யாருக்கெல்லாம் ஏற்படும் பிரம்மஹத்தி தோஷம்? பரிகாரங்கள் என்ன?#Astrology

உலக வாழ்க்கையில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒவ்வொருவிதமாக அமைகின்றது. ஒரு சிலருக்கு வெற்றித் திருமகள் தேடிவந்து மாலை அணிவிக்கிறாள். ஒரு சிலருக்கு என்ன உழைத்தாலும், அதற்கு உரிய பலன்கள் கிடைக்காமல் போகின்றன. இதற்கு பலவகையான தோஷங்கள் காரணமாக இருந்தாலும், குறிப்பாக பிரம்மஹத்தி தோஷம்தான் முக்கிய காரணம் என்கிறார்கள். பிரம்மஹத்தி தோஷம் எதனால் ஏற்படுகிறது இதற்கு உரிய பரிகாரங்கள் என்ன என்பது பற்றி ஜோதிட நிபுணர் ஶ்ரீரங்கம் கிருஷ்ணனிடம் கேட்டோம்.

பிரம்மஹத்தி

''பிரம்மஹத்தி தோஷம் என்பது,  கொடுமையான பாவங்களைச் செய்வதால் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. தாய்க்கு உணவளிக்காமல் விரட்டி அடிப்பது, பசுவைக் கொல்வது, குருவை உதாசீனப்படுத்துவது, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது, தெய்வச் சொத்தைத் திருடுவது போன்றவற்றால் இந்த தோஷம் ஏற்படும். குறிப்பாக நன்றி மறப்பதால்தான்  இந்த தோஷம் ஏற்படுகிறது. கிருஷ்ணன்இந்த தோஷம் இருந்தால், ஜாதகர் தனது பிறவியில் என்ன உழைத்தாலும் அதற்கு உரிய பலன் கிடைக்காமல், வறுமையும் தோல்விகளையுமே சந்தித்து  வாழ்வார். வேலை கிடைக்காது, வேலை கிடைத்தாலும் உரிய கூலி கிடைக்காது. கூலி கிடைத்தாலும் முறையான அங்கீகாரம் கிடைக்காது. இந்த நிலை ஓர் ஆண்டு இரண்டு ஆண்டுகள் அல்ல. பல ஆண்டுகள் நீடிக்கும். தொழிலில் உரிய அங்கீகாரம் கிடைக்காது. சமூகத்தில் திறமை இருந்தும் நல்ல நிலையை அடைய முடியாமல் தடுமாறிய வண்ணம் இருப்பார்கள். ஏன் சிலவேளைகளில் அவர்களது குடும்பத்திலே கூட அவர்களுக்கு மரியாதை இருக்காது.  இதற்கு அவர்கள் பெரிய அளவில் செலவில்லாத முறையான எளிய  பரிகாரங்களைச் செய்தாலே போதும். நல்ல பலன்கள் கிடைத்து மேன்மை அடைவார்கள்.

பிரமஹத்தி தோஷம் ஒருவருக்கு இருக்கிறதா? இல்லையா? என்பதை எப்படி அறிந்து கொள்வதெனப் பார்ப்போம்.

கிரகம்

லக்னத்துக்கு 4 -ம் இடத்தில் அசுப கிரகங்கள் இருந்து, 6, 8, 12 -ம் இடங்களில் சுபர்கள் இருந்தாலும்,  5, 9 - ம் வீடுகளுக்கு  அதிபதிகளாக அசுப கிரகங்கள் இருந்தாலும், அவர்களுடன் சேர்ந்து இருந்தாலும், அசுபர் வீட்டில் இருந்தாலும் இந்த தோஷம் அவர்களுக்கு உள்ளதென அறியலாம். 

*  ராகுவின் இருக்கும் ராசியில் இருந்து 5 அல்லது 9 - ம் வீட்டில் சனி, குரு சேர்க்கை ஏற்பட்டிருந்தாலும்  (அதாவது சனியும் குருவும் ஒரே பாதத்தில் 10 டிகிரியில் இருக்கவேண்டும்) தோஷமாகும்.

திருப்புல்லாணி

பரிகாரங்கள்: 

* சிவன், பிரம்மா, விஷ்ணு மூவரும் உள்ள தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்த வேண்டும். இது தவிர  ஒரு பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது  அல்லது வயது முதிர்ந்த ஏழைத் தம்பதியருக்கு வீட்டில் உணவளித்து அவர்களுக்கு புதிய துணிமணிகள் வாங்கிக்கொடுத்து அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொள்ள வேண்டும். 

* உத்தமர்கோவில், கொடுமுடி, கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர், ஸ்ரீவாஞ்சியம் கோயில்களுக்கு புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சென்று தோஷ நிவர்த்தி பூஜை செய்துகொள்வது நல்லது.

* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதியில் எள்ளுச் சாதம் நைவேத்தியம் செய்து எல்லோருக்கும் கொடுத்தால் நல்ல பலன் அளிக்கும்.

* திருபுல்லாணி சென்று, இறந்த மூத்தோருக்கு (தகப்பனார் இல்லாதவர்கள்) பித்ருக் கடன் செய்து அதற்கு அருகே உள்ள தேவிப்பட்டினத்தில் உள்ள நவ பாஷாணத்திலான நவகிரகங்களின் வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும்'' இவ்வாறு அவர் கூறினார்.

 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!