Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'மாரா... மாரா... ராமா... ராமா...' நாடகமாகிறது ஆஞ்சநேயர் கதை... ஆகஸ்ட் 12 -ம் தேதி அரங்கேற்றம்!

'Theatre காரன்' என்று பெயரையே வித்தியாசமாக வைத்திருக்கிறார்கள் இந்த நாடகக்குழுவினர். 'மாரா' என்ற புராண நவீன நாடகத்தை சென்னை மியூசிக் அகாடமியில் வருகிற 12-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு அரங்கேற்ற இருக்கிறார்கள். ஆஞ்சநேயர் பற்றிய இந்த நாடகத்தின் ரிகர்சலுக்குச் சென்று பார்த்த நமக்கு ஏகப்பட்ட ஆச்சர்யங்கள்...

'Theatre காரன்' குழுவின் அமைப்பாளராக இருந்து வழிநடத்துபவர் கண்ணன். 

கண்ணன், ராகவ், ஶ்ரீராம் ஜீவன்

"என் பையன் சபரிவாசுவும் அவனது சகாக்கள், ராகவ், ஶ்ரீராம் ஜீவன் மூவரும் ராஜா அண்ணாமலைபுரம் செட்டிநாடு வித்யாஸ்ரமில் ஒன்றாகப் படித்தவர்கள். மற்ற நாடகக் குழுக்களில் இருந்து வித்தியாசமான முறையிலும் ஒழுங்குடனும் தங்கள் நாடகக் குழுவை அமைக்க வேண்டுமென்று நினைத்தார்கள். அதற்கு நான் ஊக்கமும் ஆக்கமும் கொடுத்தேன். அப்படியே அமைந்துவிட்டது. இப்போது நாடகம் முழுவடிவம் பெற்று அரங்கேற இருக்கிறது" என்றார்.

ஆஜானுபாகுவாக மொட்டைத் தலையும் தாடியுமாக அங்கே இருந்த சபரிவாசுவிடம், 'என்ன சார் உங்கள் தோற்றமே இப்படி மிரட்டுகிறதே' என்றோம். 'சார், நாடகத்தில் நான் ராவணனாக நடிக்கிறேன். அதனால்தான் இப்படி ஒப்பனை' என்றவர் தொடர்ந்து, ''நானும் ராகவும் நல்ல நண்பர்கள். எங்கள் சீனியரும் இந்த நாடகத்தின் இயக்குநருமான ஶ்ரீராமும்  + 2 படிக்கும் காலத்திலேயே ஜூனியர், சீனியர் பேதமில்லாமல் பழகும் நண்பர்கள். 

ஆஞ்சநேயர் கதை

எங்கள் பள்ளியில் படிப்புடன் நாடகக் கலைக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஒரு கலைக்குழுவை அமைத்து ஸ்கிரிப்ட் ரைட்டிங், டயலாக் மாடுலேஷன் இதிலெல்லாம் நல்ல பயிற்சி அளித்தார்கள். அப்போதே ராமாயணம், மகாபாரதம் போன்ற நம் இதிகாசங்களிலிருந்து சில காட்சிகளை நாடகமாக்கி நடிப்போம். அப்போதிருந்தே எங்களுக்குள் ஒரு நட்பும் கலையார்வமும் வளரத் தொடங்கியது. ஏற்கெனவே மறவ நாடு, ஹே ராம் ஆகிய இரண்டு நாடகங்களை சில தனியார் நிறுவனங்களுக்காக நட்பு அடிப்படையில் நடத்தியிருக்கிறோம். இவை தவிர சில வீதி நாடகங்களையும் பெசன்ட்நகர், அண்ணாநகர் பகுதிகளில் நடத்தியிருக்கிறோம். இப்போது மாராவை வித்தியாசமான முறையில் அரங்கேற்ற இருக்கிறோம். இதில் என்னவெல்லாம் புதுமை சேர்த்திருக்கிறோம் என்பதை எங்கள் இயக்குநர் ஶ்ரீ ராம் ஜீவனிடமே கேளுங்கள்" என்றார்.

இயக்குநர் ஶ்ரீராம் ஜீவன் நடிகர்களையெல்லாம் ஒருங்கிணைத்து வசன உச்சரிப்புப் பயிற்சியைக் கொடுத்துக்கொண்டிருந்தார். பயிற்சி முடிந்ததும் அவரிடம் பேசினோம். 

நாடகம்

''சார் எங்கள் மூவருக்குமே கூத்துப்பட்டறை ஜெயக்குமார்தான் குருநாதர். அவர் எப்போதுமே வசன உச்சரிப்பு மற்றும் உடல்மொழி இவற்றுக்குத்தான் மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார். அதை அப்படியே இந்த நாடகத்தில் இறக்கி வைத்திருக்கிறோம். எங்களின் இந்த நாடகத்தில் 8 வயது முதல் 65 வயது வரை உள்ள நடிகர்களைப் பயன்படுத்தியிருக்கிறோம். நாடகம், சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதை அறிவீர்கள். மைக் வேலை செய்தாலும் செய்யாமல் போனாலும் கடைசி இருக்கையில் அமர்ந்திருப்பவர்களுக்கும் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் குரல் பயிற்சி. 

'மாரா' என்னும் இந்த நாடகத்தில் ஆஞ்சநேயரின் வாழ்வில் நடந்த அற்புதமான சில நிகழ்ச்சிகளின் தொகுப்பாக கதையை அமைத்திருக்கிறோம். வரலாற்று நாடகங்கள் என்றாலே,  இளைஞர்கள் கொஞ்சம் அந்நியமாகிப்போவார்கள். பொதுவாக சரித்திர நாடகங்களில் அளவு கடந்த ஒப்பனைகள், காஸ்ட்யூம்கள், நகைகள், கிரீடங்கள் என இருக்கும். ஆனால், இந்த நாடகத்தில் அப்படியெல்லாம் இல்லாமல் குரல் உச்சரிப்பு மற்றும் உடல் மொழியிலேயே அந்தந்த கதாபாத்திரங்களை நாங்கள் பார்ப்பவர்களின் கண் முன் நிறுத்துவோம். இது கொஞ்சம் கடினமான வேலைதான் என்றாலும் அதை நல்ல முறையில் செய்திருக்கிறோம் என்றே நம்புகிறோம்'' என்றார் மிகுந்த தன்னடக்கத்துடன்.  

அரங்கேரும் நாடகம்

''அது என்ன சார் 'மாரா' என வித்தியாசமான தலைப்பாக இருக்கிறதே?'' எனக் கேட்டோம். அப்போது குறுக்கிட்ட கண்ணன்,

''மாரா, மாரா என்று அடிக்கடி சொல்லிப் பாருங்கள். 'ராமா, ராமா' என்றே வரும். ராமரின் பக்தரான ஆஞ்சநேயரின் கதை இது என்பதால், வித்தியாசமாக இருக்கட்டும் என இந்தத் தலைப்பை வைத்திருக்கிறோம்

இந்த நாடகம் 12-ம் தேதி (சனி), 13-ம் தேதி (ஞாயிறு) ஆகிய இரண்டு நாள்களும் மாலை 5 மணிக்கு ஒரு ஷோ, 7 மணிக்கு ஒரு ஷோ என மொத்தம் நான்கு காட்சிகள் நடைபெறுகின்றன. இதில் இன்னோர் அம்சம் என்னவென்றால், யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கு முன்னிருக்கை என ஒதுக்கியிருக்கிறோம். நாடக்கலை உலகில் ஒரு புதிய மாறுதலைக் கொண்டு வரவே இப்படிச் செய்திருக்கிறோம். ரசிகர்களின் ஆதரவு நிச்சயம் இருக்குமென நினைக்கிறோம்'' என்றார்.  

பிள்ளையின் எண்ணத்தைப் புரிந்துகொண்டு, 'தந்தை மகற்காற்றும் உதவியாக' தன் மகன் சபரிவாசுவின் எண்ணங்களை வண்ணமயமாக்கி அவையில் முந்தி இருக்கச் செய்துவிட்டார் கண்ணன். அதேபோல் மகன் சபரிவாசுவும் தன் நண்பர்களுடன் இணைந்து, 'இவன் தந்தை எந்நோற்றான் கொல்' என்று சொல்லும்படி அற்புதமான ஒரு நாடகத்தை வடிவமைத்து இருக்கிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement