சர்ப்பதோஷம் போக்குவாள்... சங்கடங்கள் நீக்குவாள்... சங்கரன்கோயில் கோமதி அம்மன்! #AadiSpecial

சர்ப்பதோஷம் போக்குவாள்... சங்கடங்கள் நீக்குவாள்... சங்கரன்கோயில் கோமதி அம்மன். தமிழகத்தின் முக்கியமான சைவத் தலங்களில் ஒன்றாக சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி-கோமதி அம்பாள் திருக்கோவில் விளங்குகிறது. ’அரியும் சிவனும் ஒன்று’ என்கிற உன்னதமான தத்துவத்தை வெளிப்படுத்தும் கோவில் இது. ஊசி முனையில் ஒற்றைக் காலில் தவம் இருந்த கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமி, தனது உடலின் ஒருபகுதியை சங்கரராகவும் மறுபகுதியை நாராயணராகவும் மாற்றி சங்கரநாராயணர் கோலத்தில் காட்சி அளித்தார். இந்த அரிய நிகழ்ச்சியே ஆடித்தபசு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.   

சங்கரன்கோயில் கோமதி அம்மன்

18 சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தர் கோமதி அம்மனை வாளைக் குமாரியாகவும், குண்டலினி சக்தியாகவும், பாம்பு வடிவமாகவும் வழிபட்டு இருக்கிறார். அதனால், காளஹஸ்திக்கு அடுத்தபடியாக இது கால சர்ப்ப தோஷம் போக்கும் தலமாகவும், ராகு, கேது தோஷம் நீக்கும் தலமாகவும் விளங்குகிறது. செவ்வாய் தோஷத்தை நீக்கி திருமணத்தடை அகற்றும் முக்கியமான கோயில்களில் ஒன்றாகவும் உள்ளது.  

அம்பாள் சந்நிதியின் முன்பாக ஸ்ரீசக்கரக் குழி உள்ளது. இதில் அமர்ந்தால், பக்தர்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். மனநிலை சரியில்லாதவர்கள், பேய் பிசாசு மற்றும் துர்சக்தியால் பீடிக்கப்பட்டவர்கள் இந்த சக்கரத்தின் மேல் அமர்ந்து குணமடைந்து செல்கிறார்கள். இங்கு உள்ள புற்று மண் மிகவும் பிரசித்தி பெற்றது. புற்று மண்ணை நெற்றியில் திருநீராக எண்ணி பக்தியுடன் பக்தர்கள் இட்டுக்கொள்கிறார்கள். பாம்பாட்டி சித்தர் இவ்வூரிலே வாழ்ந்து, தேவியின் மகிமைகளை உலகறியச் செய்தார். இவரது சமாதியும் கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. 

சங்கரன்கோயில்

சங்கரன்கோயிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடக்கிறது. சுவாமிக்கு நடக்கும் அத்தனை பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகளும் அம்பாளுக்கும் நடத்தப்படுகிறது. பள்ளியெழுச்சிப் பூஜை முடிந்த பின்னர் தீபாராதனை அம்பிகைக்கே முதலில் நடக்கிறது. ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பு தினத்திலும் கோமதி அம்பாளின் தங்க ரத உலா நடக்கிறது. திங்கள்கிழமை மலர்ப் பாவாடையும், செவ்வாய்க்கிழமை வெள்ளிப் பாவாடையும், வெள்ளிக்கிழமை தங்கப் பாவாடையும் அம்பாளுக்கு சார்த்தப்படுகிறது. சிறப்பு நாட்களில் அம்மனுக்கு சந்தனக்காப்பு நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

கோமதி அம்மன்

சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு இந்தக் கோயிலை பாண்டிய மன்னன் உக்கிரபாண்டியன் கட்டியுள்ளார். இந்தக் கோயிலின் தல விருட்சம் புன்னை மரம். இந்த இடத்தில் இருந்த புற்றையும் வாலறுந்த பாம்பையும், சிவலிங்கத்தையும் கண்ட உக்கிரபாண்டியன் இந்தக் கோயிலை எழுப்பினான்.

சங்கரநாராயணர் கோயிலில் ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் 21, 22, 23 தேதிகளில் சூரிய ஒளியானது வாசல்கள் வழியாகவே நீளவாக்கில் சென்று, லிங்கத்தின் வலப்புறமாக விழத்துவங்கி சிறிது சிறிதாக நகர்ந்து சிவலிங்கத் திருமேனி முழுவதும் வியாபிக்கும். இந்த நிகழ்வானது சிலவேளை நான்கு நாள்கள் கூட நீடிக்கிறது. இந்தக் கோயிலில் சங்கரநாராயணர் எப்போதும் அலங்காரத்துடனேயே காட்சி அளிக்கிறார். அவருக்கு அபிஷேகம் கிடையாது. சந்நிதியில் ஸ்படிக லிங்கமாகக் காட்சியளிக்கும் சந்திர மௌலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது. 

இந்தக் கோயிலில் காலை 5 மணி முதல் மதிய்ம் 12.30 மணி வரையிலும் பிற்பகலில் 4 மணி முதல் 9 மணி வரையிலும் நடை திறந்து இருக்கும். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!