிக்பாஸ் வீட்டுக்குள் எவ்வளவு பிரச்னை இருந்தாலும் மக்கள் மத்தியில் இந்த அளவுக்கு ஆதரவு பெருக அதுதான் காரணம். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். 

ஓவியா

குரு மொத்தமாக கெடாமல்  இங்கே உச்சமாக இருப்பதை வைத்து பார்த்தால்,  லிஃப்டில் வைத்து தூக்கின மாதிரி தூக்கி பொத்தென்று கீழே போட்டுவிடும் வாய்ப்பும் இருக்கிறது. இவர்  இத்தனை காலம் இப்படி ஜொலிக்காமல் போக இன்னொரு காரணம், ஐந்தில்  ராகு. இதையும் சேர்த்து வைத்து பார்க்கும் போது ஓவியா ஒரு பின்னடைவுக்கும் தயாராக இருக்க வேண்டும்.  

ஆறுக்குரிய  சனி ஆறிலேயே ஆட்சி பெற்றார். இதனால் தான் போட்டியாளர்களை எல்லாம் அசால்ட்டாக பீட் பண்ண முடிகிறது .அதே சமயம் இவர் 7- க்கு உரியவராகவும் இருப்பதால் எதிர்காலத்தில் சில சிக்கல்கள் வரலாம்.  இரண்டாம் இடத்துக்கும் பதினோராம் இடத்துக்கும் உரியவரான  புதன் எட்டில் நீசம் பெற்றார். சிலர், 'நல்லா பேசுகிறேன் பேர்வழி' என்று பேசியே கெட்டு போய்விடுவார்கள். ஆனால் ஓவியாவின் விஷயத்தில் 'வாக்கு ஸ்தானாதிபதி'யான புதன் எட்டில் நின்றதால்  'எவ்வளவு அடிச்சாலும் தாங்குகிற'  கேரக்டர் ஆகி பரிதாபத்தை அள்ளுகிறார். 

செவ்வாய் கேது சேர்க்கை, சில பிரச்னைகளை உருவாக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் எதிர்கொண்டு சமாளிக்கும் திறமையும் கிடைக்கும். இதுமாதிரியான ஜாதகக்காரரர்கள்,  கோபமே இல்லாததைப் போல பில்டப் பண்ணுவார்கள்.  ஒருநாள் உள்ளடக்கி வைக்கப்பட்ட மொத்தக் கோபமும்  பெரிதாக வெடிக்கலாம்.  மூன்றில் நிற்கிற சந்திரன் ஒரு வித அச்ச உணர்வைத் தந்தாலும்  திடீர் துணிச்சலையும் தரும். ஓவியாவின் சாதகத்தின்படி, அவர் வாழ்க்கை அவரின் குணத்துக்கு ஏற்றவாறு மாறும்.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவின் இருப்பு என்பதும் அவரின் செயல்பாடுகளுக்குத் தக்கவாறு மாறக்கூடும். எதையும் எதிர்கொள்ளும் நிலையில் அவரது ரசிகர்கள் இருப்பது நல்லது..." என்றார் சித்தூர் முருகேசன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!