Published:Updated:

திருவரங்கத்தில் பகல் பத்து, ரா பத்து எப்படி தொடங்கியது?

விகடன் விமர்சனக்குழு
திருவரங்கத்தில் பகல் பத்து, ரா பத்து எப்படி தொடங்கியது?
திருவரங்கத்தில் பகல் பத்து, ரா பத்து எப்படி தொடங்கியது?

மார்கழி மாதம் அனைத்து பெருமாள் கோயில்களிலும் பகல் பத்து இராப் பத்து உற்ஸவம் நடைபெறுவது வழக்கம். வைஷ்ணவர்களுக்குக் கோயில் என்றாலே அது திருவரங்கம்தான். முதன்முதலில் திருவரங்கத்தில்தான் பகல் பத்து இராப் பத்து உற்ஸவம் தொடங்கியது. இந்த வைபவம் தொடங்கியதன் பின்னணி பற்றி வைஷ்ணவ பெருந்தகை அனந்தபத்மநாப சுவாமிகளிடம் கேட்டோம். அவரது வார்த்தைகளிலேயே கேளுங்களேன்.

“கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திர நாளில் திருவரங்கம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இன்று நம் திருமங்கையாழ்வாரின் திருநட்சத்திரத் திருநாள் அல்லவா? எல்லோருடைய இல்லங்களிலும் வரிசையாக தீபங்கள் ஏற்றப்பட்டிருந்தன. திருவரங்கநாதனுடைய ஒவ்வொரு பிராகாரமும் ஒளி வெள்ளத்தால்  நிறைந்திருந்தது. வைகுண்டத்திலிருந்து இந்தக் காட்சியைக் கண்டவர்களுக்கு 'கீழ்வானம் வெள்ளென்று' எனும் ஆண்டாள் பாசுரத்தின் பொருள் புரியும்.

எப்போது ஆழ்வார்கள் அவதரித்தனரோ, அவர்களால் பாடல் பெறுவதற்கு அர்ச்சாவதாரத்தில் பல நிலைகளாக திருவரங்கநாதன் அவதரித்தானோ, அது முதல் வைகுண்டம் இருளானது. கீழ்வானமாகிய பூமி ஒளி மிகுந்தது. நந்தா ஞானச்சுடர் விளக்கேற்றிய ஆழ்வாரின் பிறந்த நாளை அரங்கநாதன் உத்தரவின் பேரில் திருவரங்கமே கோலாகலமாகக் கொண்டாடுகிறது.


வையமெலாம் மறைவிளங்க வாள், வேல் ஏந்தும் கலியன் (திருமங்கையாழ்வார், கலியன், பரகாலன் என்றும் வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார்) அறிவு தரும் பெரிய திருமொழி கொண்டு பெருமாளை சேவித்தான். கலியனைக் கண்டதால் பெருமாளுக்கு பூரிப்பா? எம்பெருமானைக் கண்டதால் கலியனுக்கு பூரிப்பா? உடனே தீர்ப்பு சொல்லக் கூடிய விஷயமா அது? ஏனென்றால், 'ஞானிகள் எனது ஆத்மா. இதுவே எனது உறுதியான கொள்கை' என்பான் ரங்கன். அந்த ரங்கனுடைய அந்தரங்கம் அறிந்தார் ஆழ்வார். இரண்டாகப் பிரிந்து கிடக்கும் காவிரி ஒன்றாகக் கலப்பது போன்று அங்கே ஒரு சங்கமம் நிகழ்கிறது.

உவகையுடன் அவரைக் கண்டான் அரங்கன். இது வெறும் அரங்கமன்றே. திரு அரங்கமாயிற்றே. ஆகையால், இனி, திருவரங்கத்தில் பொலிய கலியனைக் கைக்கொள்ளத் திருவுள்ளம் கொண்டான் ரங்கன். ஆபாதசூடம் (திருவடி முதல் திருமுடிவரை) தன்னை சேவித்த கலியனைக் கண்களால் வாரிக்கொண்டு விழுங்கினான் திருவரங்கன். 

‘எம் கலியனைக் கண்ட கண்கள்’ என்று அவன் கண்ணொளி கண்குளிர வைணவத்தின் தவத்திரு புதல்வனை நோக்கியது. ‘அரங்கா! எம்பெருமானே! காவேரி ரங்கா! கஸ்தூரி ரங்கா! வேதமே! வேதத்தின் சுவைப்பயனே!’ என்று கண்களில் நீர்மல்க கார்மேனி சிலிர்க்க, குரல் தழுதழுக்கத் தொழுதார். அரங்கனின் அருள்பார்வையில் தன்னை மறந்த திருமங்கையாழ்வாரைக் கனிவுடன் அழைத்தான் பரந்தாமன்.
‘பரகாலா!’ என்ற அந்த அழைப்பு அவரின் மேனியெங்கும் ஒரு சிலிர்ப்பை உண்டாக்கியது.


‘நான் உய்ந்தேன்’ என்று அணைத்த வேலுடன், தொழுத கையுடன் நின்றார்.
‘இன்று உன் பிறந்தநாளல்லவா!’ - ரங்கன்.
மெலிதான வெட்கத்துடன்  அவரது தலை கவிழ்ந்தது.
‘உனக்கு என்ன வேண்டுமோ கேள்’ கனிவுடன் கண்ணன். கூறியவுடன், மென்கிளிபோல் யாழ்மிழற்றினார் அருள்மாரி.
அருள்மாரியின் மோகனப்பண் இசைமாரி பொழிந்தபோது அரங்கன் உள்ளம் மட்டுமின்றி அங்கிருந்த கற்சிலைகளும் குழைந்தன.
‘மின்னுமா மழை தவழும் மேகவண்ணா!
விண்ணவர்தம் பெருமானே அருளாய்... அருளாய்
அன்னமாய் முனிவரோடு அமரரேத்த
அருமறையை வெளிப்படுத்த அருளாய்... அருளாய்
மீண்டும், மீண்டும் அருளாய்... அருளாய்’ என்று பாடினார்.
‘என்ன பிள்ளாய்! என்ன அருளவேண்டும். அருளாய்! அருளாய்! என்று வலியுறுத்துகின்றனையே!’ எல்லாம் அறிந்தவனான ஆதிப்பிரான் எதுவும் தெரியாதவன்போல் கேட்டான்.

‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னைப் பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சன்மானம் நாடுபுகழும் நல்ல பரிசாக இருக்க வேண்டும்.’

’பிறந்தநாளில் உனது விருப்பத்தைப் பூர்த்தி செய்ய நானன்றோ வாக்களித்தேன். என்ன வேண்டுமென்றாலும் தயங்காமல் கேள்’ என்றான் பரிமளரங்கன்.

‘அடியேன் வேண்டுவது ஈதே. இமையோர் தலைவனே!" ஆழ்வாரின் திவ்ய ப்ரபந்தங்களுக்கு வேதஸாம்யத்தைத் தந்தருள வேண்டும்’. என்றவுடன், ஒரு நொடிகூட தாமதிக்காமல் ‘தந்தோம்’ என்றான் பெரிய பெருமாள். (வேதம் தமிழ் செய்த மாறனாம் ஸ்வாமி ஶ்ரீ நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு வேதம் போன்று பெருமையளிக்க வேண்டும். ஏற்கெனவே அந்தப் பெருமை இருந்தாலும், அதை உலகறியக் கொண்டாட வேண்டும் என்பதே கலியனின் விருப்பம். அதைத்தான் இன்று கேட்டார். அக்காலத்தில் ஆழ்வார் திருநகரியில்தான் நம்மாழ்வார் எழுந்தருளியிருந்தார். ஶ்ரீரங்கத்தில் ஆழ்வாரின் விக்ரஹத்திருமேனி இல்லை என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.)

இசை வெள்ளத்தில் மிதந்த ஶ்ரீரங்கம் இப்போது ஆனந்த வெள்ளத்தில் மூழ்கியது. உடனடியாக கட்டளைகள் பறந்தன. தனது கைங்கர்யபரர்கள் அனைவரையும் ஆழ்வாரை (நம்மாழ்வார்) எழுந்தருளப்பண்ண, ஆழ்வார் திருநகரிக்குச் செல்லும்படி பணித்தார் அமரர் தலைவன். அதுவரையிலும் தனது உத்ஸவங்களை நிறுத்திக்கொண்டான். ஆழ்வார் எழுந்தருளி பகல்பத்து, இராப்பத்து என்று இருபது நாட்கள் அத்யயன உற்சவம் தொடங்குவதற்கு ஏற்பாடானது. 

கலியனின் கார்த்திகையில் கார்த்திகை நாள் தொடங்கி தை ஹஸ்தம் (ஆழ்வார் திருவடி தொழுது மறுபடியும் ஆழ்வார் திருநகரிக்கு ஆழ்வாரைக் கொண்டு கொண்டு விடும் காலம்) வரையில் திவ்யப்ரபந்த சேவாகாலத்துக்கு அனத்யயனம் (ஓதாத காலம்) ஏற்படுத்தப்பட்டது. அதாவது, நம்மாழ்வாரை ஆழ்வார் திருநகரியிலிருந்து திருவரங்கத்துக்கு அழைத்துவந்து எழுந்தருளச்செய்து மீண்டும் ஆழ்வார்திருநகரியிலேயே எழுந்தருளப் பண்ணுவார்கள். 

எப்படி புரட்டாசி மாதத்தில் பெருமாளை சேவித்து, வேண்டிய வரங்களைப் பெறுகிறோமோ அதேபோல் மார்கழி மாதத்திலும் அவரை தரிசித்து நாம் வேண்டும் வரங்களைப் பெறலாம். ஆண்டாளின் திருப்பாவையைக் கேட்பதனால், மிகவும் மகிழ்வான மனநிலையில் அப்போது இருப்பார்.
 

தொகுப்பு: எஸ்.கதிரேசன்