கோதையின் காதலும், கண்ணனின் லீலைகளும்! #Gokulashtami

ஒரு முறை திதிகளான அஷ்டமியும், நவமியும் திருமாலை தரிசிக்க ஶ்ரீவைகுண்டம் சென்றன. பெருமாளின் தரிசனத்தைப் பெற்ற அவை தங்களின் மனவருத்தத்தை அவரிடம் கூறத் தொடங்கின. "மக்கள் எந்த ஒரு விசேஷத்தையும் அஷ்டமி, நவமி ஆகிய இரு நாள்களில் செய்வதில்லை என்றும், எங்கள் இருவரையும் எப்போதும் ஒதுக்குகிறார்கள்" என்றும் மிகுந்த வேதனையுடன் திருமாலிடம் முறையிட்டன. அவைகளின் மனக்கவலையைப் போக்க நினைத்த எம்பெருமான் அவைகளிடம் ஒரு வாக்குறுதியை அளித்தார். அஷ்டமி, நவமியை மக்கள் கொண்டாடும் வகையில் அந்த இரு நாள்களில், தான் அவதாரம் எடுப்பதாகக் கூறினார். தனது வாக்குறுதியை நிறைவேற்றவே அஷ்டமி திதியில் கிருஷ்ணனாகவும், நவமி திதியில் ராமனாகவும் அவதரித்தார். அந்த இரு தினங்களையே நாம் கோகுலாஷ்டமியாகவும், ராமநவமியாகவும் கொண்டாடி வருகிறோம். கோகுலாஷ்டமியில் அவதரித்த ஶ்ரீகிருஷ்ணனின் லீலைகள் மிகவும் சுவையானவை. அவற்றுள் சிலவற்றை நாம் இப்போது சுவைப்போம்.

கோகுல கிருஷ்ணன்

யசோதையின் கண்ணன்...

தேவகியின் வயிற்றில் பிறந்த பகவான் கிருஷ்ணன் கோகுலத்தில் உள்ள யசோதையிடமே வளர்ந்தான். அவன் தன் தாய் யசோதையிடம் புரிந்த குறும்புகள் ஏராளமானவை. 

ஒருமுறை கிருஷ்ணரும் அவனது நண்பர்களும் கோகுலத்தில் இருக்கும் கோபியர்களின் இல்லத்துக்குச் சென்று அங்கு கட்டப்பட்டிருந்த பானைகளை உடைத்து, அதிலிருந்த வெண்ணெயை உண்டனர். இதனால் கோபம் கொண்ட கோபியர் கண்ணனைப் பற்றி புகார் செய்வதற்காக அவன் தாய் யசோதையிடம் வந்தனர். அவர்கள் யசோதையிடம், 'கண்ணனின் தொல்லைகள் தாங்க முடியவில்லை. அவனைக் கண்டித்து வைக்குமாறுக் கூறினர்.' இதனால் கண்ணன் மீது கோபம் கொண்ட யசோதா, அவனை அடிப்பதற்காக கையை ஓங்கினாள். ஆனால், மாயக்கண்ணனோ தனது முகத்தை அப்பாவியைப்போல் வைத்துக்கொண்டு அழுவதுபோல் பாசாங்கு செய்தான். இதைக் கண்டு மனம் உருகிய யசோதா, தனது இரு கைகளை நீட்டி அவனை அழைத்தாள். அவனும் தன் தாயிடம் சென்று அவள் மேல் ஏறிக்கொண்டு, கோபியர் நினைத்தது நடக்காத மகிழ்ச்சியில் அவர்களைப் பார்த்து கள்ளத்தனமாகப் புன்னகைப் புரிந்தான். யசோதா அவனைத் தன் காலில் போட்டு ஆட்டுகிறாள். இதையே,

வானவர் தாம் மகிழ வன்சகடமுருள

வஞ்சமுலைப் பேயின் நஞ்சமது உண்டவனே

கானகவல்விளவின் காயுதிரக்கருதி...

ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.

என்று பெரியாழ்வார் பாடுகிறார்.

தங்களுடைய எண்ணம் நிறைவேறாத ஏமாற்றத்தில் கோபியர் இல்லம் திரும்பினர். 

கண்ணனின் லீலை

ஆனால், கண்ணனின் லீலைகள் அதோடு நிற்கவில்லை. கண்ணன் வீட்டிற்குள் வருவதைத் தடுக்க எண்ணிய கோபியர் வீட்டினைத் தாளிட்டுச் சென்றனர். ஆனால் குறும்புக் கண்ணனோ அவனது சகாக்களுடன் கூரையைப் பிரித்து வீட்டினுள் நுழைந்து வெண்ணெயைத் திருடி உண்டனர். இந்த முறையும் கோபியர் யசோதையிடம் புகார் செய்தனர். இதனால் மிகுந்த கோபம் கொண்ட யசோதை அவனை உரலில் கட்டி வைக்க எண்ணினாள்.

அவனைக் கட்டுவதற்காக

வீட்டில் இருக்கும் தாம்புக் கயிற்றினை எடுத்து வந்து உரலில் கட்டி அதன் மறுமுனையை கிருஷ்ணனின் இடுப்பில் கட்ட முயன்றாள். ஆனால், கயிற்றின் நீளம் குறைவாக இருந்ததால் அது அவனை எட்டவில்லை. வீட்டிலுள்ள அனைத்துக் கயிறுகளையும் கொண்டு அவனைக் கட்ட முயன்றும் முடியவில்லை. இதைக் கண்டு அங்கிருந்த கோபியர் அனைவரும் யசோதையைக் கண்டு நகைத்தனர். இதனால் தாய்மீது இரக்கம் கொண்ட கண்ணன் கயிறு எட்டும்படி வந்தான். யசோதா அவனை உரலில் வைத்துக் கட்டினாள். இதைக் கண்ட தேவர்கள் கண்ணனை "தாமோதரன்" என்று அழைக்கத் தொடங்கினர். தாமோதரன் என்ற சொல்லுக்கு கயிற்றினால் கட்டப்பட்டவன் என்று பொருள்.

ராதையின் கண்ணன்...

கோகுலத்தில் கண்ணனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவர்களில் ராதை கண்ணனின் மீது அளவுகடந்த பக்தியும், காதலும் கொண்டிருந்தாள். அதேபோல் கண்ணனும் ராதாவின் மீது அதிக அன்பு கொண்டிருந்தான். அவர்கள் இருவரும் எப்போதும் ஒன்றாகவே கோகுலத்தில் உள்ள சோலைகள், வனங்களில் சுற்றித் திரிந்தனர். இதைக் கண்டு பொறாமை கொண்ட கோபியர் ராதையின் தாயிடம் சென்று, 'ராதை எப்போதும் கண்ணனுடன் சுற்றிக் கொண்டிருப்பதாகவும், அவளைக் கண்டிக்க வேண்டியும் கூறினர். ராதையின் தாயும் அவளைக் கண்டித்து வெளியே அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருந்தாள். அதேபோல் யசோதையிடமும் கூறினர்  கோபியர். யசோதையும் கண்ணனுக்கு வீட்டிலேயே சில வேலைகளைக் கொடுத்து அவன் தன்னை விட்டு அகலாதவாறு பார்த்துக்கொண்டாள்.

அதிக பிரியம் கொண்ட ராதையும், கண்ணனும் ஒருவரையொருவர் காணாது மிகுந்த ஏக்கம் கொண்டனர். அச்சமயம் ராதா வீட்டு பசுமாடுகளைக் கறப்பதற்கு ஆள் வராததால், கத்திக்கொண்டிருந்தது. உடனே யசோதா, 'பாவம்! பசுக்கள் கத்துகிறதே!' என்று பரிதாபப்பட்டாள். இதைக் காரணமாகக் கொண்டே ராதையைக் காண எண்ணிய கண்ணன் தன் தாயிடம், " அம்மா! நான் சென்று பால் கறந்து வரட்டுமா?" என்று வினவினான். யசோதாவும் ஏதோ ஒரு யோசனையில் சரி என்று தலையாட்டினாள். அவ்வளவுதான் தாமதம் கண்ணன் அங்கிருந்து துள்ளிக் குதித்து ராதையின் வீட்டை அடைந்தான். கண்ணன் வருவதைக் கண்ட ராதா, தன் தாயிடம் சென்று தான் தயிர் கடைந்து வருவதாகக் கூறினாள். அவள் தாயும் சரி என்று கூறியவுடன் ராதா தயிர் பானையும், மத்தையும் எடுத்துக்கொண்டு கண்ணனைக் காண வசதியாக இருக்கும் மாடிக்குச் சென்று அங்கிருக்கும் ஜன்னலின் அருகே அமர்ந்தாள். கண்ணனும் அவளைக் காணுவதற்கு வசதியாக அமர்ந்துகொண்டு பால் கறக்கத் தொடங்கினான்.

எப்போதும் ஒன்றாகவே, ஒருவரை ஒருவர் பாத்துக்கொண்டிருக்கும் அவர்கள், நீண்ட நாள்களாகப் பார்க்காததால் ஏக்கமடைந்தனர். அவர்களின் விழியில் காதலும், ஏக்கமும் பொங்கி வழிந்தது. இருவரும் கண்ணிமைக்க மறந்து ஒருவருடன் ஒருவர் விழியால் உரையாடிக்கொண்டிருந்தனர். சிறிது நேரம் சென்றதும், கண்ணன் இருக்கும் இடம் வந்த ராதையின் தாய் அவனைக் கடிந்துகொண்டாள். அப்போதுதான் கண்ணனுக்கு தான் காளை மாட்டில் பால் கறந்து கொண்டிருப்பது தெரிந்தது, அவன் உடனே அங்கிருந்து ஓட்டமாய் ஓடினான்.

வெண்ணை திருடும் கண்ணன்

ராதையின் தாய், மாடிக்கு தன் மகளிடம் வெண்ணெய் வாங்குவதற்கு சென்றாள். அப்போதுதான் ராதைக்கு தயிரை ஊற்றாமல் வெறும் பானையை தான் கடைந்தது தெரிந்தது. இதைப் பார்த்த ராதையின் தாய் தன் தலையில் அடித்தவாறே கீழிறங்கினாள். இவ்வாறு கிருஷ்ணனும், ராதையும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட காதல் மிகவும் அழகானது.

ஶ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் விஷ்ணுசித்தர் என்பவர் வாழ்ந்து வந்தார். அந்தணரான இவர் மலர்களைக் கொய்து மாலையாகக் கட்டி அதை ஶ்ரீவில்லிபுத்தூர் கோயிலுக்கு கொடுப்பதையே தன் முதல் கடமையாகக் கொண்டிருந்தார். அவர் இவ்வாறு தினமும் செய்து கொண்டிருக்கும்போது, ஒரு நாள் துளசி மாடத்தின் அருகே ஒரு பெண் குழந்தை இருப்பதைக் கண்டார். அக்குழந்தைக்கு கோதை என்று பெயரிட்டு வளர்த்தார்.

சிறு வயது முதலே கண்ணன் மீது பக்தியும், காதலும் கொண்டு வளர்ந்தாள். பருவ வயதை அடைந்ததும் கிருஷ்ணனையே மணக்க எண்ணினாள். அவள், தன்  தந்தை பகவானுக்காக தொடுத்த மாலையை யாரும் அறியாதவாறு தன் கழுத்தில் போட்டு அழகு பார்ப்பாள். பின்னர், அம்மாலை அவள் தந்தையால் பகவானுக்கு சூட்டப்படும். அவள் இவ்வாறு தொடர்ந்து செய்யும்போது ஒருமுறை தன் தந்தையிடம் மாட்டிக்கொண்டாள். அவள் மீது கோபம் கொண்டு அவளைக் கடிந்த விஷ்ணுசித்தர் அந்த மாலையைத் தூக்கி எறிந்து, மற்றொரு மாலையை இறைவனுக்கு சாற்றினார்.

அன்றிரவு அவரது கனவில் தோன்றிய இறைவன் கோதை சூடிக் கொடுக்கும் மாலையே தனக்கு உகந்தது என்றும், அதையே தாம் அணிய விரும்புவதாகவும் கூறி மறைந்தார். இதனாலேயே கோதை 'சூடி கொடுத்த சுடர்க்கொடி' என்று அழைக்கப்படுகிறாள். மேலும், அவள் இறைவனை தன் அன்பினால் ஆண்டதால் ஆண்டாள் எனவும் சிறப்பிக்கப்படுகிறாள்.

கண்ணனை மணப்பதுப் போல் கனவு ஒன்றினைக் கண்ட கோதை அதைப் பின்வரும் பாடலாகத் தன் தோழியிடம் விவரிக்கிறாள்:

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத

முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்

கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்

கண்ணன் என்கைபற்றித் தீவலம் செய்யக் கனாகண்டேன்

தோழீ நான்

திருமண வயது வந்ததும் அவள் தான் திருவரங்கம் இறைவனையே மணக்க விரும்புவதாகக் கூறினாள். இதனால் குழப்பமடைந்த விஷ்ணுசித்தரின் கனவில் தோன்றிய திருவரங்கநாதர் அவளை மணப்பெண் அலங்காரம் செய்து தன் திருக்கோயிலுக்கு அழைத்து வர கட்டளையிட்டார். அவ்வாறே விஷ்ணுசித்தரும் செய்ய மணப்பெண் அலங்காரத்துடன் கோதை திருவரங்க நாதரின் கருவறைக்குச் சென்று இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டாள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!