Published:Updated:

`பனம் பழமே வாலிபால்; தென்னை மரமே போஸ்ட்!'- `கல்லம்பட்டி கருஞ்சிறுத்தை'யை நினைவுகூர்ந்த வீரர்கள்

ஒருமுறை மதுரை மெஜிரா கோர்ட்ஸ்ஸில் இவரது விளையாட்டைப் பார்த்த கைப்பந்தாட்ட ஆர்வலர் நெல்லை மாடசாமி, தென்னக ரயில்வே வாலிபால் அணிக்கு அவரை அழைத்துச் சென்றார்.

மதுரை மேலூர் கல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், ஏ.பழனிச்சாமி. பல்வேறு நாடுகளுக்குச் சென்று விளையாடிய இந்த வாலிபால் வீரரின் நினைவு தினத்தில் அகாடமி ஒன்றைத் திறந்து நினைவுகூர்ந்துள்ளனர் அவரின் குடும்பத்தினர்.

பழனிச்சாமி நண்பர்களுடன்
பழனிச்சாமி நண்பர்களுடன்

பழனிச்சாமிக்கு சிறுவயதிலேயே கைப்பந்து விளையாட்டு மீது ஆர்வம் ஏற்பட்டதால் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று வாலிபால் விளையாடி வந்தார்.

பொருளாதார சூழ்நிலை காரணமாக பனம் பழங்களை பந்தாகவும் தென்னை மரங்களை வாலிபால் போஸ்டாகவும் மாற்றி விளையாடி பயிற்சி எடுத்தவர். இப்படி கிராமத்து வீரராக விளையாடிய இவருக்கு பல்வேறு இடங்களில் விளையாட வாய்ப்புகள் வந்தன. ஒருமுறை மதுரை மெஜிரா கோர்ட்ஸ்ஸில் இவரது விளையாட்டைப் பார்த்த கைப்பந்தாட்ட ஆர்வலர் நெல்லை மாடசாமி, தென்னக ரயில்வே வாலிபால் அணிக்கு அவரை அழைத்துச் சென்றார்.

தொடர்ந்து மாநில அளவில் போட்டிகளில் பங்கேற்று தென்னக ரயில்வே அணிக்குப் பல வெற்றிகளைத் தேடித்தந்தார் பழனிசாமி. அங்கிருந்து தேசிய அளவிலான வாலிபால் போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினார். 1961-ம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற ஏசியன் விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தை வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தார்.

நினைவஞ்சலி
நினைவஞ்சலி
நந்தகுமார்

அவரின் வேகத்தையும் ஆட்டத்தையும் பார்த்த அந்நாட்டு வாலிபால் கழகத்தினர், அவருக்கு (பிளாக் பேந்தர்) கருஞ்சிறுத்தை என்ற பட்டத்தை வழங்கி பெருமைப்படுத்தினர். இந்திய அணிக்குப் பெருமையைத் தேடித்தரும் வகையில் விளையாடிய பழனிச்சாமிக்கு உயரிய விருதான அர்ஜுனா விருது, 1961-ம் ஆண்டு வழங்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாலிபால் விளையாட்டு வீரர்களின் கனவு நாயகனாகத் திகழ்ந்த பழனிசாமி, கடந்த 2007-ல் மறைந்தார். அவரது நினைவைப் போற்றும்வகையில், `பழனிச்சாமி வாலிபால் அகாடமி' ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

பழனிச்சாமியின் மகன் சரவணனிடம் பேசினோம். ``வாலிபால் வீரராக அப்பா இருந்ததால், எனக்கும் அந்த விளையாட்டின் மீது அதிக ஆர்வம் வந்தது. சிறுவயதிலிருந்து விளையாடிய நான் கல்லூரிக் காலத்தில் தேசிய அளவிலான போட்டியில் விளையாடியுள்ளேன்.

பழனிச்சாமி வாலிபால் அகாடமி மாணவர்கள்
பழனிச்சாமி வாலிபால் அகாடமி மாணவர்கள்

தற்போது, தமிழ்நாடு காவல்துறையில் சிறப்புப் பிரிவு ஒன்றில் எஸ்.ஐ-யாக உள்ளேன். இந்தநிலையில், அப்பாவின் புகழை போற்றுவிதமாகவும் வாலிபால் விளையாட்டை மேம்படுத்தும் நோக்கத்திலும் வாலிபால் அகாடமி தொடங்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.

நேற்று முன்தினம் அவரது நினைவு தினத்தில் அதை தொடங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. முதல் கட்டமாக பள்ளிகளுக்கு இடையே சிறப்பாக விளையாடும் 40 மாணவர்களைத் தேர்வு செய்துள்ளோம். அவர்களுக்கு வாலிபால் விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகப்படுத்த ஜெர்சி, சாட்ஸ், வாலிபால் ஷூ மற்றும் உபகரணங்களை வழங்கினோம். வாலிபால் ஆட்டத்தில் புதிய சாதனைகளைப் படைக்கும் வகையில் இந்த மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க உள்ளோம்” என்றார் நெகிழ்ச்சியுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு