வெளியிடப்பட்ட நேரம்: 12:19 (28/09/2017)

கடைசி தொடர்பு:12:19 (28/09/2017)

வைணவ சம்பிரதாயத்தில் கொலு வைப்பது எப்படி? விளக்குகிறார்கள் ஆன்மிகப் பெரியவர்கள்! #Navratri

வராத்திரிப் பண்டிகை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகளில் நவராத்திரிக்கு கொலு வைத்து வழிபாடு செய்தால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது  நம்பிக்கை. இதையொட்டி பலரும் தங்களது வீடுகளில் கொலு வைத்து வணங்கி வருகின்றனர்.

கொலு

நவராத்திரி கொலு வைப்பதில் வைணவ சம்பிரதாயப்படி கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள், சாஸ்திர சம்பிரதாயங்கள் பற்றி தெரிந்துகொள்ள, 'ஆன்மிகச் செம்மல்' அனந்தபத்மநாப சுவாமிகளிடம் பேசினோம்...அனந்தபத்மநாபன்

''தட்சிணாயனம் என்றால் ‘கருமை’, ‘இருட்டு’ என்றொரு பொருள் உண்டு. எனவேதான், உத்தராயனத்தில் பகல் பொழுது அதிகமாகவும் தட்சிணாயனத்தில் இரவுப் பொழுது அதிகமாகவும் இருக்கும். அப்படி இரவின் இருட்டு அதிகமாக இருக்கும். தட்சிணாயன கால வழிபாட்டுக்குப் பொருத்தமுடையவன், கார்நிற வண்ணன், கமலக் கண்ணன் திருமால்.

வைணவ சம்பிரதாயத்தில், நவராத்திரியில் கொலு அமைத்து 10 நாட்களும் லட்சுமி பூஜை செய்வது முக்கியமானதாகும். 10 நாட்களும் தாயாருக்கு உற்சவம் நடத்துவது வழக்கம். தாயார் கருணையின் கடல். அவர்தான் நமது தேவைகளை பகவானிடம் எடுத்துச் சொல்லி நமக்குப் பெற்றுத் தருகின்றார். 
கொலுவில் பூலோகத்திலிருக்கும் சகல உயிர்களையும் எம்பெருமான் நாராயணனின் பெயரால் நாம் வைக்கலாம். மண்ணாலான பொம்மைகளை வைத்து வழிபடுவது, பூமாதேவிக்கு செய்யும் மரியாதையாகும். கொலு வைப்பது வாஸ்துப்படி  மிகவும் நல்லது. அந்த வீட்டிலிருக்கும் சகல தோஷங்களும் விலகி, நன்மை பயக்கும்விதமாக அமையும்.

வாஸ்து கலைக்கும் அதிதேவதையாக இருக்கும் திருமாலின் மனம் நெகிழும்படி நாம் அவருக்கு சேவை செய்வதால், எப்போதும் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும், பெருமையாகவும், ஆரோக்கியமாகவும், சகல ஐஸ்வர்யங்களுடன், வம்ச வளர்ச்சி பெற்று, அன்புடனும், பண்புடனும் வாழ்வாங்கு வாழ முடியும். 

இந்த கொலுவில்  ஒவ்வொரு நாளும் நவதானியங்களில் ஒவ்வொரு விதமான தானியத்தைக் கொண்டு சுண்டல் செய்து பகவானுக்கு நைவேத்தியம் செய்யவேண்டும். பிறகு அதை வீட்டுக்கு வரும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பிரசாதமாகக் கொடுக்கலாம்'' இவ்வாறு அவர் கூறினார்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிக்கோயில் பட்டாச்சார்யார் பார்த்தசாரதி பட்டாச்சார்யாரைச் சந்தித்துப் பேசினோம். 
"எம்பெருமானை அடைய பல மதங்கள் இருந்தாலும், எல்லா மதத்தின் மூலமாகவும் எம்பெருமானை அடையமுடியும் என்னும் நம்முடைய கொள்கையானது மிகவும் சிறப்பானது. அதனாலே நாம் எல்லா மார்க்கத்தையும் போற்றுகின்றோம். வரவேற்கின்றோம். 
'அவரவர் தாம் அறிந்தவாறு ஏத்தி' என்ற ஆழ்வார் சொல்லியது போல ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தெரிந்த வகையில், தன்னால் இயன்ற வரையில், எம்பெருமானை ஆராதனை செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த ஶ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில், ஓரறிவு, ஈரறிவு, மூன்றறிவு, நான்கறிவு, ஐந்தறிவு, ஆறறிவு என்று சொல்வார்களே, அந்த விதத்தில் பகுத்தறிவு பெற்ற நாம், எல்லா உயிர்களையும் நேசிப்பதோடு நில்லாமல் அவற்றுக்குத் துன்பம் தராமலும் இருக்க வேண்டும் என்பதே இந்த நவராத்திரிப் பண்டிகையின் நோக்கம். 

எல்லா உயிர்களிலும் பகவான் நாராயணனே வீற்றிருக்கிறார் என்பதே ஶ்ரீவைஷ்ணவ கோட்பாடாகும். ஆகவே, இந்த நவராத்திரிப் பண்டிகையை மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும். குறிப்பாக பரிசுப் பொருட்களாக பிளாஸ்டிக் பொருட்களைக் கொடுப்பதைத் தவிர்த்து இயற்கையுடன் இயைந்துக் கொண்டாட வேண்டும். அனைத்து உயிர்களையும் நேசித்து, எவ்வுயிருக்கும் துன்பம் தராமல், எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுகிறேன்" இவ்வாறு அவர் கூறினார்.

இவரது துணைவியார் ஶ்ரீவித்யா பார்த்தசாரதி, 

''இப்போதெல்லாம் கொலுவுக்கு வர்ற குழந்தைகள் சுவாமி பாட்டு பாடுவதற்கு ரொம்பவும் சங்கோஜப்படுறாங்க. அப்படி சங்கோஜப்படக்கூடாது. இந்த மாதிரி நண்பர்கள் வீட்டுக்குப் போகும்போது பாடிப்பழகினால்தான் நாளைக்கு பெரியபெரிய சபைகள்ல அவங்களால பாடமுடியும். அப்படி நல்லா பாடுற குழந்தைகளுக்குப் பரிசு கொடுத்து, அவங்க அடையற சந்தோஷத்தைப் பார்க்கும்போது நமக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்” என்றார்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிக் கோயில் ராஜகோபால் பட்டாச்சார்யாரைச் சந்தித்துப் பேசினோம்.

“வைஷ்ணவ சம்பிரதாயத்தில் நவராத்திரி கொண்டாடுற 9 நாட்களும் தாயாரைத்தான் கொண்டாடுவோம். பூமியில் வாழ்கிற எல்லா உயிர்களும்  பெருமாளின் அம்சம்தான். அதனால்தான் எல்லா உயிர்களின் பொம்மைகளுக்கும் அவருடைய 'திருமண்' காப்பைத்தான் அணிவித்திருக்கிறோம். கொலுவில் இடம் பெற்றிருக்கும் பலராமன் தோளில் ஏறி கிருஷ்ணன் உறியடிப்பது போன்ற பொம்மையை நானே உருவாக்கினேன்.

கோயிலில் இருந்தாலும் வீட்டுக்கு வந்தாலும் எனக்கு பெருமாளின் நினைப்புதான். பொம்மைகளுக்கு அணிவித்திருக்கும் மணிகளையெல்லாம்  வருஷா வருஷம் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்தேன். இப்போ இந்த கிருஷ்ணர் பொம்மைக்கு மட்டும் 40 ஆயிரம் ரூபாய் வரைக்கும் செலவு செய்திருக்கிறேன்.  மற்றவர்கள் வந்து பாராட்டும்போது நெகிழ்ச்சியாக இருக்கும்" என்று சிலிர்ப்புடன் கூறினார். 
நவராத்திரி
வெறும் பண்டிகையாக மட்டும் இல்லாமல், அது சமூக கலாசார பரிவர்த்தனைக்கான நிகழ்வாகவும், பரஸ்பரம் அன்பு பாராட்டி மகிழும் விழாவாகவும் அமைந்திருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்