Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நவராத்திரி தாம்பூலத்தில் என்னென்ன இருக்க வேண்டும்? - 2-ம் நாள் வழிபாடு! #AllAboutNavratri

வராத்திரியின் முதல் நாளான நேற்று, கொலு வைப்பதற்கான முறை,  முதல்நாள் வழிபடும் தேவியைப் பற்றிப் பார்த்தோம். இரண்டாம் நாளான இன்று, நவராத்திரி  உருவான வரலாறு மற்றும் இன்றைய தேவியை வழிபடும் முறைகள் பற்றியும் பார்ப்போம்.

நவராத்திரி

முன்னொரு காலத்தில் எருமைத் தலையுடன், மனித உடலும் கொண்ட ஓர் அரக்கன் இருந்தான். அவன் பெயரே, மகிஷாசுரன். அவன் பிரம்மதேவரை நோக்கி கடுந்தவம் இருந்தான். அவன் தவத்தால் மனம் மகிழ்ந்த பிரம்மதேவர், அவனுக்கு வரமளிக்க அவன் முன் தோன்றினார். மகிஷாசுரன் அவரை வணங்கித் தொழுதான். அவனிடம் பிரம்மதேவர், "உன் தவத்தால் யாம் பெரிதும் மகிழ்ந்தோம், வேண்டிய வரத்தைக் கேட்பாய்!" என்று கூறினார். இதைக் கேட்ட மகிஷன், 'மரணமே இல்லாத நிலை தனக்கு வேண்டும்' என்று கேட்டான். ஆனால், பிரம்மதேவர், 

 'உலகத்தில் பிறக்கும் அனைவருக்கும் நிச்சயம் இறப்பு என்பது உண்டு. பிறப்பு இறப்பு என்பது காலத்தின் கட்டாயம் ஆகும். அதை எம்மால் மாற்ற இயலாது. வேறு வரம் வேண்டினால் யாம் தருகிறோம்' என்றார். 

மகிஷாசூரன், ''அப்படியானால் எனக்கு ஒரு பெண்ணால் மட்டுமே மரணம் ஏற்படவேண்டும்'' என்று வரம் கேட்டான். பிரம்மதேவரும் அப்படியே வரம் கொடுத்து மறைந்தார்.

'பெண்கள் வலிமை குறைந்தவர்கள்; வலிமைமிக்க தன்னை அவர்களால் எதிர்க்கொள்ள முடியாது. அதையும் மீறி ஒருவேளை அவர்கள் தன்னை எதிர்கொண்டாலும், அவர்களால் தன்னை அழிக்கமுடியாது. எனவே தனக்கு மரணமே ஏற்படாது' என்பதுதான் அவனுடைய எண்ணம்.  

வராஹி அம்மன்

இப்படி எண்ணிய அவன் தலைக்கணத்துடன் திரிந்தான். முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் பல துன்பங்களை விளைவித்தான். இதனால் மிகவும் அவதியுற்ற முனிவர்களும், தேவர்களும் மும்மூர்த்தியரிடம் சென்றனர். 'மகிஷாசுரன் தங்களுக்கு பல இன்னல்கள் விளைவிப்பதாகவும், மேலும் அவன் பிரம்மதேவரிடம் பெற்ற வரத்தின் காரணமாக தங்களால் அவனை எதுவும் செய்ய இயலவில்லை என்றும், தாமே அவனை அழித்து தங்களை காக்க வேண்டும்' என்று மும்மூர்த்திகளிடமும் அவர்கள் வேண்டினர்.

அவன் பெற்ற வரத்தைப் பற்றி அறிந்த சிவபெருமான், 'அவன் பெண்ணாலேயே அழிவான் என்றும், அவனை சக்திதேவியே அழிப்பாள் என்றும், நீங்கள் கவலையை விட்டு நிம்மதி கொள்ளுங்கள்' என்று கூறி அவர்களை அனுப்பினார்.

அவ்வாறே சக்திதேவியும் அவனை அழிக்க வந்தாள். அழகிய திருவுருவம் கொண்ட அம்பிகையை மணக்க விரும்பினான் மகிஷாசுரன். தன் விருப்பத்தையும் அவளிடம் தெரிவித்தான். ஆனால் "தன்னுடன் யார் போராடி தன்னை வெற்றி கொள்கிறாரோ, அவரையே தான் மணப்பதாக சபதம் செய்திருக்கிறேன்" என்று அவனிடம் உரைத்தாள் ஆதிசக்தி.

மதியிழந்த அந்த அரக்கன் அவளின் அழகில் மயங்கினான். தான் பெற்ற சாபத்தையும் மறந்தான். அவளுடன் போர் புரிய ஆயத்தமானான். இருவருக்கும் ஒன்பது நாட்கள் கடும்போர் நிகழ்ந்தது. இறுதியில் அம்பிகையின் கையால் அந்த அரக்கன் அழிந்தான். தேவர்களும், முனிவர்களும் அம்பிகையைப் போற்றி வணங்கினர். 

அந்த அரக்கனை அழித்து அனைவரையும் காத்த அந்த தினங்களையே நாம் நவராத்திரியாக கொண்டாடுகிறோம். இதில் மற்றொரு தத்துவமும் இருக்கிறது. நம்மிடம் இருக்கும் காம, குரோத, மத, மாச்சர்யங்களை வெற்றி கொள்வதற்காகவும் நவராத்திரியின்போது அம்பிகையை வழிபடுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம். 

(நவராத்திரி, இரண்டாம் நாளின் மகத்துவத்தையும், வழிபாட்டு முறைகளையும், இந்த நாளுக்குரிய அம்மனின் சிறப்பையும் பற்றி  அறிய வீடியோவைப் பாருங்கள்!)

நவராத்திரியின் இரண்டாம் நாளான இன்று  அம்பிகையை மூன்று வயது பெண்ணாகப் பாவித்துப்  பூஜிக்கவேண்டும். அம்பிகையை 'த்ரிபுரா' அல்லது வராஹி  என்ற பெயருடன் இன்று வழிபட வேண்டும். சுவாசிநியின் பெயர், ப்ரஹ்மசாரிணீ ஆகும். காலையில் அம்பாளுக்கு நைவேத்தியமாக புளியோதரையை படைத்து, துளசி இலையினைக் கொண்டு அம்பிகைக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். மாலையில் ஏதாவது நவதானியத்தில் செய்த சுண்டலை அம்பிகைக்கு நைவேத்தியம் செய்து, அதை வீட்டிற்கு வரும் பெண்களுக்கு தாம்பூலத்துடன் சேர்த்து அளிக்க வேண்டும். புல்லாங்குழலில் கல்யாணி ராகம் இசைப்பது மிகவும் சிறப்பானது. இவ்வாறாக இரண்டாம் நாளான இன்று அம்பிகையை வழிபட்டால் தனம், தானியம் மட்டுமின்றி புத்ரபாக்கியமும் கிட்டுவது உறுதி.

 

 

 

பொதுவாக நவராத்திரியின்போது அனைவர் வீடுகளிலும் கொலு வைத்து, தெரிந்தவர்கள், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், உறவினர்கள் என்று அனைவரையும் அழைத்து அவர்களுக்கு தாம்பூலம் அளிப்பது வழக்கம். நம் முன்னோர்கள் எந்த செயலைச் செய்தாலும் அதற்கு ஒரு காரணம் கண்டிப்பாக இருக்கும். அதுபோலவே நவராத்திரியில் கொடுக்கப்படும் தாம்பூலத்திற்கும் காரணங்கள் இருக்கின்றன.

'தாம்பூலம்' என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது வெற்றிலையும் பாக்கும். வெற்றிலை அம்பிகையின் அம்சமாகவே கருதப்படுகிறது. அதனாலேயே எந்த ஒரு நல்ல காரியத்திலும் வெற்றிலைப் பயன்படுகிறது.

கொலுவிற்கு வருவோருக்கு கொடுக்கும் தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், சீப்பு, புடவை, ரவிக்கைத்துணி, மருதாணி உள்ளிட்டப் பொருட்களை வைத்துக் கொடுக்கலாம்.  அவ்வாறு கொடுக்கப்படும் பொருட்களுக்கு கிட்டும் பலன்களை நாளை பார்க்கலாம்.   

 

நவராத்திரியின் இரண்டாம் நாளுக்கு போடவேண்டிய கோலத்தைப் பற்றியும், அதன் சிறப்பைப் பற்றியும் விளக்குகிறார் சேலத்தைச் சேர்ந்த  கோலக்கலைஞர் சுபா. 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement