Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“ஆண்டவன் சம்பந்தப்பட்ட வேலை... ஆத்ம திருப்திக்காக செய்றோம்...” - மண்ணுக்கு உயிர்கொடுக்கும் கொசப்பேட்டைக் கலைஞர்கள்! ! #VinayagarChaturthi

ஆகஸ்ட் 25-ம் தேதி விநாயகர் சதுர்த்தி. கொண்டாட்டங்கள் இப்போதே களைகட்டத் தொடங்கி விட்டன. இடங்களைத் தயார் செய்ய, கொடி, தோரணம் கட்ட என வேலைகளை ஆரம்பித்து விட்டார்கள்.

விநாயகர் சிலை

சென்னையைப் பொறுத்தவரை, புரசைவாக்கத்தை அடுத்து இருக்கக்கூடிய கொசப்பேட்டை  பிசியாகி விட்டது. வீட்டுக்கு வீடு விதவிதமான விநாயகர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். சிலர், நுட்பமான தங்கள் கலைத்திறனால் விநாயகரை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.  சிலர் வண்ணம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் தயாரிக்கும் வேலைகள் நடக்க, இன்னொரு பக்கம் விற்பனை நடக்கின்றன. 

கொசப்பேட்டையின் பிரதான தொழிலே மண்பாண்டம் செய்வதுதான். பலர் தலைமுறை தலைமுறையாக இந்தத் தொழிலைச் செய்து வருகிறார்கள். ஒரு காலத்தில் ஓஹோ என்றிருந்த தொழில், இன்று சொல்லிக்கொள்ளும்படி இல்லாமல் போய்விட்டது. தொழிலின் பிரதான இடுபொருளான களிமண் கிடைக்காதது, மண்பாண்டத்தின் மீதான ஈர்ப்பு மக்களிடம் குறைந்தது இப்படி அதற்குப் பல அதற்குப் பல காரணங்கள் உண்டு. இருந்தாலும் தொழிலின் மீதிருக்கும் பிடிப்பால் வீம்பாக, சிலர் இதைக் கட்டிக்காப்பாற்றி வருகிறார்கள். 

"பிள்ளையார் தான் தம்பி எங்களைக் காப்பாத்துறாரு. பிள்ளையார் சதுர்த்தியை நம்பித்தான் இங்கே பலபேரு வாழ்க்கை ஓடுது. முன்னெல்லாம் களி மண்ணு சர்வசாதாரணமா கிடைச்சுச்சு. இப்போ கண்ணால பார்க்க முடியலே. சென்னை பெருசானதால, எல்லா எடமும் காங்கிரீட்டா மாறிப்போச்சு. மண்ணுக்கு எங்கே போறது...?"- சலிப்பாக பேசிய பெரியவரிடம் நெருக்கமானோம்.   

விநாயகர் சிலை செய்யும் கலைஞர்கள்

“முன்னெல்லாம் விநாயகர் சதுர்த்தி அப்போ, திருவிழா மாதிரி ஆயிடும். கண்படுற இடமெல்லாம் கணபதிதான்.  கையளவு கணபதியில இருந்து 10 அடி கணபதி வரைக்கும் செய்வோம். இப்போ இடநெருக்கடி அதிகமாயிடுச்சு. அதனால பெரிய சைஸ் கணபதியெல்லாம் செய்ய முடியாது. ஆர்டரை வாங்கிட்டுப் போய் ஆந்திராவுல வாங்கிட்டு வந்து தான் குடுக்கிறோம்..." என்றபடி ஒரு குட்டி விநாயகருக்கு வண்ணம் தீட்டுவதில் பிசியாகிறார் அந்தப் பெரியவர்.  

கொசப்பேட்டையின் தெருக்கள் அடைசலாக இருக்கின்றன. சிறு சிறு பிள்ளையார்கள் செய்யும் பணி ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது. வீடும், தொழில் களமும் ஒன்று தான். ஹால், படுக்கை அறை, டிவி, கட்டில், சேர்களிலும் கூட  பிள்ளையார் சிலைகளை செய்து காய வைத்திருக்கிறார்கள். 

கொசப்பேட்டை

சச்சிதானந்தன் தெருவில், விநாயகர் சிலையில் லயித்து வண்ணம் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள் குமாரும் அவரது மனைவி ராஜலட்சுமியும்.   

“30 வருஷமா விநாயகரோடத் தான் வாழ்ந்துக்கிட்டிருக்கோம்.  எனக்கு முன்னாடி எங்க அப்பா, தாத்தாவும் இந்த வேலைதான் செஞ்சாங்க  விநாயகர் சதுர்த்திக்கான வேலையை  ஜனவரி மாசமே தொடங்கிடுவோம். நந்தி விநாயகர், பசு விநாயகர், எலி வாகன விநாயகர், சிங்க வாகன விநாயகர், புலி வாகன விநாயகர், மயில் வாகன விநாயகர்ன்னு நிறைய  வடிவங்கள்ல செய்வோம். ஆர்டர் கொடுக்க வர்றவங்களும் ஐடியா கொடுப்பாங்க. எதைச் செஞ்சாலும் சில சாஸ்திர விதிகள் இருக்கு. அதை மீற மாட்டோம். விநாயருக்குன்னு சில வடிவ யுத்திகள் உண்டு. அதையும் தாண்ட மாட்டோம். சென்னை மட்டுமில்லாம, காஞ்சிபுரம்,வேலூர் வரைக்கும் எங்க கொசப்பேட்டை விநாயகர் தான்.  பெரிசா ஒன்னும் வருமானம் கிடைக்காது. ஆனா, ஆண்டவன் சம்பந்தப்பட்ட வேலை... ஆத்ம திருப்திக்காக செய்றோம். என்னைக்காவது விநாயகர் கண் திறந்து பாப்பாருங்கிற நம்பிக்கையில தான் வாழ்க்கை ஓடுது.

விநாயகர் சிலை செய்யும் கலைஞர்கள் குமார், ராஜலட்சுமி

கைதொழிலைக் கத்துக்கிட்டா  வாழ்க்கையில கஷ்டம் வராதுனு நினைச்சுதான் இதை கத்துக்கிட்டோம். ஆனா, இப்பல்லாம் யாருமே இதை தொழிலா  மதிக்கிறதில்ல. அரசும், 'கலைஞர்களாச்சே... கைவிடக்கூடாது'ன்னு நினைக்கல; எங்கள கண்டுக்கிறதில்ல. பேங்க்ல கூட எங்களை நம்பி கடன் தரதில்லை. பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மாவால் தயாரிக்கப்பட்ட  சிலைகள் வந்ததுக்கப்புறம் நம்மகிட்ட வர்றவங்க குறைஞ்சிட்டாங்க. அதனால இங்கிருக்கிற பல குடும்பங்கள் மற்ற வேலைகளை நோக்கி போயிட்டாங்க. எங்க பிள்ளைகளோட நிலைமையும் எங்கள மாதிரி போயிடக்கூடாது. அப்படித்தான் எல்லோரும் யோசிக்கிறோம்...”

வேலை செய்தபடியே பேசுகிறார் குமார். 

மண்பாண்டக் கலை என்பது மானுடத்தின் ஆதிக்கலைகளில் ஒன்று. மண்ணுக்கு உயிர் கொடுத்து உலவ விடும் ஒப்பற்ற இந்தக் கலையை அரசு காப்பாற்றி முன்னெடுக்க வேண்டும். இறைவனுக்கே வடிவம் கொடுக்கும் இந்த கலைஞர்களை கௌரவித்து, அவர்களுக்கு மேலான வாழ்வாதாரத்தை அமைத்துத் தர வேண்டும். 

கடவுள் இந்தக் கலைஞர்களை கண்திறந்து பார்க்க வேண்டும்! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement