Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

⁠⁠⁠செவ்வாய் தோஷம் போக்கும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் #AadiSpecial

உலகம் முழுவதும் வாழும் தென்மாவட்ட மக்களை ஒருங்கிணைக்கும் மையமாக விளங்குகிறது குலசை முத்தாரம்மன் கோயில். அறுபடை வீடுகளில் சக்திவாய்ந்த திருத்தலமாகத் திகழும் திருச்செந்தூர் அருகிலிருக்கிறது குலசேகரப்பட்டினம். இங்கே அம்மையும் அப்பனுமாக முத்தாரம்மனும் ஞானமூர்த்தீஸ்வரரும் குடிகொண்டு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்கள். 

முத்தாரம்மன்

இந்தியா முழுவதும் 'தசரா பண்டிகை' கொண்டாடப்பட்டாலும் ஒரு சில இடங்களில்தான் மிகச்சிறப்பாகவும் தனித்தன்மையுடனும் கொண்டாடப்படுகின்றது. அப்படிப்பட்ட இடங்களில் ஒன்றாகத் திகழ்கின்ற இடம்தான் குலசை என்கிற குலசேகரப்பட்டினம். 

நவராத்திரி திருவிழா தமிழகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுவது இங்கு மட்டுமே! தசரா பத்து நாள்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால், இங்கு பன்னிரண்டு நாள்கள் கொண்டாடப்படுகிறது.  குலசேகரப் பாண்டியன் என்ற மன்னனின்  நினைவாக இந்த ஊர் குலசேகரப்பட்டினம் என்று அழைக்கப்படுகிறது. இங்கே கோயில் கொண்டுள்ள முத்தாரம்மன் - ஞானமூர்த்தீஸ்வரர் சுத்த சுயம்புவாகத் தோன்றியவர்கள். இங்கு இருந்த சுயம்பு விக்ரகங்களை வழிபட்டு வந்த மக்களுக்கு, 'பெரிய திருமேனிகளில் வழிபட முடியவில்லையே' என்ற குறை இருந்தது. உலகையே ஆளும் அம்மன், மக்களின் உள்ளக் குறிப்பைக்கூட அறிய மாட்டாளா என்ன? 

முத்தாரம்மன்- ஞானேஸ்வரர்

ஒரு நாள் இரவு கோயில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன்,' குமரி மாவட்டம், மயிலாடியில், சிற்பி சுப்பையா ஆசாரி என்பவர் வசித்து வருகிறார். அவரிடம் சென்று, எங்களின் பெரிய திருமேனியைப் பெற்றுக்கொள்ளுங்கள்' என்று கூறி மறைந்தாள். 

இதைப்போலவே, சிற்பி சுப்பையாவின் கனவில் அம்மை அப்பன் தோன்றி, "எங்கள் வடிவங்களை ஒரே கல்லில்  வடித்தெடுத்து, வருகின்ற மக்களிடம் வழங்கு" எனக் கூறி மறைந்தனர். தூக்கம் கலைந்து எழுந்த ஆசாரியார், இது என்ன விந்தை... இப்படியும் நடக்குமோ என ஆச்சர்யப்பட்டார். ஆனால், முதல் நாள் கனவில் கூறியது போலவே கோயில் அர்ச்சகருடன் ஊர்மக்களும் இணைந்து வந்து, தங்களது கோரிக்கையை வைத்தனர். அவர்களின் கோரிக்கையைச் சிரமேற்கொண்டு செய்துமுடித்தார். உயிரோட்டம் மிக்க இந்த சிலைகளை 1934-ல் பிரதிஷ்டை செய்தனர்.

கோயில்

அம்மன் வலக்காலை மடக்கிய நிலையில், நான்கு கைகளோடு சிங்கப்பல் முகத்துடனும், அப்பன் இடக்காலை மடக்கிய நிலையில் இரண்டு கைகளோடும் காட்சியளிக்கின்றனர். அம்மையும் அப்பனும் வடதிசை நோக்கி அமர்ந்து காட்சி தருகின்றனர்.  

இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள், முதலில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள சிதம்பரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வணங்கிய பின், முத்தாரம்மன் கோயிலுக்கு வந்து வணங்குவது வழக்கம். 

காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த வணிகர் ஒருவருக்கு காட்சி அளித்ததைத் தொடர்ந்து இங்கு  சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் எழுப்பப்பட்டது.

முத்து, மரகதம், கோமேதகம், புஷ்பராகம், நீலம், வைடூரியம், பவழம், மாணிக்கம், வைரம் ஆகிய நவரத்தினங்களில் முத்து மட்டுமே பட்டை தீட்டப்படாமல் தானே ஒளிவிடும் தன்மை கொண்டது. அதனால்தான், இங்கு தோன்றிய அம்மன் 'முத்தாரம்மன்' என அழைக்கப்படுகிறாள். அம்மனுக்கு இங்கு நான்கு கால பூஜை. விசேஷ நாள்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி. சித்திரை விஷு மற்றும் நவராத்திரி இங்கு விசேஷம். தசரா திருவிழாவின்போது ஒவ்வொரு நாளும் அன்னை ஒவ்வொரு திருக்கோலத்தில் காட்சி தருவாள்.

நேர்த்திக்கடன்

மக்களுக்கு வரும் தீராத வியாதிகளை எல்லாம் முத்தாரம்மன், தீர்த்து வைப்பாள் என்பது பக்தர்களின்  அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. பிரார்த்தனைகளை பலித்ததைத் தொடர்ந்து அவர்கள் தசரா திருவிழாவில் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள்.  

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், அம்பாளுக்கு செவ்வரளி மாலை வாங்கிச் சார்த்தி பூஜை செய்தால், விரைவில் திருமணம் கைகூடும். 

கங்கை கலக்கும் வங்கக் கடலின் தென் முனையான இங்கே, முத்தாரம்மனையும் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரரையும் வழிபட்டால், காசி விஸ்வநாதர் விசாலாட்சியை வழிபட்ட பலன் கிடைக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close