Published:Updated:

யோகினி ஏகாதசி, மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மாத விழாக்கள்... விசேஷங்கள்..!

சி.வெற்றிவேல்
யோகினி ஏகாதசி, மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மாத விழாக்கள்... விசேஷங்கள்..!
யோகினி ஏகாதசி, மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மாத விழாக்கள்... விசேஷங்கள்..!

மிழ் மாதங்களில் மூன்றாவது மாதமாக மலர்கிறது ஆனி. மிதுன ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்கும் இந்த மாதத்தில்தான் தேவர்களைக் காப்பதற்காகத் திருமால் எடுத்த கூர்ம அவதார தினம், நடராஜப் பெருமானுக்குரிய ஆனித் திருமஞ்சனம், குருபூர்ணிமா ஆகிய பல்வேறு விசேஷங்கள் வருகின்றன. 'ஜேஸ்டா' என்று அழைக்கப்படும் இந்த ஆனி மாதம், கோயில்களில் கும்பாபிஷேகங்கள் செய்ய உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. இத்தகைய சிறப்புகளைக் கொண்ட ஆனி மாதத்தில் வரும் விழாக்கள் மற்றும் விசேஷங்கள் குறித்து அறிந்துகொள்வோம்.

யோகினி ஏகாதசி, மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மாத விழாக்கள்... விசேஷங்கள்..!

17.6.2019 ஆனி பௌர்ணமி

நிலவு தன் ஒளி முழுவதையும் பூமி மீது வழங்கும் நாளே பௌர்ணமி. பௌர்ணமி தினத்தின்போது அம்பிகை வழிபாடு செய்வது மிகுந்த பலன்களைத் தரும். முழு நிலவு ஒளியில் புண்ணிய மலைத் தலங்களுக்குச் சென்று கிரிவலம் மேற்கொண்டால் உடலுக்கும் மனதுக்கும் பல்வேறு நன்மைகள் ஏற்படும். 

20.6.19 சங்கடஹர சதுர்த்தி

ஒவ்வொரு மாதமும் தேய்பிறையின்போது வரும் சதுர்த்தி திதியே ‘சங்கடஹர சதுர்த்தி’ என்று கொண்டாடப்படுகிறது. விநாயகரை விரதமிருந்து வழிபட உகந்த நாள் இதுவாகும். இந்தத் தினத்தில் சந்திரன் உதயமாகும் நேரம், கணபதியை வழிபட்டு சந்திர தரிசனம் செய்தால் சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து நன்மைகள் சேரும் என்பது ஐதிகம்  

யோகினி ஏகாதசி, மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மாத விழாக்கள்... விசேஷங்கள்..!

28.6.2019 யோகினி ஏகாதசி

ஆனி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு ‘யோகினி ஏகாதசி’ என்று பெயர். ஏகாதசி தினங்கள் எல்லாமே விஷ்ணு வழிபாட்டுக்கு உகந்த நாள். யோகினி ஏகாதசி தினத்தன்றுதான் அழகாபுரி மன்னனான குபேரன் விரதமிருந்து, திருமாலை வழிபட்டுத் தன் நோயைப் போக்கிக்கொண்டான்

29.6.2019 கூர்ம ஜயந்தி

திருமாலின் தசாவதாரங்களில் ஒன்றான கூர்மாவதாரம் ஆனி மாத தேய்பிறை துவாதிசி திதியில் நிகழ்ந்தது. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது, பகவான் விஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து மந்தார மலையைத் தாங்கி அமிர்தம் தோன்ற உதவிய  தினம் இன்று. இந்த நாளில் பெருமாள் கோயில்களுக்குச் சென்று வழிபடுவது சிறப்பானது. 

30.6.2019, 14.7.2019 பிரதோஷம்

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை  மற்றும் வளர்பிறையில் வரும் திரயோதசி திதியானது பிரதோஷ தினம் எனப்படுகிறது. சிவபெருமானுக்கு விரதமிருந்து வழிபட உகந்த தினம் பிரதோஷம். பிரதோஷத்தின்போது சிவபெருமானை வழிபடுவதன் மூலம் தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. 

2.7.2019 அமாவாசை

முன்னோர்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட உகந்த தினம், அமாவாசை நாள். ஆனி மாத அமாவாசை தினத்தில் நிகும்பலா, பிரத்யங்கரா ஆகிய தேவியரை வழிபட்டால் தீய சக்திகள் விலகி நன்மைகள் ஏற்படும். 

யோகினி ஏகாதசி, மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மாத விழாக்கள்... விசேஷங்கள்..!

4.7.2019 விவேகானந்தர் நினைவு தினம்

இந்தியர்களின் ஆன்மிகப் பெருமையை உலகறியச் செய்த வீரத் துறவி விவேகானந்தரின் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. 1902-ம் ஆண்டு இதே நாளில்தான் கல்கத்தாவில் இயற்கை எய்தினார் விவேகானந்தர். 

6.7.2019 மாணிக்கவாசகர் குருபூஜை

திருவாசகம் அருளிய மகான் மாணிக்கவாசகர். 32 ஆண்டுகளே வாழ்ந்தாலும் தன் வாழ்நாளில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திய மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் ஆனி மாதம், மகம் நட்சத்திரத்தில் ஈசனோடு இரண்டறக் கலந்தார். அவரது குருபூஜை தினத்தையொட்டி இன்று சிவன் கோயில்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறும். 

7.7.19 அமர்நீதி நாயனார் குருபூஜை

சிவத்தொண்டு செய்வதையே தன் வாழ்நாள் இலக்காகக்கொண்டு வாழ்ந்த அமர்நீதி நாயனார் சிவபெருமானோடு ஐக்கியமானது ஆனி மாதப் பூரம் நட்சத்திர தினத்தில்தான். இவரது குருபூஜை தினத்தன்று சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். 

யோகினி ஏகாதசி, மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மாத விழாக்கள்... விசேஷங்கள்..!

8.7.2019 ஆனித் திருமஞ்சனம்

ஆடல் வல்லான் நடராஜருக்கு வருடத்தில் ஆறு அபிஷேகங்கள் மட்டுமே நடைபெறும். ஆனி மாத உத்திர நட்சத்திரத்தன்று ராஜசபை எனும் ஆயிரங்கால் மண்டபத்தில் சூரிய உதயத்துக்கு முன் அதிகாலையில் நடைபெறும் அபிஷேகமே ஆனித் திருமஞ்சனம் எனப்படுகிறது. ஆனித் திருமஞ்சனத்தின்போது நடராஜரைத் தரிசித்தால் தோஷங்கள் அனைத்தும் விலகி வளம் பெருகும் என்பது ஐதிகம். 

12.7.2019 சயிநீ ஏகாதசி

இன்றைய ஏகாதசிக்கு ‘சயிநீ ஏகாதசி’ என்று பெயர். இந்த நாளில் திருமாலை நினைத்து விரதமிருந்து வழிபட்டால் ஆணவமும், அகங்காரமும் அழிந்து நீடித்த ஆனந்தத்தைப் பெறலாம். 

16.7.2019 பௌர்ணமி தினம்

இந்த மாதத்தில் வரும் இரண்டாவது பௌர்ணமிநாள் இது. இந்த நாள் ‘குருபூர்ணிமா’ என்றும் வியாச பூர்ணிமா என்றும் போற்றப்படுகிறது. இந்த நாளில் அனைவரும் தங்கள் குருவை வணங்கி ஆசி பெற திருவருளும் குருவருளும் நிலைத்து நிற்கும். இதே தினத்தில்தான் பெண்களால் சாவித்ரி விரதமும் கடைப்பிடிக்கப்படுகிறது.

Vikatan