மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் 9 கிணறுகள் கண்டுபிடிப்பு - பொதுமக்கள் வியப்பு

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் 9 பழங்காலக் கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன ஆன்மிக உலகில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  

144 ஆண்டுகளுக்குப் பின் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் காவிரி மஹாபுஷ்கர விழா எதிர்வரும் செப்டம்பர் 12-ம் முதல் 24-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு துலாக்கட்ட காவிரியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 மீட்டர் நீளமும், 17 மீட்டர் அகலமும் கொண்ட நிரந்தரத் நீர்த்தேக்கம் அமைக்கும்பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பொக்லைன் இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டியபோது, காவிரி ஆற்றின் நடுவிலுள்ள நந்திக் கோயிலைச் சுற்றி மூன்றடி ஆழத்தில் 9 பழங்காலக் கிணறுகள் தெரிந்தன. கிணறுகளுக்குச் சேதமில்லாமல் பொறுமையாகப் பணிகளைத் தொடர்கின்றனர். இந்தக் கிணறுகளைக் கண்ட பொதுமக்கள் ஆச்சர்யமும் ஆனந்தமும் அடைந்திருக்கிறார்கள். திருவிழந்தூர் படித்துறையிலிருந்து தருமபுரம் படித்துறை வரை காவிரி ஆற்றைத் தோண்டினால் இன்னும் பல கிணறுகள் கிடைக்கக்கூடும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.  

  


இதுபற்றி புஷ்கர விழா கமிட்டி துணைச் செயலாளரான அப்பர் சுந்தரத்திடம் பேசியபோது, ''கங்கை-காவிரி இணைப்புபற்றி இன்றைக்கும் பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் 200, 300 அடி ஆழத்தில் நீரோட்டம் வழியாக கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற 9 புண்ணிய நதிகள் மயிலாடுதுறை துலாக்கட்ட கிணறுகள் மூலம் வெளிப்பட்டு புனிதநீராடி இருப்பதைத்தான் இந்தக் கிணறுகள் உணர்த்துகின்றன. இதனால்தான், 'ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது' என்ற பெருமை இந்த நகருக்குக் கிடைத்திருக்கிறது. மஹாபுஷ்கரம் நடைபெறவுள்ள வேளையில், புனிதநதிகளின் புண்ணிய கிணறுகள் கிடைத்திருப்பதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறோம். புஷ்கர காலத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா, தேவர்கள், ரிஷிகள் போன்றோர் காவிரி நதியில் வாசம்செய்வதால், அந்த நாள்களில் நீராடினால் மூன்றரைக்கோடி தீர்த்தத்தில் புனிதநீராடிய பலன் கிடைக்கும். அந்நாளில் அன்னதானம், வஸ்திரதானம் போன்ற தானங்கள் செய்தால், பன்மடங்கு பலன்கிடைத்து மோட்சத்துக்குப்போக வழிகிடைக்கும். புனிதநீராடி, பிதுர்களுக்குத் தர்ப்பணம் முதலிய சடங்குகள் செய்தால், பிதுர் சாபம் நீங்கி நல்வாழ்வு வாழ வழிஉண்டாகும். எனவே, பக்தர்கள் இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென அன்போடு அழைக்கிறோம்'' என்றார்.  


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!