ஆகஸ்ட் 21-ம் தேதி சூரிய கிரகணம்... என்னென்ன மாற்றங்கள் நிகழும்? #Astrology | What changes will take place on the 21st of August solar eclipse!

வெளியிடப்பட்ட நேரம்: 13:23 (20/08/2017)

கடைசி தொடர்பு:20:26 (20/08/2017)

ஆகஸ்ட் 21-ம் தேதி சூரிய கிரகணம்... என்னென்ன மாற்றங்கள் நிகழும்? #Astrology

ஆகஸ்ட் 21-ம் தேதி சூரிய கிரகணம். சூரிய கிரகணக் காலத்தில் பூமியின் நிலப்பரப்பிலும் கடற்பரப்பிலும் கதிர்வீச்சுகளின் தாக்கம் அதிகமிருக்கும் என்கிறார்கள். தற்போது ஏற்படக் கூடிய சூரிய கிரகணம் ஜோதிட ரீதியாக எந்த மாதிரிப் பாதிப்புகளை ஏற்படுத்தும்?

ஜோதிட நிபுணர் ஆஸ்ட்ரோ கிருஷ்ணனிடம் கேட்டோம். 

சூரிய கிரகணம்

கங்கண சூரிய கிரகணம்!

"சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படுகின்றது. எப்போதும் சூரிய கிரகணமானது, அமாவாசை நாளில்தான் ஏற்படும். அப்போது சூரியனின் முழுப்பகுதியோ  (முழு சூரிய கிரகணம்) அல்லது ஒரு பகுதியோ  (பகுதி சூரிய கிரகணம்) மறைந்து காணப்படும். இப்போது வரும்  சூரிய கிரகணத்தை 'கங்கண கிரகணம்' அல்லது 'வளைய கிரகணம்' என அழைக்கிறார்கள். 

 பூமியைப் பொறுத்தவரை, நிலவின் பாதை வட்டமானதல்ல. நீள்வட்டப் பாதையாகவே இருக்கின்றது. இதனால் நிலவுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் 3.56 லட்சம் கிலோ மீட்டராகவும் நீள்வட்டத்தில் 4.07 லட்சம் கிலோ மீட்டராகவும் உள்ளது.

 

ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்பூமியிலிருந்து பார்க்கும்போது நிலவின் அளவில் 13 சதவிகிதம் அளவு வரை தோற்றத்தில் மாற்றம் இருக்கும். இதன் காரணமாக நிலவின் எதிர் நிழல் பூமியின் மீது விழும். இந்த எதிர் நிழலின் பாதையே 'வளைய மறைப்பு' எனப்படுகிறது.

வருகிற  21-ம் தேதி திங்கள்கிழமை (ஆவணி மாதம் 5 - ம் தேதி) இரவு 9.15 மணிக்குத் தொடங்கி, கிட்டத்தட்ட 5 மணி நேரம் வரை சூரிய கிரகணம் நீடிக்கிறது. இந்திய நேரப்படி இரவு 9.15க்கு  தொடங்குவதால்  இந்த சூரிய கிரகணத்தை  இந்தியாவில் பர்க்க முடியாது. ஆனால் கிரகணத்தின் தாக்கம் இங்கும் இருக்கும். அமெரிக்காவின் சில மாகாணங்களில் இதன் தாக்கம் பெரிய அளவில் இருக்கும். இருளில் மூழ்கி விடவும் வாய்ப்பு உண்டு. 

கிரகணம் என்றாலே, இயல்பாகவே அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் பயம் கூடிக்கொள்கிறது. வெளியில் செல்வதில் இருந்து, உணவு விஷயம் வரை ... அதுவும் சூரிய கிரகணம் என்றால் அழிவு, ஆபத்து, தீய சக்தியின் உக்கிர தாண்டவம் என்றெல்லாம் சிலர் பேசி வருகிறார்கள். 

ஒருவருடைய  ஜென்ம நட்சத்திரத்துக்கு கிரகணம் ஏற்படுவது என்பது  அந்த நட்சத்திரத்தின் நேர்க்கோட்டில் அவர் பிறந்த இடமான,  பூமியின் பகுதிக்கு, சந்திரன், சூரியன் ஆகியவை வரும் நேரம் ஆகும்.

அலெக்ஸாண்டர்

'இன்கா' இனத்தைச் சேர்ந்த  ஆதிமனிதர்கள் சூரியனையும் சந்திரனையும் கடவுளாக வழிபட்டனர். அவர்கள் இது போன்ற கிரகணங்களை, ஏதோ ஒரு தீமை வரப்போவதன் அடையாளமாகவே கருதியதாக வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன. அலெக்சாண்டர், நெப்போலியன் போன்ற  மாவீரர்கள் எல்லாம் இது போன்ற கிரகண காலங்களில் போரைத் தவிர்த்துள்ளனர்.

 சூரிய கிரகணம் பற்றி சாஸ்திரங்கள் சொல்லும் ரகசியம்: 

சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில், சூரியன், சந்திரன், பூமி  ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். இதில் கிரகண நேரத்தில் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது உண்மை. அதாவது,  சூரிய, சந்திர கதிர்வீச்சின்  குறைபாட்டால், கருவில் இருக்கும் குழந்தைகளின் வளர்ச்சியில் சில உறுப்புகள் பாதிக்கப்படலாம். பெண்கள் தங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கு, 'கிரகண தோஷம்' ஏற்பட்டு, அதனால் ஒரு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது  என்பதற்காக, வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள்.  

சூரியன்-சந்திரன் இரண்டிலிருந்தும் வரும் ஒளி வீச்சை, ராகு அல்லது கேது மறைப்பதையே 'கிரகணம்' என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. இன்றும் ஜோதிட ரீதியாக, ஜனன ஜாதகத்தில் இருக்கும் சூரியனையோ, சந்திரனையோ,  கோசாரத்தில் ராகுவோ, கேதுவோ கடக்கும்போது சில கசப்பான விளைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அமாவாசை, பெளர்ணமி நாட்களில் உடல் ரீதியாக சில அசெளகர்யங்கள் ஏற்படுவதை நாமே உணரலாம் 

ராகு மறைக்கும்போது 'ராகு க்ரஷ்தம்' என்றும், கேது  மறைக்கும்போது 'கேது க்ரஷ்தம்' என்றும் சொல்வார்கள். பொதுவாக, கிரகண தோஷம் கெடு பலன்களைத்தான் தரும் என்பார்கள். சூரிய கிரகண தோஷம்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சொல்வார்கள். 

சூரியனின் ஒளி வீச்சு பூமியின் மீது பதியாமல் தடைப்படும்போது, இயற்கையில் சில மாற்றங்கள் தானாகவே நிகழ்ந்துவிடுகின்றன. இதில்,  கெடுதலே அதிகம். 

அமெரிக்கா

கிரகண பாதிப்பில் இருந்து விடுபட என்ன செய்யலாம்?

கிரகணத்தால் நமக்கு பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் இருக்க    சாஸ்திரங்கள் சில தற்காலிக ஆலோசனைகளை வழங்குகின்றன. அதன்படி, புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்து தானங்கள் வழங்கலாம். முன்னோர்களுக்கு  தர்ப்பணம் செய்யலாம். மேலும் வீட்டில் உள்ள பூஜை அறையில் தெய்வ சிந்தனையுடன் கிரகணம் முடியும் வரை, ஜபங்கள், பாராயணங்கள் செய்யலாம்.  

கிரகணத்தின் போது ஏற்படும் கதிர்வீச்சின் பாதிப்பில் இருந்து விடுபட,  நாம் அணிந்த உடைகளை, நீரில் நனைத்து, துவைத்து காயப் போடுவது, வீட்டைச் சுத்தப்படுத்துவது போன்றவற்றைச் செய்யலாம்.    பாதிப்படைந்த கதிர்வீச்சின் தன்மை கோயிலில் உள்ள தெய்வ சிலைகளின் அஷ்ட பந்தனத்துக்கும் (பீடத்தில் உள்ள மருந்துக் கலவை) தெய்வச் சிலைக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, கோயில்களை மூடிவிடுவார்கள்.  

அமெரிக்கா

இந்த முறை சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது.  வட அமெரிக்காவின் சலேம், சார்ல்ஸ்டன், சவுத் கரோலினா ஆகிய இடங்களில் முழு சூரிய கிரகணமாகவும் அதற்கு வெளியே உள்ள இடங்களில் பகுதி சூரிய கிரகணமாகவும் இருக்கும்.  இது மகம் நட்சத்திரத்தில் ஏற்படுவதால்,  மகம், அசுவினி, மூலம், ரேவதி, பூரம் நட்சத்திரங்களில் உள்ளவர்கள் சாந்திப் பரிகாரம் செய்துகொள்வது நல்லது.  தமிழ்நாட்டில் பிறந்த இந்த நட்சத்திரங்களைச்  சேர்ந்தவர்கள் அமெரிக்காவில்  இருந்தாலும், இங்கு இருப்பவர்களின் பிள்ளைகள் அங்கு வேலைக்கு சென்றிருந்தாலும்  அவர்களுக்கு தெரியப்படுத்தி சாந்திப் பரிகாரம் செய்துகொள்ளச் சொல்லலாம்.

.அடுத்த கிரகணம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 31-ம் தேதி  புதன் கிழமை பூசம்,  ஆயில்யம் நட்சத்திரத்தில் சந்திர கிரகணமாக ஏற்படுகிறது. இது இந்தியாவில் தெரியும்.

 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்