2023ம் ஆண்டிற்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடைபெறும் என்று கூறப்பட்டு வந்தது. இதையடுத்து இந்திய அரசு அனுமதி கொடுத்தால் தான் இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா? அல்லது ஆசியக் கோப்பை போட்டி வேறு நாட்டில் நடக்குமா? என்ற கேள்விகள் எழுந்தன. தற்போது, இந்த சந்தேகங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசியுள்ளார் பிசிசிஐ செயலாளரர் ஜெய்ஷா.

இது குறித்து ஜெய்ஷா, ``ஆசியக் கோப்பை போட்டி பொதுவான இடத்தில் நடைபெறுவது வழக்கமான ஒன்று. அந்தவகையில் நாங்கள் பாகிஸ்தானுக்குப் பயணம் செய்ய மாட்டோம் என்று முடிவு செய்துள்ளோம். பாகிஸ்தானுக்குச் செல்லும் எங்கள் அணியின் அனுமதியை அரசாங்கம் தீர்மானிக்கிறது, எனவே நாங்கள் அதைப் பற்றி கருத்துத் தெரிவிக்க மாட்டோம். ஆனால் 2023 ஆசியக் கோப்பை போட்டி நடுநிலையான இடத்தில் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். 2025 ஆம் ஆண்டில் ஐசிசியின் சாம்பியன்ஸ் டிராபி தொடரும் பாகிஸ்தானில் வைத்தே நடைபெறவுள்ளது.