Published:Updated:

`குணமடையாவிட்டாலும் ஒலிம்பிக் செல்வேன் என்றார் நீரஜ்!' - தங்கக் கரத்தைக் காப்பாற்றிய மும்பை டாக்டர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆபரேஷன் செய்துகொண்ட நீரஜ் சோப்ரா
ஆபரேஷன் செய்துகொண்ட நீரஜ் சோப்ரா ( Photo: Twitter/ @Neeraj_chopra1 )

ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற நீரஜ் சோப்ராவின் கையில் ஆபரேஷன் செய்த மும்பை டாக்டர்.

ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இந்த ஆண்டு பெற்ற 7 பதக்கங்களில், ஒரு தங்கப் பதக்கமும் அடங்கும். தங்கப் பதக்கத்தை தேசத்துக்குப் பெற்றுக்கொடுத்த நீரஜ் சோப்ராவுக்கு இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து கொண்டிருக்கின்றன. நீரஜ் சோப்ராவுக்கு, முன்னதாக முழங்கையில் ஆபரேஷன் செய்த டாக்டர் தின்ஷா, அவரின் இந்த வெற்றி குறித்த தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டதோடு, நீரஜ் சோப்ராவுக்கு செய்த அறுவைசிகிச்சை குறித்தும் நினைவுகூர்ந்திருக்கிறார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ள நீரஜ் சோப்ராவுக்கு, கடந்த 2019-ம் ஆண்டு முழங்கையில் காயம் ஏற்பட்டு மும்பையில் உள்ள திருபாய் அம்பானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அந்தக் காயம் காரணமாக தோஹாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ராவால் கலந்துகொள்ள முடியவில்லை. அவரால் மற்ற போட்டிகளிலும் கலந்துகொள்ள முடியாத நிலை.

டாக்டர் தின்ஷா
டாக்டர் தின்ஷா
நீரஜ் சோப்ரா : உலகின் அடுத்த உசேன் போல்ட் இந்தியாவில் பிறந்திருக்கிறார்... இது வெறும் ஆரம்பம்தான்!

முழங்கையில் காயம் ஏற்பட்டதால் ஈட்டி எறிதலில் சிக்கல் ஏற்பட்டது. அவருக்கு, மும்பையைச் சேர்ந்த பிரபல எலும்பு அறுவைசிகிச்சை நிபுணர் தின்ஷா பார்திவாலா அறுவை சிகிச்சை செய்து மீட்டார். இந்நிலையில், நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் பெற்றிருப்பது குறித்து டாக்டர் தின்ஷா தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது குறித்து தின்ஷா கூறுகையில், ``நீரஜ் சோப்ராவுக்கு வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் மிகவும் பெரிதாக இருந்தது. அவருக்கு 2019-ம் ஆண்டு மே 3-ம் தேதி மும்பையில் உள்ள திருபாய் அம்பானி மருத்துவமனையில் முழங்கையில் அறுவை சிகிச்சை செய்தேன். இந்த அறுவைசிகிச்சை மிகவும் சிக்கலான ஒன்றாக இருந்தது. முழங்கையில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக நீரஜ் சோப்ராவுக்கு கடுமையான வலி இருந்தது. முழங்கையில் இருந்த திசுக்கள் கிழிந்திருந்தன. இரண்டு மணி நேரத்துக்கும் மேல் அறுவைசிகிச்சை நடந்தது. அதன் பிறகு, நான்கு மாதங்கள் தொடர்ந்து பிசியோதெரபி பயிற்சி எடுத்துக்கொண்டார்.

நீரஜ் சோப்ரா என்னிடம் வந்தபோது தன்னை மல்யுத்த வீராங்கனைகள் கீதா மற்றும் பபிதா சகோதரிகள் அனுப்பி வைத்ததாகவும், அவர்கள் மூலமே இங்கு வர தனக்கு சக்தி கிடைத்ததாகவும் தெரிவித்தார். ஏராளமான தடகள வீரர்கள் என்னிடம் ஆபரேஷன் செய்துகொண்ட பிறகு, மீண்டும் விளையாட்டுக்குத் திரும்பியதாக மல்யுத்த வீராங்கனைகள், நீரஜ் சோப்ராவிடம் தெரிவித்துள்ளனர். அதன் பிறகுதான் என்னிடம் அறுவைசிகிச்சை செய்துகொள்வதற்கான நம்பிக்கை நீரஜ்ஜுக்கு ஏற்பட்டது. சரியான நேரத்தில் அந்த அறுவை சிகிச்சை முடிந்ததால், அவரால் ஒலிம்பிக்கில் ஃபார்முடன் கலந்துகொள்ள முடிந்தது.

நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா
Martin Meissner
நீரஜ் சோப்ரா :  17 ஆண்டு காலத் தவத்தின் உருவமே… உனக்கு நன்றி!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் தங்கப் பதக்கம் பெறுவேன் என்று நீரஜ் என்னிடம் நம்பிக்கை தெரிவித்தார். சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோதுகூட, தான் முழுமையாகக் குணமடையாவிட்டாலும் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் பெறுவேன் என்று என்னிடம் நீரஜ் சோப்ரா உறுதியுடன் தெரிவித்தார்" என்று பகிர்ந்திருக்கிறார் டாக்டர்.

நீரஜ் ஆபரேஷன் செய்துகொண்ட பிறகு, தனது ட்விட்டர் பக்கத்தில் அது தொடர்பாகப் பதிவிட்டு, டாக்டரின் பெயரை குறிப்பிட்டு, சில காலம் பிசியோதெரபி எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் என்று பதிவிட்டிருந்தார். தற்போது தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு டாக்டர் தின்ஷா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், பி.வி.சிந்து, சாய்னா உட்பட ஏராளமான முன்னணி விளையாட்டு வீரர்களுக்கு டாக்டர் தின்ஷா அறுவைசிகிச்சை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர் தின்ஷா சென்டர் பார் ஸ்போர்ட்ஸ் மெடிசின் இயக்குநராகவும் இருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு