Published:Updated:

``நேரில் வந்து கடிதம் தந்தார்; அவ்வளவுதான்!" - வீராங்கனை சாந்தி சர்ச்சையும் அதிகாரி விளக்கமும்

சாந்தி

தடகள சாந்தியின் சாதனைகளைவிட, அவர் எதிர்கொண்ட சோதனைகளே பலருக்கும் பரிச்சயம். இவர் தரப்பில் தற்போது புதிய புகார் ஒன்று எழுந்திருக்கிறது. விசாரணை அதிகாரி, இவரிடம் பாலினச் சான்றிதழ் கேட்டதாக எழுந்த சர்ச்சையில் விளக்கம் அறிய, சம்பந்தப்பட்ட இருவரிடமும் பேசினோம்.

``நேரில் வந்து கடிதம் தந்தார்; அவ்வளவுதான்!" - வீராங்கனை சாந்தி சர்ச்சையும் அதிகாரி விளக்கமும்

தடகள சாந்தியின் சாதனைகளைவிட, அவர் எதிர்கொண்ட சோதனைகளே பலருக்கும் பரிச்சயம். இவர் தரப்பில் தற்போது புதிய புகார் ஒன்று எழுந்திருக்கிறது. விசாரணை அதிகாரி, இவரிடம் பாலினச் சான்றிதழ் கேட்டதாக எழுந்த சர்ச்சையில் விளக்கம் அறிய, சம்பந்தப்பட்ட இருவரிடமும் பேசினோம்.

Published:Updated:
சாந்தி

தடகள வீராங்கனை சாந்தி, விளையாட்டுத்துறையில் தமிழகத்தின் நம்பிக்கை முகங்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கத்தகுறிச்சி எனும் குக்கிராமம்தான் இவரின் பூர்வீகம். தந்தை தையல் தொழிலாளி. வறுமையின் பிடியில் சுழன்ற குடும்பத்தில் வளர்ந்ததாலோ என்னவோ, விளையாட்டுத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற தன் கனவைத் துரத்திப் பிடிக்க, பெரும் உழைப்பும் பயிற்சியும் மட்டுமன்றி, பல்வேறு புறக்கணிப்புகளையும் சேர்த்தே சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் சாந்திக்கு ஏற்பட்டது.

சாந்தி
சாந்தி

சத்தான உணவு, திடமான ஷூ... விளையாட்டு வீரர்களுக்கு மிக அவசியமான இந்தத் தேவைகளும் சாந்திக்குப் பல நெருக்கடிகளுக்குப் பிறகே சாத்தியமாகின. ஏராளமான மைதானங்களிலும் வைராக்கியத்துடன் ஓடியவர், சர்வதேச அளவில் 10-க்கும் அதிகமான பதக்கங்களை இந்தியாவுக்குப் பெற்றுக்கொடுத்தார். வீட்டில் டிவி இல்லாததால், மகளின் துடிப்பான ஓட்டத்தைத் தொலைவிலிருந்துகூட சாந்தியின் பெற்றோரால் பார்க்க முடியவில்லை. இதை அறிந்த அப்போதைய முதல்வர் கருணாநிதி, டிவி மற்றும் பரிசுகள் வழங்கி சாந்தியை ஊக்கப்படுத்தினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

களத்தில் ஓடும்போது இவர் சிந்திய ஒவ்வொரு துளி வியர்வைக்குப் பின்னாலும், விவரிக்க இயலாத வலி மறைந்திருந்தது. அதனால்தான், சாந்தியின் ஒவ்வொரு வெற்றியும், பலருக்கும் நம்பிக்கையூட்டியது. 2006-ல் தோகாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அந்தப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமையும் இவரையே சேரும். அதன்பிறகு, பாலின ரீதியான சில பிரச்னைகள் சாந்தியை விடாமல் துரத்தியதுடன், ஆசியப் போட்டியில் இவர் வென்ற வெள்ளிப்பதக்கமும் திரும்பப் பெறப்பட்டது. தடகளப் போட்டிகளிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட சாந்தி, தன் கனவுகளையும் தொலைத்தார். போதாக்குறைக்கு, வறுமையும் அழுத்தம் தரவே, சாந்திக்குப் பலமுனைகளிலும் பாரம் கூடியது.

தடகளப் போட்டியில் சாந்தி
தடகளப் போட்டியில் சாந்தி

`அரசு சார்பில் தனக்கு ஒரு வேலை வேண்டும்!' - இந்தக் கோரிக்கையைப் பலமுறை கூறி அலுத்துப்போன சாந்தி, இறுதியாக, நீதிமன்றப் படிகளில் ஏறினார். இவருடைய அந்த முதல் போராட்டத்தில் வெற்றி கிடைத்தது. `சாந்திக்கு அரசுப் பணி வழங்கப்பட வேண்டும்' என்று நீதிமன்றம் உத்தரவிட்ட தீர்ப்பால், செங்கல் சூளையில் வேலைக்குச் செல்லும் முடிவை மாற்றிக்கொண்டார் இவர். பின்னர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டவர், திருச்சியில் பணியாற்றிவருகிறார். இந்த நிலையில், `தன்னுடன் பணிபுரியும் பயிற்சியாளர் ஒருவர், சாதி ரீதியாகவும், பாலின அடையாளம் குறித்தும் இழிவாகப் பேசி துன்புறுத்துகிறார்' என்று 2018-ல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திலும் காவல்துறையிலும் சாந்தி புகார் அளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேசிய பழங்குடியினர் ஆணையத்தின் பார்வைக்கும் இந்தப் புகார் சென்றது. அதில், பாலினம் தொடர்பான புகாரை, சென்னை, வேப்பேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொல்லப்போனால், சாந்தி, இலக்கை நோக்கி மைதானத்தில் ஓடியதைவிடவும், பாலின ரீதியான சிக்கல்களிலிருந்து விடுபட ஓடிய ஓட்டமே அதிகம். 15 ஆண்டுகளைக் கடந்தும், அணையாமல் தகித்துக் கொண்டிருக்கும் பாலினம் சார்ந்த விவகாரத்திலிருந்து விடுபட்டு, நிம்மதிப் பெருமூச்சு விட முடியாதது, சாந்திக்கு நேர்ந்த பெரும் சோகம்.

சாந்தி
சாந்தி

2018-ல் சாந்தி அளித்த புகாரின் அடிப்படையில், சாதி ரீதியிலான குற்றச்சாட்டுக்கு, பட்டியலின மக்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் விசாரணை நடைபெற்றது. அதில், சாந்தியின் புகாருக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை எனத் தெரிய வந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. அதேசமயம், பாலினம் தொடர்பான அவரின் குற்றச்சாட்டுக்குப் போதிய முகாந்திரம் இருப்பதாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதுதொடர்பான நீதிமன்றத்தின் அடுத்தகட்ட விசாரணை, விரைவில் நடக்கவிருக்கிறது.

எனவே, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக உத்தரவின் பேரில், வேப்பேரி காவல்துறை உதவி ஆணையர், சாந்திக்கு முறையான அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்தி யிருக்கிறார். இந்தச் சூழலில் சாந்தி தரப்பில் கூறப்படும் புதிய புகார் ஒன்று, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ``தன்னிடம் விசாரணை மேற்கொண்ட காவல்துறை அதிகாரி ஹரிகுமார், பாலின சான்றிதழ் கொடுக்கும்படி கேட்டிருந்தார்" என்று சாந்தி கூறியிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. `ஏற்கெனவே பல விதத்திலும் இன்னல்களை எதிர்கொண்ட சாந்தியிடம், விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் இவ்வாறான கேள்விகள் கேட்பது மனித நேயமற்றது' என்கிற ஆதங்கக்குரல்கள் ஒலிக்கின்றன.

தடகள வீராங்கனை சாந்தி
தடகள வீராங்கனை சாந்தி

இதுதொடர்பாக, வேப்பேரி காவல்துறை உதவி ஆணையர் ஹரிகுமாரிடம் பேசினோம். ``புகார்தாரர் அளித்த (சாந்தி) சாதி ரீதியிலான குற்றச்சாட்டுக்கு, பட்டியலின மக்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடைபெற்ற விசாரணையில் முகாந்திரமும் இல்லை எனத் தெரிய வந்ததால், அந்த விவகாரம் முடித்து வைக்கப்பட்டது. அவர் கூறிய மற்றொரு புகாரான பாலினம் தொடர்பான குற்றச்சாட்டில், எனக்கு முன்னர் வேறொரு காவல்துறை அதிகாரி விசாரணை நடத்தினார். அந்தக் காலகட்டத்தில் மூன்று முறை விசாரணைக்கு அழைக்கப்பட்டும், புகார்தாரர் நேரில் ஆஜராகி விளக்கம் தரவில்லை. இந்த நிலையில், எனக்கு முன்னர் விசாரித்த அந்தக் காவல்துறை அதிகாரி பணிமாறுதல் ஆனார்.

வேப்பேரி உதவி ஆணையராக நான் பொறுப்பேற்று ஒரு மாதம்தான் ஆகிறது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக உத்தரவின்பேரில், இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரியாக என்னிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இந்த நான்காவது முறை விசாரணையிலும் புகார்தாரர் ஆஜராகவில்லை எனில், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படும் சூழல் ஏற்பட்டது. இதனால், விசாரணைக்கு ஆஜராகும்படி நான் கேட்டுக்கொண்டதை ஏற்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை புகார்தாரர் நேரில் ஆஜரானார்.

சாந்தி
சாந்தி

வழக்கு தொடர்பான என் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். ``நான் கொடுத்த புகார் தொடர்பாக, மறு விசாரணைக்கு நேரில் ஆஜரானேன். மீண்டும் அழைத்தால் நேரில் ஆஜராவேன்" என்று அவரே கைப்பட கடிதம் எழுதி, அதில் கையொப்பமிட்டு என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். இதுதான் நடந்தது! ஆனால், விசாரணையில் நான் பாலினச் சான்றிதழ் கேட்டதாக அவர் தரப்பில் கூறப்படுவதாக வெளியான தகவல் ஆச்சர்யமளிக்கிறது. என் தரப்பில் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வேன். மேற்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கையை நீதிமன்றம் மேற்கொள்ளும்" என்று முடித்தார்.

காவல்துறை அதிகாரி, தன்னிடம் பாலினச் சான்றிதழ் கேட்டதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக விளக்கம் கேட்க சாந்தியிடம் பேசினோம். ``இந்த விவகாரம் தொடர்பாக நான் எதுவும் பேச விரும்பவில்லை" என்று அழைப்பைத் துண்டித்துக்கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism