வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (21/08/2017)

கடைசி தொடர்பு:16:00 (21/08/2017)

‘சென்னையின் ‘கஞ்சித்தொட்டி மருத்துவமனை’ எது தெரியுமா? #Chennai378

சென்னையின் பெருமைமிக்க மருத்துவ அடையாளங்களில் ஒன்று, ஸ்டான்லி மருத்துவமனை. ஆரம்பத்தில் இந்த மருத்துவமனைக்குப் பெயர், ‘கஞ்சித்தொட்டி’ மருத்துவமனை. 

ஸ்டான்லி மருத்துவமனைக்கு பெரிய வரலாறு இருக்கிறது. பிளாஸ்டிக் சர்ஜரி உள்பட இங்கு வழங்கப்படும் பல சிறப்பு சிகிச்சைகள் உலகத் தரமானவை. 

பிரிட்டிஷார் சென்னை கோட்டைப்பகுதிக்குள் குடியேறிய பிறகு, அவர்களுக்கான பணிகளை செய்து வந்த பணியாட்களுக்காக உருவாக்கப்பட்ட பகுதி ‘கறுப்பர் நகரம்’ எனப்பட்டது. இன்றைய பாரிமுனை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகள் தான் அக்கால கறுப்பர் நகரம். இப்பகுதியில் குடியேற்றப்பட்ட மக்கள் வெள்ளையர்களுக்கும் அவரது படை வீரர்களுக்குமான பணிகளை மேற்கொண்டு வந்தனர். அந்த மக்களுக்காக உருவாக்கப்பட்ட மருத்துவமனைதான் இன்றைய ஸ்டான்லி மருத்துவமனை. 

கஞ்சித்தொட்டி மருத்துவமனை

1781-ல், சென்னையில் கடுமையான பஞ்சம் உருவானது. பசியாற  எதுவும் கிடைக்காமல் மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்து போனார்கள். அப்போது இவர்களின் பசியை தீர்க்க ஆங்கில அரசு ஒரு கஞ்சி தொட்டியை திறந்தது. பின்னர், படிப்படியாக பஞ்சம் நீங்கியபிறகு, அந்தக் கஞ்சித் தொட்டி அமைக்கப்பட்ட இடம் ஆதரவு இல்லாத முதியவர்களின் சத்திரமாக மாறியது. அப்போது அதைக் ‘கஞ்சித்தொட்டி சத்திரம்’ என்று அழைத்தார்கள். 

ஒரு காலக்கட்டத்தில் கறுப்பர் நகரத்தில்  காலரா, பிளேக் போன்ற நோய்கள் பரவின. இந்த நோய்களால் ஏராளமான மக்கள்  இறக்கத் தொடங்கினர். இவற்றால் தாங்களும் பாதிக்கப்படுவோமோ என்று பயந்த வெள்ளையர்கள், சென்னை மக்களுக்கு என ஒரு மருத்துவமனையை கஞ்சித்தொட்டி சத்திரம் இருந்த இடத்தில் உருவாக்கினார்கள். ஜான் அண்டர்வுட் என்ற ஆங்கிலேய அதிகாரியின் முயற்சியால் இந்த மருத்துவமனை 1799-ம் ஆண்டு சிறிய அளவில் உருவானது. கூடவே, தொழுநோயாளிகளுக்கான ஒரு மருத்துவமனையும் அருகில் தொடங்கப்பட்டது. எவ்வித மருத்துவ வசதியும் கிடைக்காமல் தவித்த மக்களுக்கு இந்த மருத்துவமனை பெரும் உதவியாக இருந்தது. 

ஸ்டான்லி மருத்துவமனை

கஞ்சித்தொட்டி சத்திம் இருந்த இடத்தில் தொடங்கப்பட்டதால் இதை 'கஞ்சித்தொட்டி மருத்துவமனை' என்றே மக்கள் அழைக்க ஆரம்பித்தனர். 1800-களிலேயே வெளியூர் மக்கள் எல்லாம் வந்து சிகிச்சை பெரும் அளவுக்கு இந்த மருத்துவமனை சிறப்பாக இயங்கியது.  

1836-ம் ஆண்டு அப்போதைய சென்னை பல்கலைக்கழகம், இந்த மருத்துவமனையில் சில மருத்துவ படிப்புகளைத் தொடங்கியது. 1903-ம் ஆண்டு மருத்துவ உதவியாளர், மருத்துவ தாதியர்கள் படிப்புகள் இங்கு உருவாக்கப்பட்டன. 1911-ம் ஆண்டு அங்கீகாரம் பெற்ற அதாவது சான்றிதழ் பெற்ற மருத்துவர்கள் பலர் இங்கு தேர்வாகி இந்தியா முழுக்க பணியாற்ற சென்றார்கள். 1917-ம் ஆண்டு இந்த மருத்துவமனை விரிவாகி, பல துறைகளிலும் சிகிச்சை அளிக்கும் வசதியைப் பெற்றது. அப்போது ‘ராயபுரம் மருத்துவமனை’ என்று இதை அழைத்தார்கள். 

ஸ்டான்லி மருத்துவமனை

பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினரான லெப்டினென்ட் கர்னல், சர் ஜார்ஜ் ஃப்ரெட்ரிக் ஸ்டான்லி 1933-ம் ஆண்டு அறுவை சிகிச்சைக்கான படிப்பை இங்கு தொடங்கி வைத்தார். அவரது நினைவாக 1934-ல்  இந்த மருத்துவமனைக்கும், மருத்துவக் கல்லூரிக்கும் ‘ஸ்டான்லி’ என்ற பெயர் சூட்டப்பட்டது. 

சுதந்திர காலத்துக்கு பிறகு வேகமான வளர்ச்சியைக்கண்ட இந்த மருத்துவமனை இன்றும் 'ஸ்டான்லி' என்ற பெயரோடு இயங்கி வருகிறது.  ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை, இரைப்பை, குடல், வயிறு சார்ந்த சிகிச்சைகளில் இந்தியாவிலேயே முன்மாதிரியாக இருந்து வருகிறது. 1964-ம் ஆண்டு ஏழு மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு படிப்புகள் இங்கு உருவாக்கப்பட்டன. 1938-ம் ஆண்டில், 72 மாணவர்கள் இங்கு மருத்துவம் பயில அனுமதிக்கப்பட்டார்கள். பின்னர் 1963-ம் ஆண்டிலிருந்து 150 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.

உள்நோயாளிகளுக்கு என 1661 படுக்கைகள் இந்த மருத்துவமனையில் இருக்கின்றன. ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் தினமும் இங்கே சிகிச்சை பெறுகிறார்கள். இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இது 47-வது இடத்தைப் பெற்றுள்ளது. இருநூறு ஆண்டுகளைக் கடந்து ஏழை, எளிய மக்களின் நம்பிக்கையாக உயர்ந்து நிற்கிற ஸ்டான்லி மருத்துவமனை சென்னையின் பிரதான அடையாளம் என்றால் மிகையல்ல.


டிரெண்டிங் @ விகடன்