சங்கடங்கள் தீர்த்து சகல வரங்கள் அருளும் சனி மகாபிரதோஷம்! #AllAboutShaniMahaPradosham | Story of Shani Maha Pradosham

வெளியிடப்பட்ட நேரம்: 20:16 (18/08/2017)

கடைசி தொடர்பு:11:45 (19/08/2017)

சங்கடங்கள் தீர்த்து சகல வரங்கள் அருளும் சனி மகாபிரதோஷம்! #AllAboutShaniMahaPradosham

அன்று சனிக்கிழமை. ஸ்வர்ணமித்ராவுக்கு பள்ளி விடுமுறை. விடுமுறை என்றாலே அவளுக்குக் கொண்டாட்டம்தான். மாலையில் தாத்தாவுடன் செல்வது அவளுக்கு மிகவும் விருப்பமான விஷயம். காலையில் இருந்தே தாத்தாவிடம், “சாயந்திரமா என்னை எங்கே கூட்டிட்டுப் போகப்போறீங்க தாத்தா?” என்று நச்சரித்துக் கொண்டே இருந்தாள். பேத்தியை எங்கே அழைத்துச் செல்வது என்று யோசித்துக் கொண்டிருந்த தாத்தாவிடம், “இன்னிக்கு சனி மகா பிரதோஷம். அதனால சிவன் கோயிலுக்குக் கூட்டிட்டுப் போங்க” என்று சொன்னபடியே வந்த பாட்டி பங்கஜம், பேத்தியைப் பார்த்து, “சரியா செல்லம்?” என்று கேட்டாள்.

ஸ்வர்ணமித்ராவும் சந்தோஷமாகச் சம்மதித்தாள்.

பிரதோஷம்

மூன்று மணிக்கே கோயிலுக்குப் போக தயாராகிவிட்டாள் ஸ்வர்ணமித்ரா. கோயிலுக்குப் போவதில் பேத்திக்கு இருந்த ஆர்வம் தாத்தாவுக்கு பிடித்துப் போனது. உடனே அவரும் தயாராகி பேத்தியுடன் கோயிலுக்குக் கிளம்பினார்.

போகும் வழியிலேயே தாத்தாவிடம் கதை சொல்லும்படிக் கேட்டாள்.

''பிரதோஷ வரலாறு பற்றி சொல்லட்டுமா?'' என்று கேட்டார். பேத்தியும் சரி என்பதாக தலையசைத்தாள். 

தாத்தா கதையைத் தொடங்கினார்.

“தேவர்கள் எல்லோரும் விஷ்ணு பகவானிடம் போய்,  "எப்பவும் தங்களுக்கு மரணமே வரக்கூடாது... அதுக்கு நாங்க என்ன செய்யனும்"ன்னு யோசனை கேட்டாங்க. அவர், பாற்கடலைக் கடையும்படியும், அதுல வர்ற அமிர்தத்தைச் சாப்பிட்டா மரணமே வராதுன்னும் சொன்னாரு. உடனே தேவர்கள் பாற்கடலுக்குப் போனாங்க. மந்தரமலையை மத்தாக்கி, வாசுகிப் பாம்பைக் கயிறாக்கி பாற்கடலைக் கடைஞ்சாங்க. அவங்களால மட்டும் முடியாதுங்கறதால, அசுரர்களையும் கூட சேர்த்துக்கிட்டாங்க. அமிர்தத்துக்கு ஆசைப்பட்டு அசுரர்களும் ஒத்துக்கிட்டாங்க. வாசுகிப் பாம்பின் தலைப் பக்கம் அசுரர்களும் வால் பக்கம் தேவர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைஞ்சாங்க. ஆனா, மந்தரமலை சரியான பிடிப்பு இல்லாம வழுக்கிட்டே இருந்துச்சி'' என்று தாத்தா சொல்லிக் கொண்டு வந்தபோதே குறுக்கிட்டாள் ஸ்வர்ணமித்ரா.

“அச்சச்சோ, அப்புறம் என்ன ஆச்சு தாத்தா?”

பிரதோஷ திருத்தலங்கள்

‘அப்போ விஷ்ணுபகவான் ஆமையா அவதரிச்சு அந்த மலையை நழுவவிடாம தாங்கிப் பிடிச்சிக்கிட்டார். அப்புறமா தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைஞ்சாங்க'' என்று தாத்தா சொல்லிக்கொண்டிருந்தபோதே மீண்டும் குறுக்கிட்ட ஸ்வர்ணமித்ரா, “அப்புறம் அமிர்தம் வந்திடுச்சா?” என்று ஆர்வத்துடன் கேட்டாள்.

இதற்குள் கோயிலுக்கு வந்துவிட்டனர். கோயிலுக்குள் இருந்த ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்து கொண்டு, விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தார் தாத்தா.

“ஹூம், அதான் இல்லை. பாற்கடல்ல இருந்து முதல்ல விஷம்தான் வந்துச்சி”

“என்னது... விஷமா? அப்புறம் என்னாச்சு தாத்தா?” கண்கள் மிரளக் கேட்டாள் ஸ்வர்ணமித்ரா.

பிரதோஷம்

‘பாற்கடல்ல இருந்து வந்த விஷமும், வலி தாங்காம வாசுகிப் பாம்பு கக்கின விஷமும் சேர்ந்து ரொம்பக் கடுமையான விஷமா மாறினதும் உலகமே இருண்டிடுச்சு. தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் என்ன செய்வதென்றே தெரியலை. எதுக்கும் பயப்படாத அசுரர்களும்கூட பயந்து ஓடிட்டாங்க. முனிவர்களும் தேவர்களும் சிவபெருமான்கிட்ட போய் வேண்டிக்கிட்டாங்க. சிவபெருமான் நந்திதேவரை அனுப்பி அந்த விஷத்தை எடுத்து வரச்சொன்னார்... அதைக் கொண்டு வந்து கொடுத்தவுடனே, சிவபெருமான்  குடிச்சிட்டார்” என்று தாத்தா சொல்ல மீண்டும் அதிர்ச்சியால் கண்கள் விரிய,

“அந்த விஷம் சிவபெருமானை ஒண்ணும் பண்ணலையா தாத்தா?” என்று கேட்டாள்.

“சிவபெருமான் விஷத்தைக் குடிச்சதுமே பார்வதி சிவபெருமானோட தொண்டையில கையை வச்சி அழுத்திட்டாங்க. விஷம் உடம்புல இறங்காம கழுத்துப் பகுதியிலயே நின்னுடிச்சு. அதனாலதான் சுவாமிக்கு திருநீலகண்டன் அப்படின்னு பேரு வந்துச்சு'' 

“சரி தாத்தா, அதுக்கும் பிரதோஷத்துக்கும் என்ன சம்பந்தம்?”

“சுவாமி விஷத்தைக் குடிச்சது தசமி அன்னிக்கு. தேவர்கள் அதோட நிறுத்தாம மறுநாள் ஏகாதசி அன்னிக்கும் பாற்கடலைத் தொடர்ந்து கடைஞ்சாங்க. அப்ப அதுல இருந்து காமதேனு, கற்பக விருட்சம், ஐராவதம்கற யானையெல்லாம் வந்துச்சி. தொடர்ந்து மகாலட்சுமியும் வந்தாங்க. மறுநாள் துவாதசியன்னிக்கு விடிகாலைல அமிர்தம் வந்தது. தேவர்களும் அசுரர்களை ஏமாற்றிவிட்டு மொத்த அமிர்தத்தையும் அவங்களே குடிச்சிட்டாங்க” என்ற தாத்தா பேத்தியைப் பார்த்து, “உனக்கு யாராவது உதவி செஞ்சா, நீ அவங்கக்கிட்ட என்ன சொல்லுவே?” என்று கேட்டார்.

(தஞ்சை பெரியகோயில் பிரதோஷ வழிபாடு - வீடியோ)

காரணம் புரியாமலேயே, ‘எனக்கு யாராவது உதவி செஞ்சா நான் ‘தேங்க்ஸ்’ன்னு சொல்லுவேன்”

இந்த பதிலையே எதிர்பார்த்த தாத்தா “வெரிகுட்.. குழந்தை உனக்குத் தெரிஞ்ச விஷயத்தை அன்னிக்குப் பார்த்து தேவர்கள் மறந்துட்டாங்க. சிவபெருமானுக்கு கோபம் வந்திடுச்சி. விஷயம் தெரிஞ்சு மறுநாள் திரயோதசி அன்னிக்கு எல்லோரும் ஓடிப் போய் சிவன் சுவாமிகிட்ட மன்னிப்பு கேட்டுக்கிட்டாங்க. அவர்தான் ரொம்ப கருணை உள்ளவராச்சே. எல்லோரையும் மன்னிச்சு, அந்த சந்தோஷத்தோட அன்னிக்கு சாயங்காலம் 4.30 மணியில இருந்து 6 மணி வரைக்கும் நந்தி பகவானோட இரண்டு கொம்புகளுக்கு இடையில் நடனம் ஆடினார். அந்த நேரம்தான் பிரதோஷ காலம். தோஷம் எல்லாத்தையும் போக்கறதால அந்த நேரத்துக்கு ‘பிரதோஷ காலம்’னு பேர் ஏற்பட்டுச்சு

தாத்தா இப்படி மாறி மாறி சுற்றுவதைப் பார்த்து பொறுமையிழந்த ஸ்வர்ணமித்ரா, “ஏன் தாத்தா அப்படி இப்படி சுத்துறீங்க? ஒரே பக்கமா சுத்த கூடாதா?” என்று கேட்டாள். அதற்கும் பதில் வைத்திருந்தார் அவர். தாத்தா இப்படி சொல்லிக் கொண்டு இருந்தபோது பிரதோஷ நேரம் வந்துவிட்டதால் அர்ச்சகர் நந்தி மண்டபத்துக்கு வந்து நந்திதேவருக்கு அபிஷேக ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கி விட்டார். நந்திதேவருக்கும் சுவாமிக்கும் அபிஷேகம் முடிந்ததும், தாத்தாவும் பேத்தியும் கோயிலை பிரதட்சிணம் செய்தனர். அப்போது தாத்தா, நந்திதேவரிடம் இருந்து துவங்கி இடப்புறமாகச் சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி, மறுபடியும் திரும்பி நந்திதேவரிடம் வந்தார். பின்னர் நந்தியின் இரு கொம்புகளின் வழியே சிவபெருமானைத் தரிசித்து, பின்னர் வலப்புறமாக சென்று கோமுகியை வணங்கினார். இதே முறையில் அவர் மூன்று முறை வலம் வந்தார். 

“பிரதோஷ வேளையில் இப்படித்தான் சுத்தனும், இதுக்கு பேர்தான் 'சோமசூக்த பிரதட்சணம்'. அதாவது ஆலகால விஷம் வெளியான போது தேவர்களும் இப்படித்தான் அங்கும் இங்கும் அலைஞ்சாங்களாம்'' என்றார்.

“ஓகோ, அப்ப சரி” என்று தாத்தா சொன்னதை பெரிய மனுஷி போல் ஸ்வர்ணமித்ரா ஆமோதித்தாள். 

பிரதோஷ பூஜைகள் முடிந்ததும் பிரசாதம் பெற்றுக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினார்கள்.

திரும்பும்போது ஸ்வர்ணமித்ராவுக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது.

“தாத்தா, சனி பிரதோஷம்னா ரொம்ப விசேஷம்னு சொல்றது ஏன்?” என்று கேட்டாள்.

சிவபெருமான் பாற்கடல்ல வந்த விஷத்தைக் குடிச்ச மறுநாளைக்கு மறுநாள் வந்த திரயோதசி ஒரு சனிக்கிழமையில வந்ததாலதான், சனிக்கிழமை வர்ற பிரதோஷம் ரொம்ப விசேஷமா சொல்றாங்க. பிரதோஷ வேளையில் கோயில்ல எல்லா தேவர்களும் இருக்கறதா ஐதீகம். ஆகையால பிரதோஷ வேளையில சிவபெருமானை வழிபடுவது ரொம்ப நல்லது” என்று தாத்தா சொன்னதை ஓர் ஆமோதிப்புடன் ஏற்றுக்கொண்டாள் ஸ்வர்ணமித்ரா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்