Published:Updated:

விநாயகருக்கு விருப்பப்பட்ட பெயர்களைச் சூட்டலாமா... சாஸ்திரம் என்ன சொல்கிறது..?

இரா.செந்தில் குமார்
விநாயகருக்கு விருப்பப்பட்ட பெயர்களைச் சூட்டலாமா... சாஸ்திரம் என்ன சொல்கிறது..?
விநாயகருக்கு விருப்பப்பட்ட பெயர்களைச் சூட்டலாமா... சாஸ்திரம் என்ன சொல்கிறது..?

விநாயகர் மூலப் பரம்பொருள். முழுமுதற் கடவுள். அனைவரும் விரும்பும் கடவுள். பக்தியோடு வழிபடுபவர்களுக்கு அவர்கள் கேட்பதை அருள்பவர். விநாயகர் என்றால், 'தனக்கும் மேலே வேறு ஒரு தலைவர் இல்லாதவர்' என்று பொருள். 'வானுலகமும், மண்ணுலகமும் செழித்து வாழவும், நான்மறைகள் சிறந்தோங்கவும், செய்ய தமிழ் பார்மிசை விளங்கவும், ஆனைமுகனாகிய விநாயகனைப் பரவு' என்கிறார் சேக்கிழார் பெருமகன்.

கோயில்களிலும், ஆற்றங்கரைகளிலும், மரங்களின் அடியிலும் என்று காணும் இடமெங்கும் கணபதியே காட்சி தருகிறார். பலப் பல பெயர்களிலும் காட்சி தருகிறார். சிலர் தங்கள் குழந்தைகளுக்கு விரும்பியபடி பெயர் வைப்பதுபோல், விநாயகருக்கும் தங்களுக்குப் பிடித்த பெயருடனோ தங்கள் நிறுவனங்களின் பெயருடனோ இணைத்து 'விநாயகர்' என்று பெயர் வைக்கும் பழக்கம் பெரும்பாலும் இருக்கிறது. கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் போது பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகருக்கு 'கிரிக்கெட் விநாயகர் 'என்று பெயர் வைத்த பக்தர்களும் உண்டு.

இப்படி தங்கள் விருப்பப்படி விநாயகருக்குப் பெயர் வைப்பது சரிதானா? இல்லை, சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட 16 விநாயகர் பெயர்களை மட்டும்தான் சூட்ட வேண்டுமா என்பது பற்றி வேத விற்பன்னர் சுந்தரேஷ சர்மாவிடம் கேட்டோம்.

" சாஸ்திரங்களில் 16 வகையான விநாயகரின் பெயர்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்தப் பெயர்களில் ஒன்றைத்தான் பெரும்பாலும் வைக்கவேண்டும்.

ஆனால், நிறுவனத்தின் உரிமையாளர் பெயருடனோ, நிறுவனத்தின் பெயருடனோ விநாயகர் பெயரை இணைத்து வைக்கும் பழக்கம் இருக்கிறது. உதாரணத்துக்கு, ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் பெயர் ஆனந்தன் என்றால், 'ஆனந்த விநாயகர்' என்று வைப்பது, அல்லது நிறுவனத்தின் பெயர் சக்தி டிரேடர்ஸ் என்றால் சக்தி விநாயகர் என்று பெயர் வைப்பதும் நடைமுறையில் இருக்கிறது. அது ஒன்றும் பெரிய தவறு கிடையாது. ஆனால், உகந்த பெயராக வைக்கவேண்டும். மேலும், இது விநாயகருக்கு மட்டுமே பொருந்தக்கூடியதாக இருக்கவேண்டும்.

விநாயகருக்கு மட்டும் ஏன் இந்தத் தனிச்சிறப்பு ?

விநாயகரை, நாம் எதுவாக நினைக்கிறோமோ அவர் அதுவாகவே மாறுகிறார் என்று விநாயகர் அகவலிலும், புராணங்களிலும் கூறப்பட்டுள்ளது. சாணத்தில் பிடித்தாலும், மஞ்சளில் பிடித்தாலும், விக்கிரகமாக வடித்தாலும் பிள்ளையார்தான். சிவனுக்கோ, முருகனுக்கோ விக்கிரகம் செய்து கோயிலில் பிரதிஷ்ட செய்து கும்பாபிஷேகம் செய்துதான் வழிபடவேண்டும்.

விநாயகர் அப்படி அல்ல. தெருவோரங்களில், மரத்தடிகளில், மிகப்பெரிய கோயில்களில் என அனைத்து இடங்களிலும் வீற்றிருக்கும் அற்புதக் கடவுள் கணபதி.

கிரகப்பிரவேசம் செய்யும் இல்லங்களில் சாணத்தில் பிள்ளையார் பிடித்து 'சாணப்பிள்ளையார்' என்று வைக்கிறோம். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, 'மஞ்சள் பிள்ளையார்' என்று வைக்கிறோம். அதன் மேல் அறுகம்புல் வைத்து வழிபடுகிறோம். சாதாரணமாக சாணம் காய்ந்த உடனே அதில் புழு பூச்சிகள் உருவாகி கரையான்கள், ஏறிவிடும். ஆனால், சாணத்தில் பிடித்த பிள்ளையாரின் மீது காலம் முழுவதும் கறையான் அரிக்காத அதிசயம் நடக்கும். அதனால்தான் 'சாமி பொய் என்றால், சாணத்தைப் பார், சாஸ்திரம் பொய் என்றால் வானத்தைப் பார்' என்ற பழமொழியே உருவானது.

என்று கூறிய சுந்தரேஷ சர்மா தொடர்ந்து நாம் எந்தப் பொருளைக் கொண்டு விநாயகர் திருவுருவம் செய்கிறோமோ அதற்கேற்ப பலன்களை நமக்குத் தருவதாகவும் கூறினார் ".

மண் - நல்ல பதவி கிடைக்கும்

புற்று மண் - தொழிலில் லாபம் உண்டாகும்

உப்பு - நிம்மதி உண்டாகும்

கல் - வாழ்வில் வெற்றி கிட்டும்

வெள்ளெருக்கு - செல்வம் செழிக்கும்.

மஞ்சள் - சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

வெல்லம் - வளமான வாழ்வு கிட்டும் 

எங்கு, எப்படி எந்தப் பெயரில் விநாயகரை வணங்கினாலும், அவருக்கு உரிய பூஜை, புனஸ்காரங்களைச் சரியாகச் செய்து வழிபட்டால் விநாயகப்பெருமானின் அனுகூலம் நிச்சயமாக நமக்குக் கிட்டும். நம் வாழ்வும் செழிக்கும்.