Published:Updated:

ஏலகிரியில் 11 -ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

பிரபாகரன் செ
ஏலகிரியில் 11 -ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
ஏலகிரியில் 11 -ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

வேலூர் மாவட்டத்தில், 'குட்டி ஏற்காடு' என்று அழைக்கப்படும்  'ஏலகிரி'யில், சோழர் காலத்து கல்வெட்டு மற்றும் நடுகல் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது, கி.பி 11 -ம் நூற்றாண்டைச் சேர்ந்த  கல்வெட்டு மற்றும் நடுகல் ஒன்று, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பேராசிரியர்கள் மோகன்காந்தி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில், ஆய்வு மாணவர்கள் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட ஆய்வுப்பணியில், நிலாவூர் பகுதியில் இவை கண்டறியப்பட்டுள்ளன.

ஏலகிரியில் 11 -ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு


இது குறித்து, பேராசிரியர் மோகன்காந்தியிடம் பேசியபோது,

"இந்த நடுகல், பிற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கக் கூடும். கி.பி 11-ம் நூற்றாண்டில் நடைபெற்ற போரில், ஊர் அழிந்த போது ஒரு வீரனும் இறந்தான் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இது வடிக்கப்பட்டுள்ளது. அதில், 'ஊர் அறியப் பட்டான் ' என்ற வாக்கியம் இடம்பெற்றுள்ளது. 5 அடி நீளம் 3.5 அடி அகலத்தில், படுத்த நிலையில் உள்ள கல்வெட்டு, பல்லவர் காலத்தில் 'தொண்டை மண்டலம்' என்று அழைக்கப்பட்ட  ஜெயங்கொண்ட சோழமண்டலத்தில் எயில் நாடு இருந்ததையும், அங்கு நிகழ்ந்த போரில், வீரன் ஒருவன் எதிரிகளை எதிர்த்துப் போரிட்டான். போரில் ஊரே அழிந்தது. இவ்வீரனும் உயிர் துறந்தான். இதைப் போற்றும் வகையில் இந்த நடுகல் வெட்டப்பட்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது. அத்துடன், சோழர்களின் 'நாடு பிரிப்பு முறை'யும் இந்தக் கல்வெட்டின்மூலம் விளங்குகிறது.

ஏலகிரியில் 11 -ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

வலது கையில் நீண்ட வாளும், இடது கையில்  குறுகிய வாளும் உள்ளன. நுட்பமான முறையில் காதுகளில் காதணிகளும், வலது பக்கக்  கொண்டையும் நடுகல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வலது பக்க மேல் மூலையில், இரு தேவர்கள் இந்திரனை சொர்க்கத்துக்கு அழைத்துச்செல்லும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. அதில், அவ்வீரனின் கழுத்தில் ஆபரணங்கள், கைகளில் கடகங்கள், காலில் வீரக்கழல்கள் உள்ளன. பொங்கல் தினத்தன்று இந்த நடுகல்லுக்குப் படையலிட்டு, இப்பகுதி மக்கள் வழிபாடு செய்துவருகின்றனர். மேலும், கற்கால கற்கருவிகள், மூலக்கற்கள்  ஆகியன பரவலாகக் காணப்படுகின்றன" என்றார்.

Vikatan