Published:Updated:

ஏகாம்பரேஸ்வர் பற்றிய இனிப்பான தகவல்கள்!

எஸ்.கதிரேசன்
ஏகாம்பரேஸ்வர் பற்றிய இனிப்பான தகவல்கள்!
ஏகாம்பரேஸ்வர் பற்றிய இனிப்பான தகவல்கள்!

காஞ்சி மாநகரம், தென்னிந்தியாவில் பழம் பெருமை வாய்ந்த நகரங்களில் ஒன்றாகும். பஞ்சபூதத்தலங்களுள் முதன்மையானதும் இறைவன் விரும்பி உறைவதும் காஞ்சி மாநகரமே.'நகரேஷூ காஞ்சி'  என்று சொல்வார்கள். அப்படியென்றால் 'நகரங்களுள்  சிறந்தது காஞ்சி' என்று பொருள். பண்டை காலத்தில் புகழ்பெற்று விளங்கிய நகரம். பலரும் போற்றிப் பாடிய தலம்...

காஞ்சி திருத்தலத்தை சைவசமய அருளாளர்களான, அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், வைணவப் பெரியோர்களான ஆழ்வார்கள் எனப் பலரும் பக்திரசம் ததும்பும் பாடல்கள் மற்றும் பாசுரங்களைப் பாடி இருக்கிறார்கள்.  இவர்களைத் தவிர கர்நாடக இசையின் மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள் மற்றும் முத்துசாமி தீட்சிதர் ஆகியோராலும் புகழ்ந்து பாடப்பட்ட தலமாக காஞ்சிபுரம் திகழ்கின்றது. பாபநாசம் சிவனும் இந்தத் திருத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார். இப்படி பலராலும் போற்றிப் பாடப்பட்ட பெருமைக்குரிய இந்தத் தலத்தில் அருளாட்சி செலுத்துகிறார் ஏகாம்பரேஸ்வர். 

தழுவக்குழைந்த பெருமான்!

ஒருநாள் திருக்கயிலையில் இறைவனும் இறைவியும் மகிழ்ச்சியுடனிருக்கும்போது அம்மை விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூட, சூரிய, சந்திரர், ஒளிநீங்கி, உலகம் முழுவதும் இருளானது. படைப்பு, இறைவழிபாடு முதலிய அறங்கள் செய்யப்படாது நீங்கின. இது கண்டு திடுக்கிட்ட அம்மையார் கண்களிலிருந்து கைகளை எடுத்துக்கொள்ள, சிவபெருமான் கண்களைத் திறக்க, உலகம் முன்போல் ஒளிபெற்று விளங்கியது. 

தன் செயலுக்கு வருந்திய அம்பிகையிடம் ஐயன், ''என் கண்களை மூடித் திறந்த சிறுபொழுதில் உலகத்துக்கு பல ஊழிக்காலம் கழிந்து, உயிர்கள் வருந்தின. தர்மங்கள் தடைப்பட்டன. அதனால் உனக்கு ஏற்பட்ட பாவம் நீங்க, மண்ணுலகில் தோன்றி, நகரங்களில் சிறந்த காஞ்சியில் எம்மைக் குறித்து தவமியற்றி வழிபடுவாயாக'' என்று கூறினார்.

அம்மையும் காஞ்சியை அடைந்து, அங்குள்ள ஒற்றை மாமரத்தின் கீழ் மணலால் லிங்கம் அமைத்து அன்றாடம் முறையாக வழிபாடு செய்து இறைவனை வழிபட்டு வரும் நாட்களில், ஒருநாள் அம்மையின் உறுதிப்பாட்டை சோதிக்க எண்ணிய இறைவன் எல்லா நன்னீர் நதிகளையும் உருண்டுவரச் செய்தார். அவையெல்லாம் ஒன்று திரண்டு கம்பையாற்று நீருடன் சேர்ந்து ஊழிக்கால வெள்ளமென வந்தது. அதைக் கண்ட அம்மையார், 'இப்பெருவெள்ளம் இறைவன் மீது செல்லுமே, இனி யான் என் செய்வேன்' என்று உடல் அதிர்ந்து வளைக்கரத்தால் இறைவனை இறுகத் தழுவிக் கொண்டார். இறைவன் தன் திருமேனி குழைந்து தனத்தழும்பும், வளைத்தழும்பும் கொண்டதால் உலகம் யாவும் இன்பக்கடலில் ஆழ்ந்து மகிழ்ந்தது.

ஒரு மாமரத்தில் நான்கு சுவைகளில் கனிகள்!

முதலில் தோன்றிய கோயிலில் சிவபெருமான், வழிபாட்டுக்குரிய மயானலிங்கமாகக் காட்சி அளிக்கிறார். முன்னொரு காலத்தில் சிவபெருமானிடம் வரம்பெற்று, உடல்கள் தோறும் கலந்து இருந்த பண்டாசுரனை வேள்வியில் எரித்தழித்தபின், உலகைப் படைக்கக் கருதி, பிரிந்து வந்து நின்ற நான்கு மறைகளை நோக்கி, ஒரு மாமரமாய் தளிர், பூ, காய், கனிகளுடன் விளங்கச் செய்தார். அதனடியில் சோதிவடிவமாய் எழுந்தருளி, தமது இடப்பாகத்தில் தேவியை உண்டாக்கினார். 

வேதமே மாமரமாகவும்,  இறைவனே தலைவனாகவும் இருத்தலால் 'இறைவன் ஏகாம்பரநாதன்' என்பதாகவும், ஆதிமந்திரமாகிய ஐந்தெழுத்தாகவும் உள்ளார். கிட்டத்தட்ட 3,600 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த மாமரம் நான்கு வேதங்களின் அருமையைக் குறிக்கும் வண்ணம் நான்கு விதமான சுவைகளில் கனிகளைத் தரவல்லது.

சுந்தரமூர்த்தி நாயனார் பார்வை பெற்ற நிகழ்வு!

சமயக்குரவர் நால்வர்களில் ஒருவரான சுந்தரர் திருவாரூரில் பரவை நாச்சியார் என்பவரை  திருமணம் செய்தார். அவர் திருவொற்றியூருக்கு வந்தபோது, தனக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி இருந்ததை மறைத்து, அங்கிருந்த சங்கிலி நாச்சியாரை திருமணம் செய்துகொள்ள விரும்பினார். ஆனால், சங்கிலி நாச்சியார் இறைவனை சாட்சியாக வைத்துதான் தனது திருமணம் நடைபெற வேண்டும் என்று விரும்பினார். அதற்கேற்ப இறைவனின் திருஉளப்படி கோயிலில் இருந்த மகிழம்பூ மரத்தினைச்  சாட்சியாக வைத்து சங்கிலி நாச்சியாரை மணம் முடித்தார்.

பிறகு சங்கிலி நாச்சியாரைப் பிரிந்து செல்ல எண்ணியபோது, இறைவன் சுந்தரரின் கண் பார்வையைப் பறித்துவிட்டார். தன்னுடைய தவற்றுக்கு வருந்திய சுந்தரர், காஞ்சிபுரம் திருத்தலத்துக்கு வந்து ஏகாம்பரேஸ்வரரைப் பணிந்து, 'ஆலம்தான் உகந்து அமுது செய்தானை' என்று தொடங்கும் பதிகத்தைப் பாடினார். அதன் பயனாக, ஒரு கண்ணுக்கு மட்டும் பார்வை வந்தது. மற்றொரு கண்ணின் பார்வையை திருவாரூரில் பெற்றார் என்பது சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்க்கை வரலாறு.

சுந்தரர் காஞ்சியில் பாடிய பதிகம் முழுவதையும் பாராயணம் செய்தால், இறைவன் அருளால் கண் பார்வையில் உள்ள குறைபாடுகள் நீங்கப்பெறலாம்.

பிரிந்து போன தம்பதி ஒன்று சேர்ந்து வாழ வேண்டுமா?

கோயிலின் உள்ளே சபாநாதர் மண்டபத்துக்கு எதிரில் உள்ள தூணில்  சனகாதி முனிவர் கீழே வீற்றிருக்க, அம்மை அய்யனுக்கு பொட்டிடுவது போல அமைந்துள்ள காட்சியைக் கண்டு வழிபட்டால்,  கணவன் - மனைவி இடையில்  அந்நியோன்யம் அதிகரித்து, வாழ்வாங்கு வாழ்வார்கள். மேலும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழாமல், பிரிந்து போன கணவன் -மனைவி இருவரும் நம்பிக்கையுடன் வந்து  வழிபட்டால், இறைவன் அருளால் ஒன்று சேர்ந்து வாழ்வார்கள் என்பது ஐதீகம்

இப்படி அழைப்பதையே இறைவன் விரும்புகிறார்!

இறைவனுக்குள்ள பல பெயர்களினும் 'ஏகாம்பரநாதன்' என்பதே இனிமையானதாகும். எனவே அப்பெயர் சொல்லி வழிபடுவோர் வினைகள் நீங்கி, செல்வமும் முக்தியும் கிடைக்கப்பெறுவர்.

- எஸ்.கதிரேசன்