வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (17/08/2017)

கடைசி தொடர்பு:09:00 (17/08/2017)

சிவபெருமான் ஆலயத்தில் ஆஞ்சநேயர், குழந்தை வரம் அருளும் பைரவர்... ராமகிரி வாலீஸ்வரர் கோயில் அதிசயங்கள்!

'சிவாலயங்களில் சிவபெருமானின் சந்நிதிக்கு முன்பாக நந்திதேவர்தான் வீற்றிருப்பார். ஆனால், ஒரு சிவாலயத்தில் நந்திதேவருக்கு பதிலாக ஆஞ்சநேயர் காட்சி தருகிறார்'' என்று ஒரு தகவலை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் நண்பர்.

ராமகிரி வாலீஸ்வரர் ஆலய தோரணவாயில்

'சிவபெருமான் சந்நிதிக்கு முன்பாக நந்திதேவரா?' என்ற கேள்வியுடன் நண்பரைப் பார்த்தோம்.

நம் பார்வையில் தொக்கி நின்ற கேள்வியைப் புரிந்துகொண்ட நண்பர், ''உண்மைதான். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், நாகலாபுரம் - பிச்சாட்டூர் சாலையில் உள்ள ராமகிரியில் அமைந்திருக்கும் வாலீஸ்வரர் கோயிலில்தான் நான் சொன்னதுபோல் சிவபெருமானின் சந்நிதிக்கு முன்பாக ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். அது மட்டுமல்ல அந்தக் கோயிலில் பிரதோஷ வழிபாடும் நடப்பதில்லை'' என்று கூடுதலாக ஒரு தகவலையும் கூறினார்.

அந்தக் கோயிலை தரிசிக்கவும், சிவபெருமானுக்கு முன்பாக ஆஞ்சநேயர் காட்சி தருவதன் தாத்பர்யம் பற்றித் தெரிந்துகொள்ளவும் விரும்பி ராமகிரிக்குச் சென்றோம்.

திருக்காரிக்கரை என்ற பெயரிலும் இந்த ஊர் அழைக்கப்பட்டு வந்ததாகத் தெரியவருகிறது. சுந்தரமூர்த்தி நாயனார், தம்முடைய தேவாரத்தில் இடையாற்றுத் தொகை என்ற பதிகத்தில் இந்தத் தலத்தை, 'கடங்கள் ஊர் திருக்காரிக்கரை கயிலாயம்' என்று வைப்புத்தலமாக வைத்துப் பாடி இருக்கிறார்.

திருக்காரிக்கரைக்கு ராமகிரி என்ற பெயர் ராமாயண காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் காரணமாக ஏற்பட்டுவிட்டது என்று சொல்லப்படுகிறது.

அந்தச் சம்பவம்தான் இங்கே சிவபெருமானின் சந்நிதிக்கு முன்பாக ஆஞ்சநேயர் அமைந்திருப்பதற்குக் காரணமாகவும் உள்ளது.

பரிகாரம்

அந்தச் சம்பவம்-

ராவண சம்ஹாரத்தினால் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக்கொள்ள ராமேஸ்வரத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட நினைத்தார். சிவலிங்கம் கொண்டு வருவதற்காக அனுமனை காசிக்கு அனுப்பினார். அனுமனும் காசிக்குச் சென்று, அங்கிருந்து ஒரு சிவலிங்கத்தை எடுத்துக்கொண்டு திரும்பினார். ஆனால், காசியின் காவல் தெய்வமாக இருக்கும் கால பைரவரின் அனுமதியைக் கேட்காமல் அனுமன் சிவலிங்கம் எடுத்துச் சென்றது பிரச்னையை உருவாக்கிவிட்டது. தம்முடைய அனுமதி இல்லாமல் சிவலிங்கத்தை எடுத்துச் செல்லும் அனுமனைத் தடுத்து நிறுத்தி அவருடன் போரிட்டார் காலபைரவர். ஆனால், தேவர்கள் அனைவரும் ஒரு நல்ல காரியத்துக்காகவே அனுமன் சிவலிங்கம் கொண்டு செல்வதாகவும், அன்பு கூர்ந்து தடை செய்யவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர். காலைபைரவரும் அரைமனதுடன் அனுமன் சிவலிங்கத்தை எடுத்துச் செல்ல அனுமதித்தார். இருந்தும் காலபைரவரின் மனம் சமாதானம் ஆகவில்லை.

எப்படியாவது சிவலிங்கத்தை மீட்கவேண்டும் என்று நினைத்தவர், சூரியபகவான் மற்றும் வருணபகவான் ஆகியோர் துணையுடன் அனுமனுக்குக் கடுமையான தாகம் ஏற்படும்படிச் செய்தார். தாகத்தால் தவித்த அனுமன் திருக்காரிக்கரைக்கு அருகில் வந்துகொண்டிருந்தார். அப்போது கங்காதேவியிடம் ஒரு நீர்நிலையை ஏற்படுத்தவேண்டும் என்று காலபைரவர் கூறினார். அப்படியே கங்காதேவி அங்கே ஒரு குளத்தை ஏற்படுத்தினாள். குளத்தைக் கண்டதும் அனுமனுக்கு உற்சாகம் பெருக்கெடுத்தது. அந்த வேகத்திலேயே அவருடைய உற்சாகம் வடிந்தும்விட்டது.கையில் வைத்திருக்கும் சிவலிங்கத்தை யாராவது வாங்கிக் கொண்டால்தானே தண்ணீர் அருந்தமுடியும்? அனுமன் சுற்றுமுற்றும் பார்த்தார். அதற்காகவே காத்திருந்த காலபைரவர், ஒரு சிறுவனாக வடிவம் கொண்டு அனுமன் முன்பாகத் தோன்றினார்.

கோயில் தோற்றம்

அந்தச் சிறுவனிடம் சிவலிங்கத்தைக் கொடுத்த அனுமன், எக்காரணத்தைக் கொண்டும் சிவலிங்கத்தைக் கீழே வைக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு, தண்ணீர் அருந்தச் சென்றார். அனுமன் அந்தப் பக்கம் போனதுதான் தாமதம், சிறுவனாக வந்த காலபைரவர் சிவலிங்கத்தை வைத்துவிட்டு மறைந்துவிட்டார். திரும்பி வந்து பார்த்த அனுமன் தான் கொண்டு வந்த சிவலிங்கம் தரையில் வைத்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டார்.

அந்தச் சிவலிங்கத்தை கைகளால் எடுக்க முயன்றார். அவரால் எடுக்க முடியவில்லை. வாலினால் கட்டி இழுக்க முயன்றார். அப்போதும் வடக்குமுகமாகத் திரும்பியதே தவிர, அனுமனால் சிவலிங்கத்தை எடுக்க முடியவில்லை.தன்னிடம் இருந்து சிவலிங்கத்தைப் பெற்று கீழே வைத்தது காலபைரவர்தான் என்பதை உணர்ந்துகொண்ட அனுமன், காலபைரவரை வழிப்பட்டு அவருடைய அருளால் மற்றொரு சிவலிங்கத்தைப் பெற்றுக்கொண்டு ராமேஸ்வரம் சென்றதாகத் தலவரலாறு கூறுகிறது.

தனக்கு இப்படி ஒரு நிலை இந்தக் குளத்தால்தானே ஏற்பட்டது என்ற கோபத்தில் அனுமன் அங்கிருந்த சிறு மலையைப் பெயர்த்து குளத்தில் வீசினார். அனுமன் ராமபிரானின் வழிபட்டுக்காகக் கொண்டு வந்த சிவலிங்கம் அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டதால் ராம என்ற பெயரையும், அனுமன் வீசிய சிறு குன்று மலை (கிரி)யாக நிலைத்ததால் கிரி என்ற பெயரையும் சேர்த்து அந்த ஊருக்கு ராமகிரி என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.

அனுமன் வாலினால் கட்டி இழுத்ததால், இந்த ஆலயத்தில் அருளும் இறைவன் வாலீஸ்வரர் என்னும் திருப்பெயர் கொண்டார். இறைவனின் சந்நிதிக்கு நேராக ஆஞ்சநேயரும், அவருக்கு அடுத்தபடியாக நந்திதேவரும் காட்சி தருகிறார்கள். அம்பிகையின் திருநாமம் மரகதாம்பிகை. இந்தத் தலத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டைக்குக் காரணமாக இருந்த காலபைரவர், சந்தான பிராப்தி பைரவர் என்று அழைக்கப்படுகிறார். பைரவர் சந்நிதிக்கு அடுத்தபடியாக காளிமாதாவின் சந்நிதியை தரிசிக்கலாம். மேலும் விநாயகர், பிரம்மதேவர், விஷ்ணு, ஷண்முகர், அமர்ந்த கோலத்தில் வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, சூரியபகவான் போன்ற பரிவார தெய்வங்களும் அருள்புரிகின்றனர்.

நந்தி வாயில் தீர்த்தம்

இந்தக் கோயிலில் நடைபெறும் சிறப்புப் பிரார்த்தனை பற்றியும், கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெறாத காரணம் பற்றியும் கோயில் அர்ச்சகர் சங்கர்ராஜ் குருக்களிடம் கேட்டோம்.

''இந்தக் கோயிலில் காலபைரவர் சந்தான பிராப்தி பைரவராக அருள்கிறார். எனவே குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கே வந்து பைரவரை வேண்டிக்கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும், குழந்தையைக் கொண்டு வந்து பைரவருக்கு கொடுத்து விட்டு, பிறகு பைரவரின் வாகனமான நாய் உருவத்தை விலையாகக் கொடுத்து திரும்பவும் குழந்தையைப் பெற்றுச் செல்கிறார்கள்.

இங்கே சிவபெருமானுக்கு முன்பாக ஆஞ்சநேயர் இருப்பதால்தான் பிரதோஷ வழிபாடு நடைபெறுவதில்லை'' என்று தெரிவித்தார்.

கோயிலுக்கு வெளியில் ஒரு தீர்த்தக் குளம் இருக்கிறது. அந்த தீர்த்தக்குளத்தின் ஒரு கரையில் இருக்கும் நந்தி சிலையின் வாயில் இருந்து தண்ணீர் தீர்த்தக் குளத்துக்குள் விழுந்துகொண்டே இருக்கிறது. இந்தத் தீர்த்தம் நந்தி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

பல்லவர்களால் 9-ம் நூற்றாண்டில் திருப்பணிகள் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் இந்தக் கோயிலுக்கு பிற்காலச் சோழர்களும், விஜயநகர மன்னர்களும் திருப்பணிகள் செய்திருக்கின்றனர்.

உங்கள் கவனத்துக்கு...

தலத்தின் பெயர்: ராமகிரி

சுவாமி: அருள்மிகு வாலீஸ்வரர், சந்தான பிராப்தி பைரவர்

அம்பாள்: அருள்மிகு மரகதாம்பிகை

தீர்த்தம்: நந்தி தீர்த்தம்

விருட்சம்: அரசமரம்

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 8 முதல் 11 வரை மாலை 3 முதல் 6 வரை

தீர்த்த குளத்தில் நீராடும் பக்தர்கள்

எப்படிச் செல்வது?:

சென்னை - திருப்பதி சாலையில் சென்னையில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் நாகலாபுரத்துக்கும் பிச்சாட்டூருக்கும் இடையில் உள்ளது ராமகிரி. பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள கோயிலுக்குச் செல்ல ஆட்டோ வசதி உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்