Published:Updated:

இங்கே உதைத்தால் உயரலாம்!

சீசன் தொடக்கத்தில் தடுமாறினாலும், இரண்டாம் பாதியில் அட்டகாசமான கம்பேக் கொடுத்து மீண்டும் சாம்பியன் ஆகியிருக்கிறது மான்செஸ்டர் சிட்டி.

பிரீமியம் ஸ்டோரி
2021 டொமஸ்டிக் கால்பந்து சீசன் முடிவுக்கு வந்திருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒவ்வொரு தொடரின் முக்கிய முடிவுக்கும் கடைசி நாள் வரை காத்திருக்கவேண்டியிருந்தது. லா லிகா, லீக் 1 தொடர்களில் சாம்பியன் யார் என்பதும், பிரீமியர் லீகில் சாம்பியன்ஸ் லீக் இடங்கள் யாருக்கு என்பதும் உச்சக்கட்டப் பரபரப்புக்கு மத்தியில் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

பிரீமியர் லீக்

இங்கே உதைத்தால் உயரலாம்!

டாப் கோல்ஸ்கோரர்: ஹேரி கேன் (டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்)

23 கோல்கள்

சீசன் தொடக்கத்தில் தடுமாறினாலும், இரண்டாம் பாதியில் அட்டகாசமான கம்பேக் கொடுத்து மீண்டும் சாம்பியன் ஆகியிருக்கிறது மான்செஸ்டர் சிட்டி. டிஃபன்ஸில் தடுமாறிய அந்த அணிக்கு மிகப்பெரிய உத்வேகம் கொடுத்தனர் ரூபன் டியாஸ், ஜான் ஸ்டோன்ஸ் இருவரும். அட்டாக்கில் வழக்கம்போல் டி புருய்னா, மாரஸ் பட்டையைக் கிளப்ப, அவர்களோடு இணைந்து மாயம் நிகழ்த்தினார் இளம் வீரர் ஃபில் ஃபோடன். கார்டியோலாவின் மாஸ்டர் பிளான்கள் இந்த முறை வொர்க் அவுட்டாக, இரண்டு மாதங்கள் முன்பே அசைக்க முடியாத முன்னிலை பெற்றது அணி.

சிட்டியைவிடப் பல புள்ளிகள் பின்தங்கியிருந்தாலும், இரண்டாவது இடத்தை உறுதி செய்திருந்தது மான்செஸ்டர் யுனைடட். அதனால், அடுத்த 2 இடங்களுக்கும் கடும் போட்டி. டாப் 4 பொசிஷனில் முடித்தால்தான் அடுத்த சீசன் சாம்பியன்ஸ் லீக் தொடருக்குத் தகுதிபெற முடியும் என்பதால் செல்சீ (67 புள்ளிகள்), லிவர்பூல் (66 புள்ளிகள்), லெஸ்டர் சிட்டி (66 புள்ளிகள்) அணிகளுக்குக் கடைசிப் போட்டி அதிமுக்கியமானதாக அமைந்தது. இந்த 3 அணிகளின் போட்டிகளும் பல ட்விஸ்ட்களைக் கொடுத்துக்கொண்டே இருந்தது. டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியோடு மோதிய லெஸ்டர் முதலில் கோலடித்து மூன்றாவது இடத்துக்கு முன்னேற, லிவர்பூல் ஐந்தாவது இடத்தில் பின்தங்கியது. ஆனால், கடைசி 15 நிமிடங்களில் எல்லாம் மாறின. கோல்கீப்பர் ஸ்மெய்ச்சலின் ஓன் கோல், கேரத் பேல் அடித்த 2 கோல்களின் காரணமாக, ஸ்பர்ஸுக்கு எதிராகத் தோல்வியடைந்தது லெஸ்டர். அந்த அணி ஐந்தாம் இடம் பிடித்து சாம்பியன்ஸ் லீக் வாய்ப்பை நழுவ விட்டது.

லீக் 1

இங்கே உதைத்தால் உயரலாம்!

டாப் கோல்ஸ்கோரர்: கிலியன் எம்பாப்பே (பி.எஸ்.ஜி)

27 கோல்கள்

இந்தத் தொடரில் பெரிய போட்டி இல்லாததால் இத்தனை காலம் ‘ஃபார்மர்ஸ் லீக்’ என்று அழைக்கப்பட்டது லீக் 1. ஆனால், இம்முறை அதைப் பொய்யாக்கும் வகையில் இருந்தது தொடர். கடைசி கட்டம்வரை லீல், பி.எஸ்.ஜி, மொனாகோ, லயான் என 4 அணிகள் முதலிடத்துக்கு மோதின. லயான், மொனாகோ சற்று சறுக்க, கடைசி நாளில் லீல், பி.எஸ்.ஜி அணிகள் கோப்பையை வெல்ல ஆயத்தமாகின. கடந்த 8 ஆண்டுகளில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்ற பி.எஸ்.ஜி இம்முறை பட்டம் வெல்லவேண்டுமெனில், கடைசிப் போட்டியில் கட்டாயம் வெல்லவேண்டும். அதுமட்டுமல்லாமல் ஆங்கர்ஸ் அணிக்கெதிராக லீல் வெற்றி பெறாமல் இருக்கவேண்டும். ஆனால், கடைசி நாளில் அது நடக்கவில்லை. இரண்டு அணிகளுமே தங்கள் போட்டிகளில் வெற்றி பெற, நான்காவது முறையாக பிரான்ஸின் சாம்பியன் ஆனது லீல். பி.எஸ்.ஜி மேனேஜர் மரிஷியோ பொசடினோவின் லீக் கோப்பை வெல்லும் கனவு இன்னும் கனவாகவே நீடிக்கிறது.

லா லிகா

இங்கே உதைத்தால் உயரலாம்!

7 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயினில் ஒரு மாற்றம் நடந்திருக்கிறது. பார்சிலோனா, ரியல் மாட்ரிட் இரு அணிகளையும் பின்னுக்குத்தள்ளி 11-வது முறையாக லா லிகா சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது அத்லெடிகோ மாட்ரிட். எப்போதும் அவர்களின் பலமாகத் திகழும் டிஃபன்ஸ் இம்முறையும் அரணாக அமைய, முன்பைவிடச் சிறப்பாக அட்டாக்கர்களும் கைகொடுக்க, கோப்பை வென்றிருக்கிறது டியாகோ சிமியோனின் அணி.

வயதாகிவிட்டது என்று லூயிஸ் சுவாரஸை பார்சிலோனா கைகழுவ, அவரை அலேக்காக மாட்ரிட்டுக்கு அழைத்து வந்தது அத்லெடிகோ. அந்த அணியின் ஆட்ட முறை அவருக்கு செட் ஆகுமா, 34 வயதான சுவாரஸை அத்லெடிகோவால் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியுமா என்று பல கேள்விகள் எழுந்தன. ஆனால், ஓரிரு வாரங்களிலேயே கெமிஸ்ட்ரி சிறப்பாகப் பொருந்திவிட்டது.

முதல் போட்டியில் மாற்றுவீரராகத்தான் களமிறங்கினார். விளையாடியது வெறும் 24 நிமிடங்கள்தான். அதற்குள் 2 கோல்கள், 1 அசிஸ்ட். முதல் போட்டியிலேயே தான் இன்னும் கோல் மெஷின்தான் என்பதை நிரூபித்தார். அந்த ஒரு போட்டியில் மட்டுமல்ல, தொடர்ந்து தன் கோல்களால் போட்டியின் முடிவுகளில் தாக்கம் ஏற்படுத்தினார். இந்த சீசனில் அவர் கோல்களால் மட்டும் 35 புள்ளிகள் பெற்றது அத்லெடிகோ மாட்ரிட். கடைசிப் போட்டியிலும் வெற்றி அவசியமாக இருந்தது. 1-1 என சமநிலையில் இருந்தபோது, மீண்டும் தன் கோலால் அந்த அணிக்கு வெற்றி தேடித்தந்தார் சுவாரஸ். அத்லெடிகோ மாட்ரிட் சாம்பியன் ஆனது!

சீரி - ஆ

இங்கே உதைத்தால் உயரலாம்!

டாப் கோல்ஸ்கோரர்: கிறிஸ்டியானோ ரொனால்டோ (யுவன்டஸ்)

- 29 கோல்கள்

பிரீமியர் லீக் போல், இங்கும் சாம்பியன்ஸ் லீக் இடங்களுக்குக் கடும் போட்டி நிலவியது. தொடர்ந்து 9 ஆண்டுகள் சீரி - ஆ பட்டம் வென்ற யுவன்டஸ் அணியின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது இன்டர் மிலன். கடந்த ஆண்டு நூலிழையில் தவறவிட்ட பட்டத்தை இம்முறை இறுக்கமாகப் பற்றிக்கொண்டது ஆன்டோனியோ கான்டேவின் அணி. லுகாகுவின் கோல் மழை பெரிய முன்னிலை பெறுவதற்கு அந்த அணிக்கு உதவியது.

சீசன் தொடக்கத்தில் டேபிள் டாப்பராக இருந்த ஏ.சி.மிலன், கடைசி நாளில் சாம்பியன்ஸ் லீகைத் தவறவிடுமோ என்று அஞ்சப்பட்டது. இருந்தாலும், மிகச் சிறப்பாகச் செயல்பட்டு இந்த சீசன் ரன்னர் அப் ஆனது. யுவன்டஸ் பட்டத்தை இழந்தது மட்டுமல்லாமல், சாம்பியன்ஸ் லீக் வாய்ப்பையுமே தவறவிடும் நிலைக்குச் சென்றது. டாப் 4 வருவதே சந்தேகமானதால், அடுத்த சீசன் கிறிஸ்டியானோ ரொனால்டோ அங்கு தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. நேபொலி அணி வெற்றி பெற வேண்டிய கடைசிப் போட்டி டிராவில் முடிய, அந்தத் தவற்றின் விளைவால் நான்காம் இடம் பெற்றது யுவன்டஸ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு