கலியுகத்தின் கண்கண்ட தெய்வம், கருணை வடிவானவள் கொல்லூர் மூகாம்பிகை! #AadiSpecial

மூகாம்பிகை

மூகாசுரனை அழித்து மூகாம்பிகை என்ற பெயரோடு விளங்கும் அன்னையைத்தான் இன்றைய அம்பிகையைக் கொண்டாடுவோம் தொடரில் தரிசிக்க இருக்கிறோம். வாருங்கள். கொல்லூர் திருத்தல தரிசனத்துக்கு...

மூகாம்பிகை ஆலயம் 51 சக்தி பீடங்களில் ஆதி பராசக்தியின் காதுகள் விழுந்த பீடமாகப் போற்றப்படுகிறது. 

* 51 சக்தி பீடங்களில் ஒன்றாகிய கொல்லூர் தலத்தில் அம்பிகையின் காதுகள் விழுந்த பீடமாகப் போற்றப்படுகிறது. கொல்லூர் மூகாம்பிகை திருத்தலம் கர்நாடக மாநிலத்தின் தெற்கே, குடசாத்ரி மலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ அமைத்துள்ளது. மங்களூரிலிருந்து நூற்றி நாற்பது கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம் சௌபர்ணிகையாற்றின் கரையோரமாக அமைந்திருக்கிறது.  

மூகாம்பிகை

* மூவாயிரம் வருடங்களுக்கு முந்தைய புராண கதைகளும், வரலாற்றுச் சான்றுகளும் கொண்டு விளங்குகிறது இந்த ஆலயம். ஆரண்யபுரம் என்ற பெயரில் அடர்த்தியான வனமாக இந்தப் பகுதி இருந்தபோது கோல மகரிஷி இங்கு தவமியற்றி வந்தார். அவரின் தவத்தைக் கலைக்க வந்த கம்காசுரனை அழிப்பதற்காக ஈசன், கணபதி, வீரபத்திரர் ஆகியோருடன் தோன்றிய தேவி, கம்காசுரனை வாய் பேசமுடியாத ஊமையாக மாற்றிவிட்டாள். அப்போதும் அவனுடைய அட்டகாசங்கள் அதிகரிக்கவே, அவனைக் கொன்ற அம்பிகை மூகாம்பிகை என்னும் திருப்பெயருடன் கோயில் கொண்டாள். கோல மகரிஷி தவம் இயற்றிய அந்தப் பகுதி கோலாபுரம் என்று அழைக்கப்பட்டு, தற்போது கொல்லூர் என்று அழைக்கப்படுகிறது. 

* ஆதிசங்கரர் கொல்லூரில் தவமிருந்தபோது, அன்னை மூகாம்பிகை  காட்சியளித்து, கோல மகரிஷிக்காக உருவான சுயம்புலிங்கத்தின் முன்பு தன் சிலை அமைத்துக் கோயில் உருவாக்க ஆணையிட்டாள். தேவியின் ஆணைப்படி, ஆதி சங்கரர் பஞ்சலோகங்களால் ஆன மூகாம்பிகை சிலையை அங்கே பிரதிஷ்டை செய்தார்.  ஸ்ரீசக்கரம் மற்றும் ஆலயத்தின் அத்தனை விதிகளையும் அவரே இயற்றிக் கொடுத்தார்.

* மூகாம்பிகை அன்னை, ஆதிசங்கரருக்குக் காட்சி தந்த பிறகுதான் அவர்  ‘சௌந்தர்ய லஹரி’ எனும் பாடல்களை இயற்றியதாகச் சொல்லப்படுகிறது. ஆதிசங்கரர் அமர்ந்த பீடம் இன்றும் கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் உள்ளது.

* இயற்கை அழகு கொஞ்சும் சௌபர்ணிகை ஆற்றின் படித்துறையில் விநாயகர் ஆலயம் ஒன்று உள்ளது. இந்த ஆற்றில் நீராடி, கணபதியை வழிபட்ட பிறகுதான் அம்மனின் கோயிலுக்குச் செல்ல வேண்டும். போகும் வழியில், பழைமையான காளி கோயில் ஒன்றும் உள்ளது. இந்தக் கோயிலினுள்ளே, பிரம்மாண்ட புற்று ஒன்று உள்ளது. இதையும், காளிதேவியையும் வணங்கி, மூகாம்பிகை அன்னையின் கோயிலை அடையலாம்.

கொல்லூர்* மூன்று கண்கள், நான்கு கரங்கள், அந்தக் கரங்களில் சங்கு, சக்கரத்துடன் அபய, வர முத்திரைகளை ஏந்தி ஆதிசக்தி மூகாம்பிகை அருளும் காட்சியைக் காண்பவருக்கு மெய்சிலிர்க்கச் செய்து விடும். 

* கருவறை உள்ளே, சக்திதேவி மூகாம்பிகை சிலையின் முன்னர் காணப்படும் சுயம்பு லிங்கமாகிய ஜோதிர்லிங்கம், சக்தியும், சிவனும் இணைந்திருப்பதை உணர்த்துகிறது. இந்த லிங்கம் ஒரு தங்க ரேகையால் இரு பிரிவுகளாகப் பிரிந்து, சக்தி - சிவன் தத்துவத்தை உணர்த்துகிறது. உச்சி வேளையின்போது, சூரியனின் ஒளிக்கதிர்கள் இந்த லிங்கத்தின் மீது பட்டு தகதகக்கும்போது கண்கொள்ளா காட்சியாக விளங்குகிறது. 

* கம்பீரமான வீரபத்திரர், பத்துத் திருக்கரங்களுடன் விநாயகர், நாக உருவில் முருகப்பெருமான், சந்திர மௌலீஸ்வரர், நஞ்சுண்டேஸ்வரர், பஞ்சமுக கணபதி எனப் பல தெய்வ சந்நிதிகள் இந்த ஆலயத்தில் அமைந்திருக்கின்றன.

* பிரமாண்ட வடிவில் காணப்படும் இந்த ஆலயம் எப்போதும் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியக்கூடியது. இந்த ஆலயத்தின் கருவறை விமானம் முழுவதும் தங்கத் தகடுகளால் இழைக்கப்பட்டு அலங்காரமாகக் காட்சியளிக்கிறது.  

* நவராத்திரி திருவிழாவே இங்கு வெகு சிறப்பான விழாவாக விளங்குகிறது. மேலும் மூகாம்பிகை அம்மனின் விழாக்கள் பங்குனி, புரட்டாசி மாதங்களில் நடைபெறுகிறது. பங்குனியில் உத்திர நட்சத்திரத்தன்று கொடியேற்றப்பட்டு, ஒன்பது நாள்கள் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. 

ஆணவமிக்க மூகாசுரனை வதைத்து, கோலமகரிஷியை காத்து அருள் செய்த அன்னை மூகாம்பிகை கருணையே வடிவானவள். காலத்தை கடந்த மஹா வரப்பிரசாதி. இவளை வணங்கித் தொடங்கும் எந்தச் செயலும் தடையின்றி நிறைவேறும். சகல வியாதிகளுக்கும் கண்கண்ட தெய்வமாக விளங்கும் கொல்லூர் மூகாம்பிகை கலியுகத்தின் கருணாசாகரம்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!