`கிறிஸ்டியானோ ரொனால்டோ’ இந்தப்பெயர் கால்பந்து ரசிகர்களின் ஆதர்சமான பெயர். `ரொனால்டோவிடம் ஒரு ஆட்டோகிராப் வாங்கிவிட மாட்டோமா? ஒரு செல்ஃபி கிடைக்காதா? அட தூரத்திலிருந்து இருந்து அவரை நேரில் பார்த்துவிட மாட்டோமா?' என ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். ரசிகர்கள் கூட்டம் அவரை தேடிச் சுற்றிக்கொண்டிருக்க, அவரோ 3 பெண்களைத் தேடிக்கொண்டிருக்கிறார். ரொனால்டோவுக்குத்தான் காதலி இருக்கிறாரே, அவர் இன்னும் யாரைத் தேடிக்கொண்டிருக்கிறார் என்கிறீர்களா?. போர்ச்சுகல் வீதியில் ரொனால்டோ பசியோடு சுற்றிய நாள்களில் பர்கர் கொடுத்துப் பசியாற்றிய பெண்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறார் என்பது சமீபத்தில் அவர் பங்கேற்ற ஒரு நேர்காணல் மூலம் தெரியவந்துள்ளது.
நீங்கள் பார்க்கும் ரொனால்டோ இந்த உயரத்துக்கு அவ்வளவு எளிதில் வந்துவிடவில்லை. போர்ச்சுகல் வீதியில் பல கனவுகளோடு சுற்றித்திரிந்த சாதாரண இளைஞர்தான் ரொனால்டோ. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தனது கடும் உழைப்பின் மூலம் இந்த உயரத்தை அடைந்துள்ளார். அந்த நாள்களை ரொனால்டோ நேர்காணலில் மெல்ல அசைபோட்டார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``எனக்கு அப்போது 12 வயதாக இருக்கும். என் குடும்பம் ஏழ்மையான நிலையிலிருந்தது இருந்தது. நான் மிகச் சிறிய வீட்டில் வசித்து வந்தேன். அது கொஞ்சம் கடினமான காலம்தான். இரவு 10 மணிக்கு மேல் இருக்கும். நாங்கள் அனைவரும் பசியோடு இருந்தோம். அந்த குடியிருப்புக்குப் பக்கத்தில் சிறிய மெக்டொனால்ட் கடை இருந்தது. இரவில் அந்தக் கடையில் பின்பக்க கதவைத் தட்டி ஹே... எதாவது பர்கர் மிச்சம் இருக்கா என்று கேட்டேன். 3 பெண்கள் அங்கு இருந்தார்கள். அவர்கள் அற்புதமானவர்கள். அதற்குப் பின்பு அந்த பெண்களை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் எங்கிருந்தாலும் சரி, நான் வசிக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று விருந்து வைக்க வேண்டும்.
நான் போர்ச்சுகலில் பல இடங்களில் அந்தப்பெண்களைத் தேடினேன். அந்த மெக்டொனால்ட் கடையிலும் விசாரித்தேன் ஆனால், எந்த விவரமும் கிடைக்கவில்லை. இந்த நேர்காணல் அந்தப்பெண்களைக் கண்டுபிடிக்க உதவினால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். இந்த தலைமுறைக்கு எல்லாம் எளிதாகக் கிடைத்து விடுகிறது. அவர்களுக்கு கம்யூட்டர் கிடைத்து இருக்கிறது.
இந்த தலைமுறை பெரிதாக எதையும் தியாகம் செய்யவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. நான் வசித்த இடத்துக்கு எனது மகனை அழைத்துச் சென்றேன். நான் வசித்த அறையைக் காண்பித்தேன். நான் இங்கு தான் இருந்தேன் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. `நீங்கள் இங்கேயா இருந்தீங்கன்'னு ஆச்சரியத்தோடு கேட்டான் என உணர்ச்சிகரமாகப் பேசியுள்ளார்.
இந்தநிலையில் சிறுவயதில் ரொனால்டோவுக்கு உதவிய பெண்களில் ஒருவரை போர்ச்சுக்கல் வானொலி நிலையம் ஒன்று கண்டுபிடித்திருக்கிறது. அவரது பெயர் எட்னா என்பது தெரியவந்திருக்கிறது.