வெளியிடப்பட்ட நேரம்: 14:12 (04/08/2017)

கடைசி தொடர்பு:14:12 (04/08/2017)

5 கிடா வெட்டி குலதெய்வம் கோயிலில் பூஜை செய்த தனுஷ்.!

வருடம் தோறும் ஆடி மாதம் தவறாமல், தேனி மாவட்டத்தில் இருக்கும் தனது குல தெய்வக் கோவிலுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகர் தனுஷ். இந்த வருடம் தனது குடும்பத்தினருடன் வந்த தனுஷ், முதலில் தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள சங்கராபுரம் கருப்பசாமி கோவிலுக்குச் சென்று வழிபட்டார். அதனைத் தொடர்ந்து நேற்று ஆண்டிபட்டி அருகில் இருக்கும் முத்துரெங்கபுரத்தில் உள்ள தனது குலதெய்வக்கோவிலான கஸ்தூரிஅம்மன் மங்கம்மாள் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு சென்னை கிளம்பிச்சென்றார்.

தனுஷ் விவசாயிகளுக்கு நிதியுதவி

மொத்தம் 5 கிடா…

முதல் நாள் சங்கராபுரம் கருப்பசாமி கோவிலுக்குச் சென்ற தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், அங்கே பொங்கல் வைத்து மூன்று கிடா வெட்டி வழிபாடு நடத்தினர். அதனைத் தொடர்ந்து முத்துரெங்கபுரம் கஸ்தூரிஅம்மன் மங்கம்மாள் அம்மன் கோவிலிலும் பொங்கல் வைத்து இரண்டு கிடா வெட்டப்பட்டது.

கோயிலுக்கு அருகில் உள்ள மண்டபத்தில் தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்ட 125 விவசாய குடும்பங்களுக்கு தலா 50ஆயிரம் நிதியுதவி அளிக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழகம் முஞுவதும் இருந்து தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினர் தனி வாகனத்தில் தேனிக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்களுக்கு தனுஷ் குடும்பத்தினர் நிதியுதவி அளித்தனர். 

5 நிமிட தியானம்…

ஆண்டிபட்டி அருகில் உள்ள முத்துரெங்கபுரம் கோவில் தான், தனுஷின் அம்மா, அப்பா இருவருக்குமான குலதெய்வம். வேறெந்த கோவிலிலும் இல்லாத சிறப்பு இந்தக் கோவிலுக்கு உண்டு. வழக்கமாக குலதெய்வக் கோயில்களில் பங்காளிகள் மட்டுமே வழிபாடு நடத்துவார்கள். இந்தக் கோவிலைப் பொறுத்தவரை சம்மந்திகள் இருவரும் இணைந்து வழிபாடு நடத்துவார்கள். கோவிலில் வீற்றிருக்கும் மங்கம்மாளின் கணவரின் தங்கை தான் கஸ்தூரி. கணவர் இறந்த நிலையில் மங்கம்மாள் உடன்கட்டை ஏறுகிறார். அதனைக் கண்ட கஸ்தூரியும் அந்த சிதையில் தன்னை மாய்த்துக்கொள்கிறார். அதனாலேயே இந்தக் கோவிலுக்கு இப்படி ஒரு சிறப்பு வந்ததாக கோவிலின் தலவரலாறு கூறுகிறது. கோவிலுக்கு வந்த தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் சாமி கும்பிட்டு பொங்கல் சாப்பிட, தனுஷ், கோவிலின் ஓர் மூலையில் அமைதியாக உட்கார்ந்து 5 நிமிடங்கள் தியானம் செய்தார். 

பலமான வேண்டுதல்?

தனுஷ், அவரது அப்பா கஸ்தூரி ராஜா, தனுஷின் அண்ணன் செல்வராகவன் மூவருமே புதிய படத்துக்குப் பூஜை போட்டாலும் சரி, புதிய செயல்களைத் தொடங்கும்போதும் சரி, இந்தக் கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதே போல் அந்த காரியம் நிறைவேறிய பிறகும் இங்கே வந்து கிடா வெட்டு வழிபாடு நடத்துவது வழக்கம்.

அண்மையில், தனுஷ் தன் மகன்  என்று ஒரு தம்பதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கால் தனுஷ் குடும்பத்தினர் பெரும் மன உளைச்சலில் இருந்துள்ளார்கள். அந்த வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடியானதன் காரணமாகவே  இந்த கிடா வெட்டு வழிபாடு என்று கிராமத்தினர் தெரிவிக்கிறார்கள்.

பிஸியான பணிக்கு இடையிலும் வருடம் ஒரு முறை தனது சொந்த கிராமத்திற்கு குடும்பத்துடன்  வந்து  குலதெய்வத்தை வழிபட்டு செல்வதை இன்று வரை கடைபிடிக்கும் தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி நெகிழ்வோடு பேசுகிறார்கள் சங்கராபுரம்,  முத்துரெங்கபுரம் கிராம மக்கள்!

 

 

 

 


டிரெண்டிங் @ விகடன்