சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் #HappyRakshaBandhan

வணி மாதப் பௌர்ணமி நாளில், சகோதர, சகோதரர்களின் பாசத்தை வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான தினமாக ரக்‌ஷா பந்தன் விழா கொண்டாடப்படுகிறது. ஜாதி, மதம், இனம், மொழி என்ற அனைத்து வேறுபாடுகளையும் கடந்தது இந்த விழா. சொந்தத் தங்கை, அக்கா, அண்ணன், தம்பி என்று மட்டும் இல்லாமல் தனக்குப் பிடித்த நபர்களைக்கூட உடன் பிறந்தவர்களாக எண்ணி ராக்கி என்னும் வண்ணக் கயிறைக் கட்டி பரிசளித்து மகிழும் நாள்தான் ரக்‌ஷா பந்தன். எல்லா வித்தியாசங்களையும் மறந்து எந்த வேறுபாடுமின்றி சொந்தங்களாக என்னைக் கொண்டாடும் இந்தத் திருநாள், இந்தியாவின் கலாசார பெருமையை எடுத்துக்கூறும் ஒரு சிறப்பான நாள். இந்த நாளில் தனக்கு தெரிந்தவர்களை மட்டுமல்ல, அறிமுகமே இல்லாத காவலர்கள், ராணுவ வீரர்கள் என எல்லோரையும் கூட சகோதர, சகோதரிகளாக எண்ணி ராக்கி கயிற்றைக் கட்டும் வழக்கமும் நமக்கு உண்டு.

ரக்ஷா பந்தன்

இந்த நாளில், ஓர் ஆ‌ண் இ‌ந்த ரக்‌ஷா கயிறைக் கட்டிக் கொள்வது என்பது, அவருக்குக் கயிறு கட்டிய அந்தப் பெண்ணை சகோதரியாகக்கொண்டு அவளின் வாழ்க்கை முழுவதுமான பாதுகா‌ப்‌பி‌ற்கு‌ம், நலத்துக்கும் என்றென்றும் காவலாக இருப்பேன் என்று உறுதி கூறுவதைப் போன்றதாகும். அதைப்போலவே கயிறைக் கட்டிய அந்தப் பெண்ணும் அவனுக்கு சகோதரியாகி அவனுடைய நலத்துக்கும், வளத்துக்கும் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்யும் உறுதியை அளிக்கிறாள் என்று இந்த தினம் எடுத்துக்காட்டுகிறது. பல வ‌ண்ணத்தில் ரா‌க்‌கி கயிறுகளு‌ம், இ‌னி‌ப்புகளு‌ம், பரிசுகளும் இந்த நாளில் பெருமளவு விற்பனையாவதுண்டு. கூடப்பிறந்த சகோதர சகோதரிகளுக்காக விசேஷ பிரார்த்தனைகளும், பரிசளிப்பும், பலமான விருந்துகளும் இந்த நாளில் நடைபெறுகிறது. வட இந்தியாவைத் தாண்டி தென் இந்தியாவிலும் இந்த நாள் தற்போது பிரபலமாகி சகோதர உறவுகளைப் பெருமைப்படுத்தி வருகிறது.

இந்த நாள் கொண்டாடப்பப்படுவதன் அடிப்படையே கண்ணன் பாஞ்சாலியின் மீது வைத்திருந்த பாசத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் என்று மஹாபாரதம் தெரிவிக்கிறது. ஒருமுறை போரில் காயம்பட்டு வந்தபோது, துடித்த பாஞ்சாலி சட்டென்று தனது புடைவைத் தலைப்பைக் கிழித்து கட்டுக் காட்டினாள். இந்தச் செயலைக் கண்டு நெகிழ்ந்து போன கண்ணன், பாஞ்சாலியின் அன்பை எண்ணிக் கலங்கினார். அதனால் எப்போதுமே தான் பாஞ்சாலியின் நல்வாழ்வைக் காக்க துணை இருப்பேன் என்று உறுதி கூறினார். அதனால்தான் சூதாட்டத்தின்போதுகூட பாண்டவர்களைக் காப்பாற்ற வராத கண்ணன், பாஞ்சாலியைத் துகிலுரிய முயன்றபோது காப்பாற்றினார். பாஞ்சாலி கண்ணனின் காயத்தைக் குணமாக்க புடைவையைக் கிழித்துக் கட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது இன்றுதான் என்பதால் அது ரக்‌ஷா பந்தன் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

ரக்ஷா பந்தன்

போர்க்காலங்களில் பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கு மஞ்சள் நிற ரக்‌ஷா கயிற்றினைக் கட்டி அனுப்பி வைத்த செயல்கள் நமது வரலாற்றில் காணப்படுகிறது. சித்தூர் ராணி பத்மினி தனது நாட்டைக் காக்க அண்டைநாட்டு மன்னர்களுக்கு ரக்‌ஷா கயிறுகளை அனுப்பியதால் சகோதரியைக் காக்க அவர்கள் வந்தார்கள் என்றும் குறிப்புகள் காணப்படுகிறது. போரஸ் மன்னனின் மனைவி அன்பால் அலெக்ஸ்சாண்டருக்கு ராக்கி கயிறைக் கட்டியதால்தான் பின்னர் உண்டான போரில் போரஸ் மன்னர் அலெக்ஸ்சாண்டரைக் கொல்லாமல் விட்டு விட்டார் என்றும் ஒரு தகவல் வரலாற்றில் கூறப்படுகிறது. எது எப்படியோ, சகோதர பந்தத்தை எடுத்துக்கூறும் இந்த இனிய ரக்‌ஷா பந்தன் தினம் இந்துக்களின் பண்டிகை என்பதைத் தாண்டி பாசத்தைக் காட்டும் ஒரு சமூக விழாவாகவே இருந்து வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!