Published:Updated:

“விளையாட்டில் இருக்கும் அரசியல் வெறுப்பேற்றுகிறது!”

புருஷோத்தமன்
பிரீமியம் ஸ்டோரி
புருஷோத்தமன்

சின்ன வயசுலயே மத்தவங்க தொடாத ஒரு விஷயத்துல நுழையணும்னு ஆசை வந்திருச்சு. கூடைப்பந்து வித்தியாசமான விளையாட்டு.

“விளையாட்டில் இருக்கும் அரசியல் வெறுப்பேற்றுகிறது!”

சின்ன வயசுலயே மத்தவங்க தொடாத ஒரு விஷயத்துல நுழையணும்னு ஆசை வந்திருச்சு. கூடைப்பந்து வித்தியாசமான விளையாட்டு.

Published:Updated:
புருஷோத்தமன்
பிரீமியம் ஸ்டோரி
புருஷோத்தமன்

வாழ்த்துகளும் பாராட்டுகளும் ஓயவில்லை... இத்தாலியில் 98 நாடுகள் பங்கேற்ற உலக மாஸ்டர்ஸ் கூடைப்பந்தில், அணியை வழிநடத்திச்சென்று தங்கம் பெற்று வந்ததில் ஆரம்பித்தது... அடுத்தடுத்து தமிழக டீம் கேப்டனாகச் சென்று நேஷனல் மாஸ்டர்ஸில் தங்கம் வாங்கியது; 2021-ம் ஆண்டுக்கான தமிழகத்தின் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது; ‘ஐகானிக் ஸ்டார்’ அவார்டு வாங்கியதுவரை புருஷோத்தமனை வாழ்த்தவும் பாராட்டவும் ஏராளம் இருக்கிறது. புருஷோத்தமனை நேரில் அழைத்து 39 எம்.பி-க்கள் முன்னிலையில் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார் தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின். ஐ.சி.எப் சில்வர் ஜூப்ளி தொடக்கப்பள்ளி மைதானத்தில் வியர்க்க விறுவிறுக்க குடும்பத்தோடு பயிற்சி யெடுத்துக்கொண்டிருக்கிறார் புருஷோத்தமன். புருஷோத்தமனின் மனைவி ரம்யாவும் கூடைப்பந்து வீராங்கனை. தமிழ்நாட்டு அணியின் கேப்டனாக இருந்தவர். இந்தியக் கூடைப்பந்து விளையாட்டின் பெருமித முகமாக இருக்கிற புருஷோத்தமனின் கதை மற்ற விளையாட்டு வீரர்களிடமிருந்து வேறுபட்டது. வனத்துறை அதிகாரியான தந்தை, விளையாட்டெல்லாம் வீணென்று கருதக்கூடியவர். பள்ளி, டியூஷன், படிப்பு... இதுதான் உலகம். புருஷோத்தமன் எந்தவிதமான பயிற்சியும் இல்லாமலே தமிழகக் கூடைப்பந்து அணிவரைக்கும் வந்தவர்.

 “விளையாட்டில் இருக்கும் அரசியல் வெறுப்பேற்றுகிறது!”

‘‘சின்ன வயசுலயே மத்தவங்க தொடாத ஒரு விஷயத்துல நுழையணும்னு ஆசை வந்திருச்சு. கூடைப்பந்து வித்தியாசமான விளையாட்டு. ஆனா, அப்பா அதையெல்லாம் அனுமதிக்கமாட்டார். அவருக்கு, அவரைப் போலவே படிச்சு அதிகாரியாகணும். ஆனா, என் கனவு வேறுமாதிரி... சீனியர்ஸ் விளையாடும்போது, முள்வேலிக்கு வெளியில நின்னு அவங்க என்னவெல்லாம் செய்றாங்கன்னு பார்ப்பேன். மதியம் அவங்க மைதானத்தை விட்டுப் போனபிறகு, அவங்க எப்படியெல்லாம் விளையாண்டாங்களோ அதையெல்லாம் செஞ்சு பார்ப்பேன். 10-ம் வகுப்பு படிக்கும்போதே தமிழ்நாட்டு அணியில இடம் கிடைச்சிடுச்சு. அதுவரைக்கும் யார் கிட்டயும் பயிற்சி எடுத்துக்கலே. தமிழ்நாட்டு அணிக்குத் தேர்வானதும் ‘இந்து’ நாளிதழ்ல செய்தி வந்துச்சு. அப்பாவோட நண்பர்கள் பாத்துட்டு அவர்கிட்ட வாழ்த்து சொல்லியிருக்காங்க. ‘என் பையனுக்கும் ஸ்போர்ட்ஸுக்கும் சம்பந்தமே இல்லப்பா... அது அவன் இல்லே'ன்னு சொல்லியிருக்கார். இனிஷியலெல்லாம் செக் பண்ணிச் சொன்னபிறகுதான் நம்பியிருக்கார். அதுக்கப்புறம் அவர் என்னை ரொம்பவே உற்சாகப்படுத்தினார்.

 “விளையாட்டில் இருக்கும் அரசியல் வெறுப்பேற்றுகிறது!”

பத்தாம் வகுப்புக்கு அப்புறம் அப்பாகிட்ட இருந்து படிப்புக்குன்னு ஒரு ரூபாய்கூட வாங்கினதில்லை. என் ஸ்போர்ட்ஸை வச்சு நிறைய பேர் உதவி செஞ்சாங்க. பிளஸ் டூ படிக்கும்போது தமிழ்நாட்டு டீம் கேப்டனாகிட்டேன். இந்திய ஜூனியர் டீமுக்கும் போயிட்டேன். லயோலாவுல இலவசமா அட்மிஷன் கிடைச்சுச்சு. ரெண்டாவது வருஷமே கேரள போலீஸ், ரயில்வே, கஸ்டம்ஸ்னு 6 அரசு நிறுவனங்கள்ல வேலைக்குக் கூப்பிட்டாங்க. படிப்பை முடிச்சுட்டு ரயில்வேல இணைஞ்சேன். என் கேப்டன்சியில மூணு முறை நேஷனல் விளையாடி தமிழக அணி தங்கம் வாங்குச்சு...’’ - நிதானமாகப் பேசுகிறார் புருஷோத்தமன்.

வெகுவிரைவிலேயே இந்தியாவுக்கான 24 பேர் கொண்ட அணிக்குத் தேர்வானார் புருஷோத்தமன். அங்கு, விளையாட்டு அரசியல் அவர் வாழ்க்கையோடு விளையாடியது.

 “விளையாட்டில் இருக்கும் அரசியல் வெறுப்பேற்றுகிறது!”

‘‘செலக்‌ஷன்ல 24 பேரை விளையாடவிட்டு களத்துக்குப்போற 12 பேரையும் சப்ஸ்டிட்யூட்டுக்கு 4 பேரையும் தேர்வு செய்வாங்க. எல்லோரும் பத்து நிமிடத்துல ரெண்டோ மூணோதான் பேஸ்கட் பண்ணினாங்க. நான் 8 முறை பேஸ்கட் பண்ணினேன். தேர்வுப்பட்டியல்ல முதல் மூன்று இடத்துல என் பேர் வரணும். 24 பேர்ல நிறைய தகுதியில்லாத ஆட்கள் இருந்தாங்க. அடிப்படை விஷயங்கள்கூடத் தெரியலே. இது எனக்கு ரொம்பவே ஆச்சர்யமா இருந்துச்சு. இரவு டின்னர்ல இதை வெளிப்படையாப் பேசினேன். மறுநாள் செலக்‌ஷன் லிஸ்ட்ல என் பெயர் இல்லை. ‘ஏன் வரலே’ன்னு கேட்டேன். ‘நீங்க செலக்‌ஷன் கமிட்டியைத் தப்பாப் பேசிட்டீங்க... உங்கமேல ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கோம்'னு சொன்னாங்க. வெறுத்துப் போச்சு எனக்கு. இனிமே இங்கே இருக்கிறது வீண்ணு புரிஞ்சுது. அந்தச் சூழல்ல, துபாய் எமிரேட்ஸ் கிளப்ல இருந்து கூப்பிட்டாங்க. கிளம்பிட்டேன். திருமணமாச்சு. மனைவியும் கூடைப்பந்துலயே இருந்தது வசதியா இருந்துச்சு. அதுக்கப்புறம் இங்கே வந்து ரெண்டு பேரும் சேர்ந்து நிறைய வேலைகள் செய்ய ஆரம்பிச்சோம்.’’ மனைவியைப் பார்த்துப் புன்னகைக்கிறார் புருஷோத்தமன்.

30 வயதுக்கு மேலிருக்கும் முதல்நிலை வீரர்கள் விளையாடும் மாஸ்டர்ஸ் கூடைப்பந்து அணியின் கேப்டனாக இரண்டாவது சுற்றைத் தொடங்கினார் புருஷோத்தமன். 2019, டிசம்பரில் நடந்த உலக மாஸ்டர்ஸ் கேமில் ஹங்கேரியை வீழ்த்தித் தங்கம் வென்று திரும்பியது இந்திய அணி. இதுவரை இந்திய அணி எட்டாத உயரம் இது. 2022-ல் ஜப்பானில் நடக்கவுள்ள மாஸ்டர்ஸ் போட்டிக்குத் தயாராகிவருகிறது, புருஷோத் தலைமையிலான டீம்.

இந்தியாவில் உள்ள மூத்த ஒலிம்பியன்கள், உலகப்போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் இணைந்து கேலோ மாஸ்டர்ஸ் அசோசியேஷன் என்ற அமைப்பைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த அமைப்பில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள்.

 “விளையாட்டில் இருக்கும் அரசியல் வெறுப்பேற்றுகிறது!”
 “விளையாட்டில் இருக்கும் அரசியல் வெறுப்பேற்றுகிறது!”

‘‘உலகத்திலேயே மிகத்திறனுள்ள விளையாட்டு வீரர்கள் தமிழகத்துல இருக்காங்க. ஆனா, பல பேர் ஊரைத்தாண்டி வெளியிலயே வர்றதில்லை. காரணம், விளையாட்டுக்குள்ள இருக்கிற அரசியல். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சம்பிரதாயமா இயங்கிக்கிட்டிருக்கு. அனிதான்னு ஒரு கூடைப்பந்து வீராங்கனை, ஒலிம்பிக் வரைக்கும் போனவர்... பத்மஸ்ரீ விருது வாங்கினவர். 18 வருஷம் இந்தியாவுக்காக விளையாடினவர். 9 ஆசியப்போட்டிகள்ல விளையாடியவர். 6 வருஷம் அணிக்கு கேப்டனா இருந்திருக்கார். பத்மஸ்ரீ வாங்கினதுக்காக டெல்லி, கர்நாடகா, உ.பி-ன்னு எல்லா மாநிலங்களுக்கும் கூப்பிட்டுப் பாராட்டுறாங்க. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒரு வாட்ஸப் வாழ்த்துகூடச் சொல்லலே. இந்த நிலைமை மாறணும். இப்போ இருக்கிற தமிழக அரசு ஆக்கபூர்வமா இயங்குது. நம்பிக்கை வருது. நாங்க பெரிய இலக்கோட கேலோ மாஸ்டர்ஸ் அசோசியேஷனைத் தொடங்கியிருக்கோம். கூடைப்பந்து மட்டுமல்ல, மொத்தமிருக்கிற 30க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்ல ஆர்வமிருக்கிற பிள்ளைகளைத் தேர்ந்தெடுத்து எங்ககிட்ட கொடுங்க... அடுத்த அஞ்சு வருஷத்துல ஒலிம்பிக் போட்டிக்கு 30 பேரை நாங்க தர்றோம்.’’

உறுதியாகச் சொல்கிறார் புருஷோத்தமன்.