வெளியிடப்பட்ட நேரம்: 08:49 (02/08/2017)

கடைசி தொடர்பு:08:49 (02/08/2017)

மடப்பள்ளி வரதனை கவி காளமேகமாக்கிய அன்னை அகிலாண்டேஸ்வரி! #AadiSpecial

அகிலாண்டேஸ்வரி

திருவானைக்காவல் பஞ்சபூத தலங்களில் நீர் தலம் ஆகும். கயிலையில் ஒருநாள் ஈசனும் அம்பிகையும் ஏகாந்தமாக இருந்தனர். அப்போது ஈசன் யோகநிலையை மேற்கொண்டார். அதனால், 'அருகில் தேவி நான் இருக்கையில், இவர் எப்படி யோக நிலையில் இருக்கலாம்?’ என்று ஊடல் கொண்டாள் அம்பிகை.

 

மேலும் அவளுக்கு உலகத்தில் உள்ள நம்மையெல்லாம் பார்க்கவேண்டும்; நமக்கு அருள் புரியவேண்டும் என்று ஓர் ஆசையும்கூட. அதனால்தான் அம்பிகை அப்படி ஊடல் கொண்டாள். அதன் காரணமாக ஈசனின் கோபத்துக்கு ஆளாகி, பூமிக்கும் வந்துவிட்டாள்.

அவள் பூமிக்கு வந்து சேர்ந்த இடம்தான், ஒரு காலத்தில் ஜம்பு மகரிஷி வெண் நாவல் விருட்சமாக இருக்கும் இந்தத் தலமான திருவானைக்கா என்னும் தவ பூமி.

அகிலாண்டேஸ்வரி

திருவானைக்கா புண்ணிய பூமியை அடைந்த அம்பிகை, காவிரியின் புனித நீரையே சிவலிங்கமாகத் திரட்டி பிரதிஷ்டை செய்து வழிபட்டாள். ஈசனைப் பிரிந்து வந்து தவமிருந்து வழிபட்டாலும்கூட, அம்பிகைக்கு ஈசனின் அருளும் அவரை மணந்துகொள்ளும் பேறும் கிடைக்கவில்லை. அதற்கும் ஒரு காரணம் இருக்கவே செய்கிறது.

அம்பிகை இங்கே சிவபெருமானிடம் யோகம் பயிலும் சிஷ்யையின் நிலையில் இருப்பதால்தான் இந்தத் திருத்தலத்தில் அம்பிகைக்கும் சிவபெருமானுக்கும் திருமணம் நடைபெறுவதில்லை என்பது ஐதீகம்.

இந்தத் தலத்தில் உச்சிக் கால பூஜையை அம்பிகையே செய்கிறாள் என்பதுதான் விசேஷம்.

தினமும் உச்சிக் காலத்தில் அம்பிகையின் சந்நிதியில் இருந்து அர்ச்சகர் வடிவத்தில் அம்பிகை வெளிப்பட்டு சிவபெருமானை பூஜிக்கச் செல்கிறாள். ஆம், அம்பிகை சந்நிதியின் அர்ச்சகர்தான் தினமும் உச்சிக் காலத்தில் அம்பிகைக்கு சாத்திய சிவப்புப் பட்டுப் புடவையை அணிந்து கொண்டு, தலையில் கிரீடமும், கழுத்தில் ருத்திராட்ச மாலையும் அணிந்துகொண்டு, யானை ஒன்று முன்னே செல்ல, மங்கல இசையுடன் ஐயனின் சந்நிதிக்குச் செல்கிறாள்.

அர்ச்சகர் வடிவத்தில் இருக்கும் அம்பிகை ஐயனை மட்டுமின்றி கோபூஜையும் செய்வதுதான் விசேஷம்! தினசரி நிகழ்வாக நடைபெறும் இந்த கோபூஜையை தரிசிக்கும் கன்னிப் பெண்களுக்கு விரைவிலேயே நல்ல வரன் அமைந்து திருமணம் நடைபெற்றுவிடுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

அகிலாண்டேஸ்வரி அம்பிகை ஐயனின் பூஜையும் கோபூஜையும் முடித்துவிட்டு வரும்வரை அம்பிகையின் சந்நிதிக் கதவுகள் மூடப்பட்டு இருக்கும்.

முற்காலத்தில் ஆதிசங்கரர் இந்தத் தலத்துக்கு வருகை தந்தபோது, அகிலாண்டேஸ்வரி அம்பிகை மிகவும் உக்கிரமாக இருந்தாளாம். அம்பிகையின் உக்கிரத்தைத் தணிவிக்க வேண்டி, ஆதிசங்கரர் ஶ்ரீசக்கரத்தில் அம்பிகையின் உக்கிரத்தை ஆவாஹணம் செய்து, அம்பிகையின் காதுகளில் தாடங்கங்களாக அணிவித்துவிட்டார். அப்போது முதல் அன்னை அகிலாண்டேஸ்வரி சாந்த சொரூபியாக மாறிவிட்டாள் என்பது தலவரலாறு கூறும் செய்தி. பொதுவாக அம்பிகையின் ஆலயங்களில் அம்பிகையின் சந்நிதியில் ஶ்ரீசக்கரம் பிரதிஷ்டைதான் செய்யப்பட்டிருக்கும். ஆனால், இந்தத் தலத்தில் மட்டும்தான் ஶ்ரீசக்கரமே அம்பாளின் தாடங்கங்களாகப் பிரகாசிக்கின்றன.

பவனி

அன்னை அகிலாண்டேஸ்வரி இங்கே ஈசனிடம் ஞானம் உபதேசம் பெறும் நிலையில் இருப்பதால், தன்னை வழிபடுபவர்க்கு நல்ல கல்வி, தெளிந்த ஞானம் போன்றவற்றை அருள்கிறாள்.

அம்பிகையின் கோயில் மடப்பள்ளியில் வேலை பார்த்து வந்தவர் வரதன் என்பவர். தினமும் அவருக்கு நைவேத்தியம் தயாரித்து வருவதுதான். அம்பிகையிடம் அவருக்கு அளவு கடந்த பக்தி. ஒருநாள் இரவு அசதியின் காரணமாக அவர் கோயிலிலேயே உறங்கிவிட்டார். அவருக்கு அருள் செய்ய நினைத்தாள் அம்பிகை. நள்ளிரவில் அவர் படுத்திருந்த மண்டபத்தின் பக்கமாக வந்தவள், அவரை வாயைத் திறக்கும்படிக் கூறினாள். எதுவும் விளங்காமல் அவரும் வாயைத் திறந்தார். திறந்தவரின் வாயில் அம்பிகை தாம்பூலத்தை உமிழ்ந்தாள். அன்னையின் தாம்பூலத்தை உண்ட வரதன் அந்தக் கணமே கவி பாடும் திறம் பெற்றார். அவர்தான் கவி காளமேகப் புலவர்.

கோயில்

எனவே, அன்னை அகிலாண்டேஸ்வரியைத் தொழுதால் நாமும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதுடன் கவி பாடும் திறமும் பெறுவோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்