Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விநாயகருக்கு துளசி கூடாது... பெருமாளுக்கு அட்சதை ஆகாது... பூஜையில் செய்ய வேண்டியவை... செய்யக்கூடாதவை!

ங்கள் பூஜைகளில் இதையெல்லாம் கவனியுங்கள்..அதிகாலை, மாலை நேர பூஜையே நல்லது. பண்டிகை மற்றும் விரத நாட்களில் அதற்கான நேரங்களில் பூஜை செய்யலாம். பூஜையில் கவனிக்க வேண்டிய சில குறிப்புகளைத்தான் இங்கே உங்களுக்காகக் கொடுத்திருக்கிறோம். குறிப்புகளைப் பின்பற்றி குற்றமில்லாமல் செய்து தெய்வ அனுக்கிரகம் பெறுங்கள். விநாயகரை துளசியால் பூஜிப்பது தவறு. பெருமாளை அட்சதையால் பூஜிப்பதும் தவறுதான். சிவனுக்கு தாழம்பூ ஆகாது. திருமகளுக்கு தும்பை மலர் விலக்கானது. பவளமல்லி சரஸ்வதிக்கும், அம்பிகைக்கு அருகம்புல்லும் பூஜைக்கு உரியவை அல்ல. 

பூஜை

தும்பை, வில்வம், கொன்றை, ஊமத்தை, வெள்ளெருக்கு போன்றவை சிவனுக்கு உரிய மலர்கள். காளியம்மன், துர்கை, முருகனுக்கு அரளிப் பூக்கள் உகந்தவை.  அருகம்புல், வில்வம், தாமரைப்பூ, சம்பங்கி, சாமந்தி,  மரிக் கொழுந்து, சங்குப்பூ, நீலப்பூ, துளசி, மல்லிகை, ரோஜா, பன்னீர் ரோஜா, விருட்சிப்பூ பூஜைக்கான மலர்கள் என ஆன்றோர்களால் கூறப்படுகிறது.  சாமந்திப்பூ உள்ளிட்ட மணமில்லாத மலர்களை பூஜைக்கு விலக்கி விடவேண்டும். ஆனால் அலங்காரத்துக்குப் பயன்படுத்தலாம். 

அர்ச்சிக்கும்போது முழு மலரால் அர்ச்சனை செய்ய வேண்டும். பூவின் இதழ்களைக்  கிள்ளி அர்ச்சனை செய்வது வேண்டாம்.  காய்ந்து போன, வாடிப்போன, பூச்சிகள் கடித்த, அழுகிப்போன பூக்களை வழிபாட்டில் சேர்ப்பது தெய்வ குற்றம். நீரில் தோன்றும் மலர்களைத் தவிர மற்ற மலர்களை பறித்த அன்றே பயன்படுத்த வேண்டும். வில்வம், துளசி தவிர மற்ற மலர்களைக் கொண்டு ஒருமுறை வழிபாட்டில் பூஜித்த பிறகு மறுபடியும் அந்த மலர்களை  பயன்படுத்த கூடாது. நுகரப்பட்டது, கீழே விழுந்தது, முடி இருந்தது போன்ற மலர்கள் பூஜைக்கு கூடவே கூடாது. செண்பக மொட்டுக்கள் தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜையில் சேர்க்கக் கூடாது. வில்வம். துளசியைத் தளமாகவே பயன்படுத்த வேண்டும். முல்லை, வில்வம், விளா, கிளுவை, நொச்சி போன்றவை பஞ்ச வில்வம். இவை சிவபூஜைக்கு அருமையானவை. துளசி, மகிழம், செண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி,  அருகு, நாயுருவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி இவற்றின் இலைகள் பூஜைக்கு பயன்படுத்த வேண்டியவை. 

பூஜை

நாகப்பழம், மாதுளை, கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலா, எலுமிச்சை, புளியம்பழம், விளாம்பழம் போன்றவையே பூஜைக்கு ஏற்ற பழங்கள். வாழைப்பழத்தில் பூவன் பழம், நாட்டுப்பழம் நல்லது. குடுமித் தேங்காயைச் சீராக உடைத்து, பிறகுதான் குடுமியை பிரிக்க வேண்டும். அழுகிய தேங்காய் என்றால் மாற்றி வேறு தேங்காய் உடைக்கலாம். கோணலான, வழுக்கையான தேங்காய் வேண்டாம். 

பூஜையின்போது அழுக்கான உடை அணிய வேண்டாம். திருநீறு, தீர்த்தம், குங்குமம் போன்ற பிரசாதங்கள் கோயில் அர்ச்சகர் மூலமாகவே வாங்க வேண்டும். தானாகவே எடுத்துக் கொள்ள கூடாது. வெற்றிலைக்கு நுனியும், வாழைப்பழத்திற்கு காம்பும் அவசியம் இருக்க வேண்டும். வெற்றிலைப்பாக்கில் சுண்ணாம்பு கூடாது. அவல் பொரி, கடலை, கற்கண்டு போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். பச்சரிசியில்தான் நைவேத்தியம் செய்யவேண்டும்.  விக்கிரகங்களை தொடாமல் பூஜிக்க வேண்டும். எண்ணெயை விட பசுநெய் தீபத்துக்கு நல்லது. 

வழிபாட்டுக்கு முன்பாக சாம்பிராணி புகை இடுவது சிறப்பானது, சாம்பிராணி வாசம் கெட்ட அதிர்வுகளை விரட்டி விடும் ஆற்றல் கொண்டது. கோலமிட்டு, விக்கிரங்களை சரியாக அமைத்துக்கொண்டு,  விளக்கேற்றி, ஊதுபத்தி ஏற்றி, அர்ச்சனை செய்து, பின்னர் கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். வழிபாட்டுக்கு தேவையான நீர், விபூதி, குங்குமம், மஞ்சள், நெய், திரி, உதிரி புஷ்பம், வஸ்திரம், மாலை, சந்தனம், தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, ஊதுபத்தி, நைவேத்தியம், தட்சிணை, தீப்பெட்டி என எல்லாவற்றையும் தயாராக எடுத்து வைத்துக்கொண்ட பிறகே பூஜையை ஆரம்பியுங்கள். தெய்வங்களுக்கு ஏற்ற ஸ்தோத்திரங்கள் பாடுவது சிறப்பானது.

பூஜை

இத்தனை கவனமாகத்தான் பூஜிக்க வேண்டுமா என்று கேட்கிறீர்களா? இவை எல்லாம் ஆண்டவனை ஆராதிக்க உண்டான முறைகள்தான். ஆனால் உண்மையான பக்தியும், அர்ப்பணிப்பும், சரணாகதியும்தான் இறைவனுக்கு விருப்பமானவை. அதனால்தானே கீதையில். 'என்னை வழிபட, அதிக சிரமம் வேண்டாம், ஒரு புஷ்பமோ, ஒரு பழமோ, அதுவும் கிடைக்காவிட்டால் ஒரு உத்தரணி தீர்த்தமோ அர்ப்பணித்தால் போதும்' என்றார் பகவான் கிருஷ்ணர். முடிந்தவரை முன்னோர்கள் கூறிய முறைகளைப் பயன்படுத்தி பூஜியுங்கள். நிச்சயம் உங்கள் வேண்டுதலுக்கான பலன் கிடைத்தே தீரும். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement