Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அநீதியை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய அன்னை குமரியம்மன்! #AadiSpecial

பாரதத் திருநாட்டின் தென் எல்லையில் காவல் தெய்வமாக அருளாட்சி புரியும் தேவி கன்னியாகுமரி. குமரியாக இருந்தாலும் அவள் நமக்கெல்லாம் அன்னையாக, பாரத தேசத்தின் தென் எல்லையில் இருந்து நானிலம் முழுவதும் காக்கும் காவல் தெய்வமாகவும் குமரியம்மன் திகழ்கிறாள்.

குமரியம்மன்

பௌர்ணமி தினத்தில் மாலையில் சூரியனின் அஸ்தமனத்தையும் சந்திரனின் உதயத்தையும் ஒருசேர கண்டு ரசித்து மகிழலாம். முக்கடலும் சங்கமிக்கும் குமரி முனையில் அருளாட்சி புரியும் குமரி தெய்வத்தின் எழிலார்ந்த தரிசனம் இங்கே உங்களுக்காக...
கன்னியாகுமரி அம்மன், தமிழகத்தின் தென் எல்லை தெய்வமாக அமைவதோடு, கேரள மக்களுக்கும் குறிப்பிடத்தக்க எல்லை தெய்வமாகத் திகழ்கிறார். இங்குள்ள அம்மன், 'கன்னியாகுமரி அம்மன்' என்றும் 'பகவதி அம்மன்' என்றும் அழைக்கப்படுகிறார். நீண்ட நாள்களாக திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் மிகுதியாக வாழும் பகுதியாகவும் தமிழ் கலாசாரத்துடனும் திகழ்ந்து வருகிறது. 

தல வரலாறு:

முற்காலத்தில் பாணாசூரன் என்ற அசுரன் சிவபெருமானை நினைத்து கடுந்தவம் புரிந்தான். அவனது தவத்தில்  மனம் உருகி, அவன் முன் தோன்றிய சிவபெருமான், 

''உன் தவம் கண்டு மகிழ்ந்தோம். வேண்டும் வரம் என்ன?'' என்று கேட்டார்.

''எனக்கு மும்மூர்த்திகளாலும், தேவர்களாலும், முனிவர்களாலும், விலங்குகளாலும் மரணம் ஏற்படக்கூடாது'' என்று வரம் கேட்டான். ஆனால், பாவம் அவன் குமரியாக இருக்கும் பெண்ணால் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தைக் கேட்க மறந்துவிட்டான்.
கேட்ட வரம் கிடைத்ததும் அவனுடைய அட்டகாசத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. 

அழகான அசுர மாளிகையைக் கட்டி அதில் தேவர்களையும் முனிவர்களையும் தனக்கு பணிவிடை செய்யப் பணித்தான். இவனால் மனிதர்களும் மற்ற உயிர்களும் பட்ட துன்பங்களும் வேதனைகளும் கொஞ்சநஞ்சமல்ல. தன் தவத்தால் பெற்ற பலம் இதுவென எண்ணி இறுமாப்படைந்த அவன், ஈசனின் துணைவியார் உமாதேவியையே தூஷணம் செய்தான். இவனது அக்கிரமங்களுக்கு ஓர் எல்லையே இல்லாமல் போனது. 

கன்னியாகுமரி

இதற்கிடையே, அம்பிகையின் அம்சமாக பூமியில் தோன்றி, சுசீந்திரத்தில் வாழும் ஈசனை மணக்க விரும்பி தவம் இயற்றினார் பார்வதி தேவி. விடிந்தால் திருமணம் என்ற நிலையில் சுசீந்திரத்திலிருந்து சிவபெருமான் வந்து கன்னியாகுமரியில் தங்கி இருந்தார். பராசக்தியின் அம்சமாக கன்னிப்பெண்ணாக வளர்ந்து வரும் பகவதிக்கும் எம்பெருமானுக்கும்  திருமணம் கைகூடினால், பாணாசூரனை அழிப்பது எப்படியென தேவர்களும் அசுரர்களும் விசனமுற்றனர். ஆனால், பாணாசூரனுக்கு கன்னிப்பெண்ணால்தான் மரணம் நிகழவேண்டும் என்பது விதி.  இவர்களுக்கு உதவிட முன் வந்தார் நாரதர். 

சேவல் வடிவெடுத்து நாரதர் நள்ளிரவில் கூவினார். உடனே விடிந்து விட்டதென ஈசன் புறப்பட்டார். ஆனால், குறிப்பிட்ட  அந்த இடத்தில் தேவியைக் காணவில்லை. இதனால் கோபமடைந்த ஈசன் தனது இருப்பிடத்துக்கு கோபத்துடன் புறப்பட்டுப்போனார்.
ஈசனை மணம் முடிக்கலாம் என்று தவம் இருந்த தேவி, தன் விருப்பம் நிறைவேறாமல் போனதில் வருத்தம் கொண்டாலும், தேவர்கள், ரிஷிகள், உலக மக்கள் ஆகியோரின் நலனுக்காக  பாணாசுரனுடன் போரில் ஈடுபட்டாள். பல நாள்கள் நடைபெற்ற இந்த யுத்தத்தில் இறுதியில் தேவி வெற்றி பெற்றார். 

அநீதியை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய அன்னை தவக்கோலத்தில் ஈசனை எண்ணியபடி காட்சியளிக்கிறார். ஆண்டுதோறும் நவராத்திரியின்போது நடைபெறும் இந்த நிகழ்ச்சி 'பரிவேட்டை' என்ற பெயரில் சிறப்பான விழாவாகக் கொண்டாடப்படுகிறது. பரிவேட்டை ஊர்வலம் கன்னியாகுமரியில் வெகு பிரசித்தம். 

ஊர்வலத்துக்கு முன்னதாக நெற்றிப்பட்டத்தால் அலங்கரிக்கப்பட்ட மூன்று யானைகளின்  அணிவகுப்புடன் முத்துக்குடை, பகவதி அம்மன் உருவப் படத்தை தாங்கியபடி பக்தர்கள் செல்வார்கள். குதிரை ஊர்வலம், அலங்கரிக்கப்பட்ட  ரதங்கள், நாதஸ்வரம், பஞ்ச வாத்தியம், செண்டை மேளம், சிங்காரிமேளம், தேவராட்டம், கோலாட்டம், பொய்க்கால் குதிரை, பஜனை... எனத் தமிழக, கேரள நாட்டுப்புறக் கலைகளின் கலவையாக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement