அம்மன் வேடம், அருள் வாக்கு, கொலு... நடிகை நளினியின் நவராத்திரிக் கொண்டாட்டப் பகிர்வுகள்! | navratri celebration sharing by actress nalini

வெளியிடப்பட்ட நேரம்: 12:56 (29/09/2017)

கடைசி தொடர்பு:12:56 (29/09/2017)

அம்மன் வேடம், அருள் வாக்கு, கொலு... நடிகை நளினியின் நவராத்திரிக் கொண்டாட்டப் பகிர்வுகள்!

வராத்திரி என்றாலே கொலு பொம்மை, அம்மன் சிலை, நைவேத்தியம், பாட்டு... என ஒரு பெரிய பட்டியலே நினைவுக்கு வரும். நவராத்திரியின் ஒன்பது நாள்களையும் ஒவ்வொரு அம்மனை முதன்மையாக வைத்து வழிபடுவார்கள். அதிலும், நவராத்திரி நாள்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் திரைப்படங்களில்கூட அம்மன் படங்களுக்கு பிரத்யேகமான இடம் இருக்கும். இந்த நவராத்திரியை சினிமாவில் அம்மனாக நடித்தவர்கள் எப்படிக் கொண்டாடுவார்கள்? இந்த யோசனை வர, நடிகை நளினையைச் சந்தித்தோம். தன் நவராத்திரி அனுபவங்களை மனம் திறந்து பகிர்ந்துகொண்டார் நடிகை நளினி.

நளினி

``நவராத்திரி என்றவுடன் உங்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது..?’’

``நவராத்திரின்னு சொன்னாலே ஞாபகத்துக்கு வர்றது சுண்டல்தான். அந்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான நைவேத்தியம் படைப்போம். சுண்டல், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், வெண்பொங்கல், எலுமிச்சை சாதம், புளியோதரை, தேங்காய் சாதம், கல்கண்டு சாதம், இனிப்புன்னு நைவேத்தியத்துலயே ஒரு கொலுவெச்சுடலாம். அந்த அளவுக்கு இந்த லிஸ்ட் எங்க வீட்ல ரொம்பப் பெருசு.’’

கொலு

``மறக்கமுடியாத நவராத்திரி அனுபவம்?’’

``என்னோட சின்ன வயசுல இருந்தே நவராத்திரி கொலுவெச்ச அனுபவம் நிறையா இருக்கு. என்னோட சேர்த்து எங்க வீட்டுல 10 குழந்தைகள்; எனக்கு எட்டு அண்ணன்கள், ஒரு தங்கை. அந்தக் காலத்து பிளாக் அண்ட் வொயிட் படத்துல வர்ற மாதிரி தங்கச்சியை உள்ளங்கையிலவெச்சு தாங்குற சீன்லாம் எங்க வீட்ல கிடையாது. அதுக்கு அப்படியே நேர்மாறா இருப்பங்க. எல்லாரும் செம வாலு. அப்பா டான்ஸ் மாஸ்டர். அவரோட நடன ஒத்திகை வீட்டுலதான் நடக்கும். வீட்டோட ஹால் ரொம்பப் பெருசு. அங்கேதான் கொலு வைப்போம். நவராத்திரின்னாலே எனக்கும் என்னோட தங்கைக்கும் ஒரே குஷியாயிடு. 10 நாளும் புது டிரஸ், புதுசு புதுசா கம்மல், வளையல்னு நிறைய நகைகளை வாங்கிக் கொடுப்பாங்க. நல்லா அலங்காரம் பண்ணிக்கிட்டு டான்ஸ், விளையாட்டு, பாட்டுனு கலக்குவோம். வீடே கலகலனு இருக்கும். வீட்டுக்கு நிறைய கெஸ்ட் வருவாங்க. அவங்களோட சேர்ந்து நவராத்திரிப் பண்டிகையை கலகலப்பா கொண்டாடுவோம்.’’

 

``நிறையப் படங்களில் அம்மனாக நடித்திருக்கிறீர்கள்... அந்த அனுபவம்... அதில் உங்களுக்குப் பிடித்த படம்?’’

``கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் ராஜ்குமார்கூடதான் நடிச்சதுதான் என்னோட முதல் படம்... 'கவிரத்னா காளிதாசா'. அந்தப் படத்துல 'மாணிக்யவீணா...' என்ற பாடல் முழுவதும் அம்மனோட அனைத்து அவதாரங்களா நடிச்சிருப்பேன். அம்மன் வேடத்துல நடிக்கப்போறோம்னு பிரத்யேகமா விரதம்லாம் இருக்க மாட்டேன். ஆனா, நானே என்னை அம்மனா நினைச்சு நடிப்பேன்.’’

 

 

 

``இதுவரை அம்மனாக நடித்தவர்களில் உங்களுக்குப் பிடித்தவர்..?’’

``நிறையப்பேர் அம்மனாக நடிச்சுருக்காங்க. ஆனா, என்னோட ஆல்டைம் ஃபேவரைட் ரம்யா கிருஷ்ணன்தான். அம்மன் படத்துல அவங்க பர்ஃபார்மென்ஸ் பார்த்து பூரிச்சுப் போயிருக்கேன். பக்திப் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படங்களும் அம்மன் படங்கள்தான்.’’

கருமாரியம்மன் வேடம்

``அருள் வரும் அளவுக்கு கடவுள் பக்தி அதிகமாமே உங்களுக்கு..?’’

``ஆமாம். எனக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். சின்ன வயசுல நிறைய தடவை அருள் வந்திருக்கு. அம்மன்தான் எனக்குப் பிடித்த தெய்வம். அதிலும் குறிப்பாக கருமாரியம்மன்தான் ரொம்பப் பிடிக்கும். இதுவரைக்கும் 79 திவ்யத் தலங்கள், 107-க்கும் அதிகமான பாடல்பெற்ற தலங்களுக்குப் போயிருக்கேன்.’’ 

 

``உங்களுக்கு ஷுட்டிங் ஸ்பாட்டில்கூட அருள் வருமாமே... அது பற்றி...’’

``ஆமா. எனக்கு அம்மன் அருள் வரும். அம்மன் வேடம் போட்டு நடிக்கும்போது ஷூட்டிங் ஸ்பாட்லயே அருள் வந்து அருள்வாக்கு சொன்னேன்னு நான் நார்மலானதுக்கு அப்புறம் சொல்லுவாங்க. எனக்கு அப்போ என்ன நடந்ததுன்னே ஞாபகம் இருக்காது. ஒரு மாதிரி ரொம்ப அழுத்தமா இருக்கும். நமக்குள்ள வேற யாரோ இருக்குற மாதிரி இருக்கும். நிறைய அருள்வாக்கு சொல்லிருக்கேன். அதுல ஒரு சம்பவம்... ஒருநாள் என்னோட மூன்றாவது அண்ணன் வீட்டுக்குச் சாப்பிட கூப்பிட்டுருந்தாங்க. அப்போ நான் நிறைமாத கர்ப்பிணி. அப்போ என்னோட அண்ணியைப் பார்த்து, `உங்க வயித்துக்குள்ள ஒரு குட்டி வரப்போகுது’னு சொன்னேன். கூட என்னோட சித்தியும் இருந்தாங்க, அவங்களுக்கு அப்போ 30 வயசு. அவங்ளைப் பார்த்தும்,` உங்க வயித்துலயும் ஒரு குட்டி வரப்போகுது’னு சொன்னேன். அதுக்கு, `கிண்டல் பண்ணாதே’ன்னு சொன்னாங்க. ஆனா, நான் சொன்ன மாதிரி ரெண்டு பேருக்குமே பெண் குழந்தை பிறந்தது.’’

நண்பர்களுடன் நவராத்திரிக் கொண்டாட்டம்

``கொலுவை ரொம்ப மிஸ் பண்ணுகிறீர்களா?’’

``நிச்சயம் இல்லை. என்னால கொலுவைக்க முடிலைன்னா என்னோட ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்குப் போயிடுவேன். குறிப்பா, `ஊர்வம்பு’ லட்சுமி வீட்டுல வைக்கும் கொலுவுக்கு நான் ஆல்டைம் ஃபேன். எல்லா நவராத்திரிக்கும் எங்கே இருந்தாலும் லட்சுமி வீட்டுக்கு கொலுவைப் பார்க்க வந்துடுவேன். அங்கேயும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமா இருக்கும்.’’

 

``நவராத்திரியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’’

``என்னைப் பொறுத்தவரை நவராத்திரி என்பது பெண்கள் கொண்டாடவேண்டிய பண்டிகை; பெண்களுக்கான பண்டிகைனு சொல்லுவேன். அம்மனோட அவதாரங்களை அடிப்படையாவெச்சு இந்த தினங்களை நாம வழிபட்டுட்டு இருக்கோம். எல்லாப் பெண்களும் அவசியம் இது போன்ற பண்டிகைகளைக் கொண்டாடணும்; பண்டிகையோட பழக்கவழக்கங்களையும் தெரிஞ்சுக்கணும்.’’


டிரெண்டிங் @ விகடன்